thevar jayanthi madurai: முத்துராமலிங்க தேவரின் 112 வது ஜெயந்தி மற்றும் 57 வது குருபூஜை விழா இன்று தமிழகத்தில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை, தூத்துக்குடி, சென்னை என தேவர் சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
முத்துராமலிங்க தேவரின் 112 வது ஜெயந்தி மற்றும் 57 வது குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் காலை முதலே பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். மதுரை முழுக்கவும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் வெண்கல சிலைக்கு இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரசியல் தலைவர்களின் வருகையையொட்டி மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். முதல்வரை தொடர்ந்து தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் துணை பொது செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
'பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் அவர்களின் 112வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, கழக தலைவர் @mkstalin அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்’#ThevarJayanthi #தேவர்ஜெயந்தி pic.twitter.com/AmyEGVOTK5
— DMK (@arivalayam) October 30, 2019
இதே போல் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவரைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஹெச்.ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதே போல் சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி, குரு பூஜை விழாவின் போது தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.