வள்ளலாரை சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என்று கூறிய கருத்திற்கு பதிலளிக்கும் விதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசியிருக்கிறார்.
அவர் கூறியுள்ளதாவது, "தமிழர் தலைவர் பெரியாரால் அடையாளம் காணப்பட்டதால் இன்றைக்கு, இந்த சமூக நீதி அரசியல் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது.
பேரறிஞர் அண்ணா, பெரியாருடன் முரண்பட்டு விலகிப்போன நேரத்தில், தமிழர் தலைவரும் ஒருவேளை விலகியிருந்தால் திராவிட கழகத்தின் நிலை என்ன என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதிருக்கிறது.
ஒருபுறம் நமக்கு கலைஞர் ஒரு பெரிய பாதுகாப்பு அரணாக அரசியல் களத்தில் இருந்தாலும் கூட, அரசியல் களத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில ஒரு பேரரனாக இருப்பவர் தமிழர் தலைவர் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
தர்மபுரியில் ஒரு ஆணவ படுகொலை நிகழ்ந்தது, அந்த சம்பவத்தை எப்படி அணுகுவது என்று எல்லோரும் தயங்கி நின்ற நேரத்தில், உடனே அந்த இடத்தில் சாதி ஒழிப்பு மாநாட்டை நிகழ்த்தி, தர்மபுரியில் பல்லாயிரக்கணக்கான கரும் சிவப்புகளை திரட்டி, அம்மாநாட்டில் திருமாவளவன் பேசுவார் என்று கூறினார்.
இன்றைக்கு, 'சனாதனத்தின் உச்சம் தான் வள்ளலார்' என்று இங்கே ஒரு அரைவேற்காடு உளறிக்கொண்டு இருக்கிறது.
வள்ளலார், ஆன்மீக தளத்தில் அவர் ஒரு தந்தை பெரியார்; சனாதன எதிர்ப்பாளர் ஆவார்; பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளர்; சாதிய கட்டமைப்பை முற்றாக எதிர்த்தவர்; கடவுள் நம்பிக்கையை கூட எதிர்த்தவர், விக்ராஹ நம்பிக்கையில் அவருக்கு உடன்பாடு கிடையாது; வள்ளலாருடைய கொள்கைகளை நாம் உயர்த்தி பிடிக்கின்ற அளவிற்கு மிகவும் சிறப்பாக சிந்தித்த சிந்தனையாளர். அவரை சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என்று ஒருவர் உளறுகிறார்.
உடனே அந்த இடத்தில், சனாதன எதிர்ப்பு மாநாடு என்று தமிழர் தலைவர் ஜூலை 7ஆம் தேதி அறிவித்திருக்கிறார்.
ஒவ்வொரு முறையும் சமூக நீதிக்கு ஆபத்து வருகிற நேரத்தில், விழிப்பாக இருந்து நம்மை தட்டி எழுப்பி கழகத்திற்கு இழுக்கக்கூடியவர் தாய்மை குணமுடையவர் தமிழர் தலைவராவார்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும், உள்ளதை எப்போதும் தெளிவாகவும் திடமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு இன்றைக்கு வாழும் அரசியலில் இவரை விட்டால் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம்", என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil