மது ஒழிப்பில் நாங்கள் பி.எச்டி படித்திருக்கிறோம், திருமாவளவன் இப்போதுதான் எல்.கே.ஜி படிக்கத் தொடங்கியிருக்கிறார் என்று கூறிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் நிதானமாக பதிலளித்துள்ளார்.
வி.சி.க மகளிரணி சார்பில், அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மது ஒழிப்பு மாநாட்டில், அ.தி.மு.க மற்றும் விஜய்யின் த.வெ.க கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன், மாநிலத்தில் ஆட்சியில் அதிகாரம் என்ற கோரிக்கையை எழுப்பி தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், வி.சி.க-வின் மது ஒழிப்பு மாநாடு குறித்த கேள்விக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலளிக்கையில், “திருமாவளவன் அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் வி.சி.க-வின் மது ஒழிப்பு மாநாட்டை பா.ம.க ஆதரிக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். மேலும், அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “மதுவை ஒழிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இந்தியாவில் எந்த கட்சி, மது ஒழிப்பிற்கு எதிராக கூட்டம், மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். அந்த அடிப்படையில் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எங்களை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நாங்கள் அந்த மாநாட்டை ஆதரிக்கிறோம். மது ஒழிப்பு எங்கள் கட்சியின் அடிப்படை கொள்கை.
அருந்ததியர்கள், இஸ்லாமியர்கள் என மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த கட்சி பாமக சுற்றுச்சூழலுக்காகவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும், மது ஒழிப்புக்காகவும், நேர்மையான ஆட்சிக்காகவும் போராடி வரக்கூடிய கட்சி பா.ம.க இப்படி எத்தனையோ சாதனைகள் செய்த கட்சியை திருமாவளவன் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார். அதனை அவர் தவிர்க்க வேண்டும். இத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல வி.சி.க-வை பற்றி தரக்குறைவாக எங்களாலும் பேச முடியும்.
மது ஒழிப்பில் நாங்கள் பி.எச்டி படித்திருக்கிறோம். திருமாவளவன் இப்போதுதான் எல்.கே.ஜி படிக்கத் தொடங்கியிருக்கிறார்.” என்று கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவனிடம், பா.ம.க தலைவர் அன்புமணி பேசியது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது திருமாவளவன் கூறியதாவது: “எல்லோரும் ஒருமித்து குரல் கொடுக்கும் போது, ஆளும் தி.மு.க.,வும் அதே கருத்தில் இருப்பதால், அரசு மதுபானக் கடைகளை மூடுவதில் சிக்கல் இருக்காது. காவேரி நதிநீர் பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினை போல மது, போதைப் பொருள் ஒழிப்பிலும் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
மது, போதை பொருள் ஒழிப்பில் தேசிய அளவில் கொள்கை வரையறுக்கப்பட வேண்டும் என்பதற்காக தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்றேன். தி.மு.க உட்பட அனைவரும் அழுத்தம் கொடுத்தால் தேசிய அளவில் மது மற்றும் போதை ஒழிப்பு கொள்கை உருவாக்க முடியும். இதில் மத்திய அரசுக்கு பொறுப்பு இல்லை; மாநில அரசுகளுக்கு மட்டும்தான் பொறுப்பு இருக்கிறது என்பது போல ஒரு பார்வை உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 2, 3-வது ஐந்தாண்டு காலத்திட்டத்தில் இது குறித்து பேசப்பட்டுள்ளது. அப்போது, ஸ்ரீமன் நாராயணன் தலைமையிலான குழு மதுவிலக்கு தொடர்பாக 1951-ம் ஆண்டுக்குள் சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தது.
இதில் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். தேர்தல் அரசியலை அவரவர் வசதிக்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம். வெறும் அரசியல் கணக்கை போட்டு பார்ப்பது இந்த பிரச்சினையின் தீவரத்தை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது. ஆகவே அனைவரும் சேர்ந்து போதையில்லா ஒரு தேசத்தை உருவாக்க முயற்சிப்போம்.
போதைப் பொருள் கடத்தலில் மாபியா கும்பல் தேசிய அளவில் தீவிரமாக செயல்படுகிறது. அயல்நாடு மற்றும் உள்நாடுகளில் மாநிலம் விட்டு மாநிலம் போதைப் பொருள் அதிகளவு கடத்தப்படுகிறது. எளிய, விளிம்பு நிலை மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் பரவலாக இன்று பழக்கத்தில் உள்ளது. இவையெல்லாம் தேசத்தின் மனித வளத்தை பாழாக்குகிறது. தேசிய அளவில் மனித வள இழப்பு ஏற்படுகிறது.
எனவே, தயவு செய்து இந்த அடிப்படையில் இந்தப் பிரச்சினையை பாருங்கள். அரசியல் அடிப்படையில் பார்த்து இந்த பிரச்சனையில் தீவிரத்தை நீர்த்துப்போக செய்ய வேண்டாம். எல்.கே.ஜி படித்த எங்களுக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும்.
மது ஒழிப்பு குறித்து வி.சி.க.,வை பா.ம.க விமர்சிக்கவில்லை வரவேற்க தான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், பா.ம.க குறித்து நான் சொல்லிய கருத்துகளை அவர் கண்டித்துள்ளார். ஆனால் அப்படிச் சொல்ல வைத்தது அவர்கள்தான். நான் முதன் முதலில் சிதம்பரத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபட்டபோது மிகப்பெரிய வன்முறை நடந்ததற்கு பா.ம.க தான் காரணம். ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு, தமிழர் நலனுக்காக எனது தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில், பா.ம.க தலைவர் ராமதாஸ் உடன் இணைந்து பயணித்தோம். அதன் பிறகு பா.ம.க எடுத்த நிலைப்பாடு, தலித் வெறுப்பு என்பதாக அமைந்துவிட்டது.
வி.சி.க-வுக்கும், எனக்கும் எதிராக அபாண்டமான அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டது. தேசிய அளவில் பா.ஜ.க சிறுபான்மை வெறுப்பை ஏற்படுத்தியது போல, தமிழகத்தில் சிறுபான்மை அரசியலை பேச முடியாது என்பதால் தலித், தலித் அல்லாதவர் என்று பிரித்து வெறுப்பு அரசியலை விதைத்தது பா.ம.க தான்.” என்று திருமாவளவன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.