/indian-express-tamil/media/media_files/0Q25ZShaIy5EwceWmgYY.jpg)
வி.சி.க தலைவர் திருமாவளவன்
டாஸ்மாக் மூலம் அரசின் வருமானத்தை பெருக்க ஐ.ஏ.எஸ் அதிகாரியை செயல்பட வைப்பது மக்கள் விரோதச் செயல் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முகநூல் நேரலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது: “கள்ளக்குறிச்சியில் 2 நாட்கள் மக்களை சந்தித்ததில், அரசுக்கு டாஸ்மாக் மூலம் தான் வருமானம் வருகிறது என்றால், அரசின் கடனை அடைக்க நாங்கள் பணம் தருகிறோம். பதிலாக அரசு மதுபான கடைகளை மூட வேண்டும் என்பதையே ஒருமித்த குரலில் கூறினர். கள்ளச்சாராயத்தை ஒழிப்பது அல்ல, மக்கள் கோரிக்கை டாஸ்மாக் மதுக்கடைகளையே மூட வேண்டும் என்பதாக உள்ளது.
2003ல் டாஸ்மாக் வருமானம் ரூ3000 கோடியாக இருந்த நிலையில், 20 ஆண்டுகளில் ரூ.45000 கோடியாக உயர்ந்துள்ளது. ஆட்சிகள் மாறினாலும் கள்ளச்சாராய தொழில் தொடர்கிறது என்பதே மக்கள் கருத்தாக இருக்கிறது. பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதிகளில் மட்டுமல்ல, உழைக்கும் மக்களை குறிவைத்து இந்த வணிகம் நடக்கிறது. எல்லோராலும் டாஸ்மாக் மதுவை வாங்க முடியவில்லை. எனவே 60 ரூபாய்க்கு கிடைக்கும் கள்ளச்சாராயத்தை நாடுகின்றனர்.
நாம் தொடர்ந்து தேசிய அளவில் மதுவிலக்கை வலியுறுத்தி வருகிறோம். முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்ற கறாரான முடிவுக்கு அரசு வந்தால் தான் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும். சாராய கடைகள் எங்குமே இல்லையென்றால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவது தான் ஒரே வேலை தான் இருக்கும்.
நல்ல சாராயத்தை எப்படி விற்பனை செய்வது என்று மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்துவதும், ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடத்துவதெல்லாம் தேவையில்லை. ஆண்டுக்கு ஆண்டு அரசுக்கு வருமானம் பெருக்க வேண்டும் என்பதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரியை செயல்பட வைப்பது மக்களுக்கு விரோதமான செயலாகத்தான் இருக்கிறது.
எனவே, பெரும்பான்மையான பெண்களின் கோரிக்கையை ஏற்று, பூரண மதுவிலக்கு கோரி சென்னையில் ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இந்தக் கள்ளச்சாராய விவகாரத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதரவற்றவர்களாக உள்ளனர். எனவே மதுவை ஒழிக்க வேண்டிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என அரசியல் ஆதாயம் தேடும் வகையில் தான் அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கைகள் வெளிப்படுகின்றன. பூரண மது விலக்கையோ, டாஸ்மாக் மூட வேண்டும் என்பது தொடர்பாகவோ யாரும் பேசவில்லை.
இதைப் பயன்படுத்தி தி.மு.க.,வை எப்படி விமர்சிப்பது என்ற நோக்கம் தான் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கின்றன. ஒருபடி மேல் போய் வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் ஏன் தி.மு.க கூட்டணியில் இருக்கிறது என்கின்றனர். அவர்களுக்கு கவலை தி.மு.க கூட்டணியை பலவீனப்படுத்துவது தான். இந்த அவலம் நடப்பதற்கு அனைவருமே பொறுப்பு.” இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.