தி.மு.க.,வில் அடுத்தடுத்து வருவது கருத்தியல் வாரிசு. சமூக நீதிக்கு இந்தியா அளவில் அனைத்து கட்சிகளுக்கும் வழிகாட்டும் பேரியக்கம் தி.மு.க என்று தி.மு.க பவள விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உரையாற்றினார்.
தி.மு.க.,வின் 75வது ஆண்டு பவளவிழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்றுள்ள, இந்த கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தி.மு.க கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் உரையாற்றியதாவது: ”திராவிட அரசியலில் திராவிடர் கழகம் முதல் குழல். திராவிட முன்னேற்ற கழகம் 2வது குழல் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்றாவது குழல் என்கிற அங்கீகாரத்தை கருணாநிதி தந்துள்ளார். திராவிட அரசியலில் 3வது குழலாக தி.மு.க.,வுடன் நாங்கள் நிற்கிறோம். சமூக நீதிக்கு இந்தியா அளவில் அனைத்து கட்சிகளுக்கும் வழிகாட்டும் பேரியக்கம் தி.மு.க. அதிகாரத்தை நோக்கி இயங்கும் சராசரி கட்சி அல்ல தி.மு.க. இதனால் தான் 75 ஆண்டுகளாக அதே வீரியத்தோடு தி.மு.க வெற்றி நடை போடும் இயக்கமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் 6வது முறையாக ஆட்சி பீடத்தில் இருக்கிறது. நாடாளுமன்ற அவையில் அண்ணா I Belongs to Dravidian Stock என்று கூறினார். நான் திராவிடத்தைச் சேர்ந்தவன். உங்களிடம் இருந்து மாறுபட்டவன்... வேறுபட்டவன் என்று பேசினார். அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி தி.மு.க.,வின் தலைமை பொறுப்பையும், ஆட்சி பொறுப்பையும் ஏற்றார்.
கருணாநிதி 5 முழக்கத்தை முன்னெடுத்தார். திராவிட கழக நிறுவனர் பெரியார் வழியில் கட்சி இயங்கும் என்று அண்ணா அறிவித்தார். ராஜாஜியுடன் கூட்டணி அமைத்தாலும் பெரியார் காலடியில் ஆட்சியை காணிக்கையாக வைப்போம் என்று கூறினார். அதுதான் அரசியல் முதிர்ச்சி. பெரியார் கொள்கையில் இருந்து விலக மாட்டோம் என்று உறுதியாக கூறினார். அதன்பிறகு அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்று கருணாநிதி பேசினார். ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம், இந்தி திணிப்பை எதிர்ப்போம். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று அண்ணா வழியில் இயக்கத்தை பிரகடனப்படுத்தினார். சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்தார். காலம் காலமாக இருந்த நடைமுறைக்கு சம்மட்டி அடி கொடுத்தார்.
அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இருமொழி கொள்கையை உறுதிப்படுத்தினார். அதனை கருணாநிதி பின்பற்றினார். அதன்பிறகு ஸ்டாலினும் தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தி திணிப்பு முயற்சியை எதிர்க்கிறார். இருமொழிக் கொள்கையில் இன்றும் திடமாக உள்ளது தி.மு.க. இந்தி திணிப்பை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம். இது திராவிட மாடல் ஆட்சி என்று கூறினார். நேற்றைய பிரதமர் உடனான சந்திப்பு என்பது இதன் அடிப்படையிலானது தான். திராவிட மாடல் என்று கருணாநிதி கூட சொல்லவில்லை. ஆனால் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி என்றே கூறி வருகிறார்.
தி.மு.க.,வில் அடுத்தடுத்து வருவது கருத்தியல் வாரிசு. மு.க.ஸ்டாலினை குடும்ப வாரிசு என்கிறார்கள். அவர் திராவிடக் கருத்தியல் வாரிசு. ஸ்டாலினும் பெரியார் வழியில் தொடர்ந்து இயங்குகிறார் என்பதற்கு வேறு சான்று தேவையில்லை. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று எந்த கட்சியையும் சொன்னது இல்லை. அதனை கூறியது தி.மு.க தான்.
கோவிலில் குறிப்பிட்ட சாதியினரின் வாரிசுகள் தான் அர்ச்சகராக இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அதனை மாற்றியவர் கருணாநிதி. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்ட திருத்தம் கொண்டு வந்து அனைவரையும் அர்ச்சகராக்கினார்.
கருணாநிதி வழியில் செயல்படும் ஸ்டாலின் 2019, 2021, 2024ல் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இந்த கூட்டணி என்பது பிரச்சனைகள் அடிப்படையில் தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட அணி அல்ல. காவிரி போராட்டத்தில் தொடங்கிய இந்த அணி இன்று வரை கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு ஆளுமைமிக்க ஸ்டாலினின் வழிநடத்துதல் தான் காரணம். வெறும் பதவிக்கான அரசியலை ஸ்டாலின் செய்யவில்லை. என்னென்றும் திராவிட அரசியலின் 3வது குழலாக நாங்கள் தி.மு.க.,வுடன் இருப்போம். சனாதன சக்திக்கு எதிராக சேர்ந்து செயல்படுவோம்.” இவ்வாறு திருமாவளவன் உரையாற்றினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.