முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மலர் தூவி, மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன். தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அதேபோல் மதுரை, திருச்சி உட்பட பல்வேறு இடங்களில் தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பிரேமலதா பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கிறது. ஜனவரி மாதம் நாங்கள் செயற்குழு, பொதுக்குழு கூட்ட இருக்கிறோம். அது முடிந்த பிறகு யாருடன் கூட்டணி, எந்த தொகுதி, எத்தனை வேட்பாளர்கள் என்பது அதிகாரப்பூர்வமாக கேப்டன் அறிவிப்பார்கள், என்றார்.
கேப்டன் உடல்நிலை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதலளித்த அவர், கேப்டன் நலமாக இருக்கிறார். இப்போது முக்கியமான தருணங்களில் சென்னை கட்சி அலுவலகத்துக்கு கேப்டன் வந்து செல்கிறார். அதேபோல் மாநாடு, பொதுக்குழு, செயற்குழுவிலும் நிச்சயம் பங்கேற்பார்.
அடுத்த வருடம் உங்கள் அனைவரின் பிரார்த்தனைக்கு இணங்க மதுரை வந்து அனைவரையும் சந்திப்பார்.
தமிழகம் முழுவதும் ஏற்கெனவே பூத் முகவர்கள் அமைக்கப்பட்டு தேமுதிக தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளது. உட்கட்சி தேர்தல் முடிந்துள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் பூத் கிளைகள் இருக்கின்ற மாபெரும் கட்சியாக தேமுதிக இருக்கிறது. அங்கீரிக்கப்பட்ட கட்சியிலும் உள்ளது.
இந்தமுறை எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம், என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“