தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர்.என். ரவி அந்த பதவியில் நீடிக்கத் தகுதியில்லை என்றும் அவரை பதவி விலக வலியுறுத்தியும் வி.சி.க சார்பில் ஜனவரி 13-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் இன்று (ஜனவரி 9) தொடங்கியது. ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசித்தபோது, அரசு அளித்த ஆளுநர் உரையை வாசிக்கும்போது, அதில் திராவிட மாடல், அமைதிப் பூங்க, அம்பேத்கர் பெயர் அடங்கிய பகுதியை படிக்காமல் தவிர்த்துவிட்டு வாசித்தார். இதற்கு தி.மு.க கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். மேலும், அரசால் ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆளுநர் உரையை தவிர்த்துவிட்டு படித்த உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிட்டு அரசு அளித்த ஆளுநர் உரையை இடம்பெறச் செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து பேசிக்கொண்டிருந்தபோது ஆளுநர் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
அவை நடவடிக்கைகள் முடிந்த பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னரே ஆளுநர் அவையில் இருந்து வெளியே செல்வது மரபு என்ற நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி அதற்கு முன்னதாகவே வெளிநடப்பு செய்தது சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்.என். ரவி அரசு அளித்த உரையில் ஒரு பகுதியைத் தவிர்த்துவிட்டு படித்ததற்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவ்த்தனர். மேலும், ஆளுநர் வெளியேறும்போது ஆளுநருக்கு எதிராக தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டனர்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர்.என். ரவி அந்த பதவியில் நீடிக்கத் தகுதியில்லை என்றும் அவரை பதவி விலக வலியுறுத்தியும் வி.சி.க சார்பில் ஜனவரி 13-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி, சனாதனம், திருக்குறள், திராவிடம், தமிழ்நாடு குறித்து தெரிவித்து வரும் கருத்துகளுக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் தொடர்ந்து கண்டித்து வருகிறார். தற்போது, ஆளுநர் வெளிநடப்பு செய்ததைக் கண்டித்து வி.சி.க சார்பில் ஜனவரி 13-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவன் பதிவிட்டிருப்பதாவது: “ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்.எஸ்.எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும். அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. எனவே, அவர் பதவி விலக வலியுறுத்தி ஜனவரி 13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.
ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம்.
இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"