ரஜினிகாந்த் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து, வி.சி.க தலைவர் திருமாவளவன், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது, நல்லவேளை அவர் கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆகவில்லை” என்று கூறி கடுமையாக விமர்சித்தார்.
ரஜினிகாந்த் லக்னோவில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அப்போது, ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். ரஜினிகாந்த் - யோகி ஆதித்யநாத் சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து விவாதத்துக்குள்ளானது.
இந்நிலையில், நாங்குநேரியில் தலித் மாணவர் மற்றும் அவரது சகோதரி தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நெல்லையில் வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எஸ்.டி.பி.ஐ கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, வி.சி.க தலைவர் திருமாவளன் எம்.பி, உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் காலில் ரஜினிகாந்த் விழுந்தது குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியதாவது: “உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் காலில் போய் நம்முடைய சூப்பர் ஸ்டார் விழுந்துவிட்டு வருகிறார். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால், அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியிருந்தால் யோகி ஆதித்யநாத் அல்லவா முதலமைச்சர் ஆனது போல ஆகியிருக்கும் தமிழ்நாடு. இது எவ்வளவு பெரிய வேதனையாக இருக்கிறது.
தமிழக மக்கள் எவ்வளவு உயர்ந்த மதிப்பை ரஜினிகாந்த் மீது வைத்திருந்தோம். முதல்வரை சந்திப்பதோ, தலைவர்களை சந்திப்பதோ பிரச்னை அல்ல. ஆனால் ரஜினி காலடியில் விழுந்து வணங்குகிறார். அதற்கு என்ன பொருள். ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத்தை உயர்வாக மதிக்கட்டும். அது உங்களுக்குள் இருக்கும் உறவு. ஆனால், உங்களைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு உயர்வாய் மதித்துக் கொண்டிருந்தார்கள்..?
தனக்கு எப்படிப்பட்ட உறவு இருக்கிறது என்பதை ரஜினி ஒரே நிகழ்வில் காட்டிவிட்டார். இப்படிப்பட்டவர்கள் கைகளில்தான் தமிழ்நாடு இன்று உள்ளது. இவர்கள்தான் கருத்துருவாக்கம் செய்யும் இடங்களில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே நாம் காக்க வேண்டும். இதற்கு இந்தியா கூட்டணியின் வெற்றி அவசியமாக இருக்கிறது” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.