விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனின் 59வது பிறந்த நாளை அவரது கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமாவளவனை திராவிடச் சிறுத்தை என்று குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது குறித்து சமூக ஊடகங்களில் வரவேற்றும் விமர்சித்தும் எதிர்வினைகள் எழுந்துள்ளன.
தமிழக அரசியலில் ஒடுக்கப்பட்டோர் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திருமாவளவன், அம்பேட்கர், பெரியார், தமிழ்த் தேசியம், பொதுவுடைமை சிந்தனைகளுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தற்போது சிம்பரம் தொகுதி எம்.பி-யாக உள்ளார். விசிக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் அரசியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிப்பிடும்படியான வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், ஆகஸ்ட் 17ம் தேதி திருமாவளவனின் 59வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவருடைய பிறந்த நாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன், மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் குறிப்பிடுகையில், “திராவிடச் சிறுத்தை சகோதரர் திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் பயன் தர வேண்டுமென வாழ்த்துகிறேன்!” என்று தெரிவித்துள்ளார். திருமாவளன் தனக்கு நேரிலும் சமூக ஊடகங்கள் வழியாகவும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெர்வித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் அவருடைய ஆதரவாளர்களும் திருமாவளவனை எழுச்சித் தமிழர் என்றே அழைத்து வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவனை திராவிடச் சிறுத்தை என்று கூறி வாழ்த்தியிருப்பதால், திருமாவளவன் திராவிடச் சிறுத்தையா, எழுச்சித் தமிழரா என்று கேட்டு தமிழக அரசியலில் சமூக ஊடகங்களில் விவாதமும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
மு.க.ஸ்டாலின் திராவிடச் சிறுத்தை என்று திருமாவளவனை அழைத்து வாழ்த்து தெரிவித்திருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். ஆனால், சமூக ஊடக பயனர் ஒருவர், “திருமா திராவிடச் சிறுத்தை, ஆனால், கருணாநிதி தமிழினத் தலைவரா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு டிவிட்டர் பயனர், தமிழ்நாடின் தளபதி மக்களின் முதல்வர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். திராவிடச் சிறுத்தை என்று குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
ஒரு ட்விட்டர் பயனர், “திராவிடச் சிறுத்தை என்று சிரித்து வைத்து, எழுச்சித் தமிழரே உங்களை திராவிட முன்னேற்றக்கழக சிறுத்தையாக மாற்றுவதற்குள் திமிரி எழுந்துவிடுங்கள் என்று குறிப்பிட்டுளார்.
இன்னொரு ட்விட்ட பயனர், “திராவிடச் சிறுத்தையா அப்போது எழுச்சி தலைவர் இல்லையா திருமாவளவன் அவர்களே” என்று கேள்வி எழுப்பினர்.
அதே போல, எழுச்சித் தமிழர் இன்றிலிருந்து திராவிட சிறுத்தை என்று அன்போடு அழைக்கபடுவார் என்று கிண்டல் செய்யும் விதமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு ட்விட்ட பயனர், இது என்ன புது புரளியா இருக்கு திராவிட சிறுத்தை திராவிடம் அல்ல, நாங்கள் தமிழர்கள் என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், திமுக எம்.பி தயாநிதி மாறன், திருமாவளவனை எழுச்சித் தமிழர் என்றே குறிப்பிட்டு பிறந்தநாள் தெரிவித்துள்ளார். தயாநிதி மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் குரிப்பிடுகையில், “இன்று பிறந்தநாள் காணும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், மு.க.ஸ்டாலின் திராவிடச் சிறுத்தை என்று குறிப்பிட்டதற்கு எழும் விமர்சனங்கள் குறித்து விசிக தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த எதிர்வினையும் தெரிவிக்கப்படவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”