/indian-express-tamil/media/media_files/2025/10/02/thirumavalavan-attack-vijay-tvk-dmk-underground-dealing-bjp-rss-support-press-meet-tamil-news-2025-10-02-14-41-01.jpg)
வி.சி.க தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
வி.சி.க தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கரூர் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் மற்றும் தேர்தல் மேலாண்மை பிரச்சார பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை? என்றும், தமிழ்நாடு அரசுக்கு என்ன அச்சம், தயக்கம்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று நண்பகல் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்ததாவது:-
கரூர் துயரத்தில் தமிழ்நாடு காவல்துறை காட்டும் மெத்தனம் உள்ளபடியே அதிர்ச்சி அளிக்கிறது. புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறதோ அந்த முகாந்திரம் விஜய் மீது இல்லையா? பிறகு ஏன் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. அதேபோல், திட்டம் வகுத்து கொடுத்த அருண்ராஜ் மீதும், ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜய் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை?
விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாததற்கு காரணம் என்ன? தி.மு.க - த.வெ.க இடையே மறைமுக டீலிங் உள்ளதா? விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்தது யார்? ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகம் என நம்பி விடுவார்கள் என விஜய் வீடியோவில் அவ்வாறு பேசியுள்ளார். மூன்று நாட்கள் சும்மா இருந்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் தலைமை சொன்னதும் வீடியோ வெளியிடுகிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் விஜய்யின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது.
விஜய்யை சுற்றி இருக்கும் அனைவரும் பா.ஜ.க பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள். தி.மு.க கூட்டணிக்கான சிறுபான்மையினரின் வாக்குகளை விஜய் மூலம் பிரிப்பதே பா.ஜ.க-வின் திட்டம். பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியில் கண்டிப்பாக விஜய்யை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். கரூர் துயர சம்பவத்தில் விஜய்யை காப்பாற்ற பா.ஜ.க முயற்சி செய்கிறது. விஜய் சுதந்திரமாக அரசியலுக்கு வரவில்லை, முழுக்க முழுக்க பா.ஜ.க தூண்டுதலே காரணம். விஜய்யின் கொள்கை எதிரியான பாஜகவே அவரை பாதுகாக்க முயற்சிக்கிறது.
பா.ஜ.க பாதுகாக்க முயல்வதன் மூலம் விஜய்யின் சாயம் வெளுத்துப் போய்விட்டது. அண்ணா ஹசாரே போன்று விஜய்யை பா.ஜ.க பயன்படுத்துகிறது. விஜய்யை பயன்படுத்தி அ.தி.மு.க-வை அழித்துவிட்டு அந்த இடத்திற்கு வர பா.ஜ.க முயல்கிறது. விஜய் ஆபத்தான அரசியலை கையிலெடுத்திருக்கிறார். வெறுப்பு அரசியலை பேசி வரும் விஜய்யால் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. குற்றவுணர்வே இல்லாமல் ஆட்சியாளர்கள் மீது விஜய் பழிபோட முயற்சிக்கிறார்.
தமிழ்நாடு அரசும் காவல்துறையும், விஜய் மீதும், ஆதவ் அர்ஜுனா மீதும் வழக்குப் பதிவு செய்ய அச்சப்படுகிறதா? அல்லது வலுத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதில்லை, இளைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது எனும் நடைமுறை கையாளப்படுகிறதா? சுமார் 15, 20 ஆண்டுகளுக்கு முன்பாக நான் நயினார்பாளையம் எனும் இடத்தில் பேசிக்கொண்டிருக்கிறேன். புதுச்சேரி அருகே ஒரு சம்பவம் நடக்கிறது. அந்தச் சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பும் கிடையாது, அது நடந்தது கூட அப்போது எனக்கு தெரியாது.
ஆனால், கட்சிக்காரர்கள் ஒரு சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள் என்றவுடன் அன்றைய விழுப்புரம் எஸ்.பி.யாக இருந்த ரவி என் மீதும் வழக்குப் பதிவு செய்தார். இப்படி எந்தத் தொடர்பும் இல்லாத நிலையிலும் என் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறையின் இந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல. எதற்காக அச்சப்படுகிறார்கள்? யாருக்காக அச்சப்படுகிறார்கள்.
எல்லோரும் சமம் என்று பார்க்கிறபோது அந்த கட்சியில் சம்மந்தப்பட்டவர்கள், காரணமானவர்கள், அலட்சியமாக இருந்தவர்கள், இந்த உயிரிழப்பிற்கு காரணமான நிலைப்பாட்டை எடுத்தவர்கள், கால தாமதம் செய்தவர்கள் என்கிற வரிசையில் நடிகர் விஜயும் தானே வருகிறார். அவர் மீது வழக்கு தொடுப்பதற்கு தமிழக அரசுக்கு என்ன தயக்கம், என்ன அச்சம், இந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.