விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து தொடர்ந்து தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார். 2019-ல் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வி.சி.க-வைச் சேர்ந்த ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் வி.சி.க 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. வி.சி.க தொடர்ந்து, தி.மு.க-வுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
தமிழகத்தில் சில இடங்களில் வி.சி.க கொடிக் கம்பம் நடுவதற்கு எதிர்ப்புகள் எழுந்தபோது, காவல்துறையினர் வி.சி.க மீது தடியடி நடத்தியபோது, காவல்துறையில் உள்ள சாதியவாதிகள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று தோழமையாக சுட்டுவதாக திருமாவளவன் கூறினார். ஆனால், ஃபாசிச பா.ஜ.க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், தமிழ்நாடு காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அமித்ஷா கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று தெளிவுபடுத்த வேண்டும் என்று பேசியது தோழமைச் சுட்டலைத் தாண்டிய விமர்சனமாகவே பார்க்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, சாதியவாத பா.ம.க-வும் மதவாத பா.ஜ.க-வும் இடம்பெறும் கூட்டணியில் வி.சி.க இருக்காது என்று திருமாவளவன் உறுதியாகக் கூறினார். திருமாவளவனின் இந்த பேச்சு தி.மு.க கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
தி.மு.க கூட்டணியில் விமர்சனங்களை வைப்பது திருமாவளவன் மட்டுமல்ல, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.
2021 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சட்டமன்றத்தில் வேல்முருகன் தி.மு.க-வாக இருந்தாலும் அவ்வப்போது, தி.மு.க-வை விமர்சிக்கத் தவறியதில்லை.
அண்மையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிரான 200-வது நாள் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பங்கேற்றார். அப்போது வேல்முருகன், சட்டசபை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் தவறி வருகிறார் குற்றம் சாட்டினார். தி.மு.க அரசு இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறது. அ.தி.மு.க- தி.மு.க இரண்டுக்கும் வேறுபாடு இல்லை எனவும் விமர்சித்திருந்தார்.
அதுமட்டுமல்ல, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய முடியாது என கூறினார் வேல்முருகன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன்
அதே போல, ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தபோது, கூட்டணி கட்சிகளின் பெயர்களைக் குறிப்பிடும்போது, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பெயரைக் குறிப்பிடவில்லை.
இப்படி, வி.சி.க தலைவர் திருமாவளவனும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் தி.மு.க அரசை விமர்சிப்பதற்கு காரணம் பா.ம.க தி.மு.க கூட்டணியை நோக்கி நகர்வதுதான் காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
மேலும், “தமிழக அரசே கவன குறைவாக இருக்காதே! காவல்துறையே மெத்தனமாக இருக்காதே!
தமிழ்நாட்டை வன்முறைக் காடாக்குவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்! வன்முறையைத் தூண்டுகிறார்கள்! இந்நேரம் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா? தமிழ்நாடு காவல்துறை பா.ஜ.க-வின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது” என்று பா.ஜ.க-வை விமர்சித்துப் பேசிய அதே நேரத்தில், திருமாவளவன் தி.மு.க அரசையும் இடித்துரைத்து விமர்சித்துப் பேசினார்.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
ஃபாசிச பா.ஜ.க கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், ஒரு பக்கம் சீமானின் தூய்மைவாத இன தமிழ்த்தேசியத்தை மறைமுகமாக சாடினார். அதே நேரத்தில், தமிழ் நம் அடையாளமாக இருக்கக் கூடாது. ஜனநாயகம்தான் நம் அடையாளமாக இருக்க வேண்டும் என்று பேசினார். பா.ம.க-வும் பா.ஜ.க-வும் இருக்கும் கூட்டணியில் வி.சி.க இருக்காது என்று உறுதியாகக் கூறியது அரசியல் நோக்கர்களின் கருத்துகளை உறுதி செய்வதாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”