ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்குள்ள தேவரின திருவுருவ சிலைக்கு 2014 இல் அதிமுக சார்பில் 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை ஜெயலலிதா வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் ஜெயந்தி விழாவின்போது தேவரின் சிலைக்கு தங்க கவசம் அணவிக்கப்படும்.
மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பாதுகாக்கப்படும் இந்த தங்கக் கவசத்தை கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு வாங்கி, நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பது வழக்கம்.
தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி, அக்கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் உள்ளனர்.
இந்நிலையில், மதுரை வங்கி லாக்கரில் உள்ள பசும்பொன் தேவர் சிலை தங்க கவசத்துக்கு உரிமை கோரி அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஓ.பி.எஸ் தரப்பில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வம் தான் உள்ளார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இதுபற்றிய விசாரணை நிலுவையில் உள்ளது. எனவே தேவர் கவசத்தை வேறு யாரிடமும் வழங்க கூடாது, என வாதிடப்பட்டது.
தொடர்ந்து அதிமுக சார்பில், ’தற்போது அதிமுக கட்சி பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி மற்றும் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் உள்ளனர். வங்கியில் இருக்கும் கவசத்தை அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவாலயம் நிர்வாகிகள் இணைந்து தான் எடுக்க முடியும். திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக பொருளாளர் என அதிமுக கட்சி சம்பத்தப்பட்ட வங்கி கணக்குகளில் மாற்றப்பட்டுள்ளது, என வாதிடப்பட்டது.
அதற்கு ஓபிஎஸ் தரப்பில், ’தற்போது வரை ஒரு சில ஆவணங்களில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் உள்ளது. இக்கட்டான நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுடன் இருந்ததார். ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராக இருந்ததால் அவருக்கு அப்பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா நினைத்திருந்தால் வேறு பொறுப்புகளில் இருப்பவரை இந்த பணிக்கு நியமித்திருக்கலாம், என்று வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தேவர் தங்க கவசம் இருக்கும் பாதுகாப்பு பெட்டகத்தை தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இணைந்து வங்கியில் எடுக்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil