சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு இந்த மரணம், கொலை வழக்காக மாற்றப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிடுமாறு உத்தரவிடுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் பாதிக்கப்பட்ட அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். அப்போது முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அஜித் குமார் தாய் மற்றும் சகோதரர் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து இன்று (ஜூலை 02) அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது: அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தி.மு.க., சார்பில் முதற்கட்டமாக ரூ.5 லட்சம் வழங்கி உள்ளோம். அண்ணா பல்கலைக்கழக வழக்கில் விரைந்து விசாரித்து ஞானசேகரனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது போல இளைஞர் அஜித்குமாரின் வழக்கிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும், என்று கூறினார்.
அஜித் குமார் மரணம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் அஜித் குமார் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் இன்று அஜித் குமார் இல்லத்துக்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பாக ஒரு லட்சம் ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/02/whatsapp-image-2025-2025-07-02-15-28-47.jpeg)
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் ஆகியோரும் அஜித்குமார் வீட்டிற்கு வருகை தந்து ஆறுதல் கூறினர்.
அதேபோல ஆறுதல் கூற வந்த இடத்தில் பாமக திலகபாமா, திமுக தமிழரசி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அஜித்குமார் இல்லத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. வீடியோ: புதிய தலைமுறை
எடப்பாடி பழனிச்சாமி அஜித்குமார் தாயிடம் செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.