தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த எம். ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) தான் சார்ந்து இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் (தி.மு.க) இருந்து விலகி 1972 அக்டோபர் 17 அன்று, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார்.
1984-ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர்.1987 வரை சுமார் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். இம்மண்ணை விட்டு பிரிந்து இருந்தாலும், அவரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரை தெய்மாக பலரும் வழிபட்டு வருகிறார்கள். அவருக்குப் பிறகு அ.தி.மு.க தலைவரான ஜெயலலிதா எம்.ஜி.ஆர். பெயரில் பல திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கினார். அதேபோல், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி கட்சியின் முன்னோடிகளான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பெயரில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார்.
இருப்பினும், மறைந்த அ.தி.மு.க தலைவர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா மீது அவ்வப்போது விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரை விமர்சித்தார். அதற்கு அ.தி.மு.க-வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அது பா.ஜ.கவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள முக்கிய காரணமாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு அ.தி.மு.க தலைவர்கள் மீது விமர்சனம் வைக்கப்பட்டு தான் வருகிறது.
இந்த நிலையில், எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்தில் பார்ப்பனீயம் ஊடுருவ காரணமாக இருந்தார் என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார். எம்.ஜி.ஆர் கலைஞருக்கு எதிராக விமர்சனம் செய்தார் என்றும் வெறுப்பு அரசியலை விதைத்தார் அல்லது ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தார் எம்.ஜி.ஆர் என்றும் அவர் கூறியுள்ளார்.
அம்பத்தூரில் நடந்த கலைஞரின் நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், "இன்றைக்கு தமிழ் தேசியம் பேசுபவர்கள் கலைஞர் கருணாநிதியை மட்டும் விமர்சித்து பேசுகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆரை விமர்சிப்பதில்லை. கலைஞரின் ஆசான் அண்ணாவைகூட விமர்சிப்பதில்லை. கலைஞர் எதிர்ப்பு அரசியல் மட்டும் 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருந்த கலைஞர் எதிர்ப்பு என்ற தொற்றுநோய் தமக்கும் இருந்தது. ஆனால் கலைஞரின் ஆளுமை, ஆற்றலை யாரும் தற்போது பேசுவதில்லை.
எம்.ஜி.ஆர் கலைஞருக்கு எதிராக விமர்சனம் செய்தார். வெறுப்பு அரசியலை விதைத்தார் அல்லது ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தார் எம்ஜிஆர். அந்த வகையில் திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தவர் எம்ஜிஆர் என்ற விமர்சனம் உண்டு." என்று அவர் கூறியுள்ளார்.