Advertisment

'தின பூமி' உரிமையாளர் மணிமாறன் மரணம்: செய்தி ஆசிரியர் மறைவுக்கு துக்கம் விசாரித்து விட்டு வந்தபோது விபத்து

தினபூமி நாளிதழ் நிறுவனர் மணிமாறன் சாலை விபத்தில் மரணம்: உடல் நலக் குறைவால் உயிரிழந்த நாளிதழின் முன்னாள் ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது நிகழ்ந்த சோகம்

author-image
WebDesk
New Update
Thinaboomi manimaran

தினபூமி நிறுவனர் மணிமாறன் மற்றும் ஆசிரியர் திருநாவுக்கரசு

மதுரை கே.கே நகரை சேர்ந்தவர் கே.ஏ.எஸ் மணிமாறன் (66). லாட்டரி மூலம் பிரபலமான மறைந்த கே.ஏ.எஸ் சேகர் என்பவரின் உடன் பிறந்த தம்பி ஆவார். லாட்டரி ரிசல்ட் வெளியிடுவதற்காக அதிர்ஷ்டம் என்ற பத்திரிகையை ஆரம்பித்த மணிமாறன், பின்னர் தினபூமி என்ற நாளிதழை மும்பை உள்பட மதுரை, திருச்சி, சென்னை என தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தமது பதிப்புகளை தொடங்கினார். 

Advertisment

இந்நிலையில், மணிமாறன் மற்றும் அவரது மகன் ரமேஷ் ஆகியோர் தங்களது காரில் நாகர்கோயில் தோவாளை சென்றுவிட்டு மதுரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் கார் வந்து கொண்டிருக்கும்போது ஓட்டுநர் ரமேஷ் குமாரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி, எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது அசுர வேகத்தில் மோதியது. 

இதில் காரில் பயணம் செய்த தினபூமி பத்திரிகை நிறுவனரும், உரிமையாளருமான மணிமாறன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். காரை ஒட்டி வந்த அவரது மகன் ரமேஷ்குமார் தலையில் படுகாயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓட்டுநரான மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூரைச் சோ்ந்த அசோக்குமார் (28) என்பவர் சிறு காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, தினபூமி பத்திரிகையில் செய்தி ஆசிரியராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வு பெற்ற திருநாவுக்கரசு என்பவர் உடல்நலம் சரியில்லாமல் நேற்று அதிகாலை தோவாளையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். தோவாளையில் நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி விட்டு, மதுரைக்கு தனது மூத்த மகன் ரமேஷ் குமாருடன் காரில் திரும்பிக் கொண்டிருந்த மணிமாறன் கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் பலியானது தினபூமி குழும ஊழியர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தினபூமி நிறுவனரும் உரிமையாளருமான மணிமாறனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மதுரை கே.கே நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று நண்பகல் வைக்கப்படும். மதுரை கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து செய்தி வெளியிட்டவர் மணிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், சாலை விபத்தில் உயிரிழந்த தினபூமி நாளிதழின் உரிமையாளர் மணிமாறன் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, ”தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தினபூமி நாளிதழின் உரிமையாளர் திரு.மணிமாறன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், தினபூமி பணியாளர்கள், பத்திரிகைத் துறையைச் சேர்ந்த தோழர்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்த வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; ”தின பூமி நிறுவனர் சாலை விபத்தில் பலியானது செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அண்ணாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் பத்திரிக்கை ஊழியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காரில் பயணித்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது மகன் ரமேஷ் குமார் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தினபூமி ஆசிரியரும் நிறுவனரும் ஒரே நாளில் மறைந்த சோகத்திற்கு தமிழகத்தில் உள்ள பத்திரிகையாளர் அமைப்புகளும், சங்கங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Madurai Road Accident
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment