வி.சி.க தலைவர் திருமாவளவன், வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மட்டுமில்லாமல் முதல் முறையாக தென் மாநிலங்கள் முழுக்க வி.சி.க போட்டியிட உள்ளதாக கூறியிருப்பது தமிழக அரசியல் களத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளன.
மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க, கொ.ம.தே.க கட்சிகள் என எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. தி.மு.க கூட்டணியில், சி.பி.ஐ, சி.பி.எம், கொ.ம.தே.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் உடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானாலும், வி.சி.க, ம.தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் உடனான பேச்சுவார்த்தை இன்னும் உடன்பாடு ஏற்படாமல் தொடர்ந்து வருகிறது.
தி.மு.க கூட்டணியில் உள்ள வி.சி.க தொகுதிப் பங்கீடு குறித்து 3-ம் கட்ட பேச்சுவார்த்தையை வியாழக்கிழமை (07.03.2024) நடத்த உள்ளது.
இதனிடையே, ஆந்திரப் பிரதேசத்தில் இண்டியா கூட்டணியின் ஒரு பகுதியாக போட்டியிட வி.சி.க திட்டமிட்டுள்ள நிலையில், மற்ற மாநிலங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் அக்கட்சி சுயேச்சையாக போட்டியிட உள்ளதாகவும் இதனால் இண்டியா அணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் செவ்வாய்க்கிழமை காலை அக்கட்சியின் தலைமையகத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த வி.சி.க பிரிவுகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், தெலங்கானாவில் 10 மக்களவைத் தொகுதிகளிலும், கர்நாடகாவில் 6 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
மேலும், “ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் ஆந்திரப் பிரதேசத்தில் தங்கள் கட்சியின் அணுகுமுறை குறித்து விளக்கிய திருமாவளவன், “அந்திர மாநிலத்தில் இண்டியா கூட்டணியின் கீழ் வி.சி.க போட்டியிட விரும்புகிறது. எங்களின் கோரிக்கையை தெரிவிக்க வி.சி.க மாநில நிர்வாகிகள் ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷர்மிளாவை சந்திக்க உள்ளனர்” என்று தெரிவித்தார்.
வி.சி.க தலைவர் திருமாவளவன், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மட்டுமில்லாமல் முதல் முறையாக தென் மாநிலங்கள் முழுக்க வி.சி.க போட்டியிட உள்ளதாக கூறியிருப்பது தமிழக அரசியல் களத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளன. திருமாவளவனின் இந்த முடிவு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய தென் மாநிலங்களில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் வி.சி.க தனது இருப்பை வெளிப்படுத்தும் முயற்சி என்று பேசப்படுகிறது. அதே நேரத்தில் இது நிரந்தர சின்னம் பெறுவதற்கான முயற்சியா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் வலுவான தலித் கட்சியாக அறியப்படும் வி.சி.க பொதுக் கட்சி என்ற அடையாளத்தைப் பெற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் திருச்சியில் நடைபெற்ற வி.சி.க-வின் வெல்லும் ஜனநாயகம் மாநாடு அக்கட்சியின் பலத்தை அறிவிப்பதாகவே இருந்தது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற வி.சி.க 2 தொகுதிகளைப் பெற்றது. திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், விழுப்புரம் தொகுதியில் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் போட்டியிட்டு ஓரிரு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், நிரந்தர சின்னம் இல்லாமல் இருக்கிறது. அதனால், பானை சின்னத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் உள்ளது. இந்த முறை தி.மு.க கூட்டணியில் 3 தொகுதிகளைக் கேட்கும் திருமாவளவன், 3 தொகுதிகளிலும் தனி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமில்லாமல், இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுக்கு மட்டுமே நிரந்தர சின்னம் ஒதுக்குகிறது. பதிவுசெய்த அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சின்னங்களை ஒதுக்குகிறது. அதுமட்டுமில்லாமல், ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் போட்டியிடும் பதிவு பெற்ற கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் முன்னுரிமை கொடுக்கிறது. எனவே அடுத்து வரும் தேர்தல்களில் இதே சின்னத்தை தக்க வைக்கும் ஒரு உத்தியாக ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சிறுத்தைகள் வேட்பாளர்களை நிறுத்துவதாக கூறப்படுகிறது. இதுதான் வி.சி.க தென் மாநிலங்களில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணியில் 3 தொகுதிகளைக் கேட்டுள்ள திருமாவளவன், கூட்டணியில் கட்சிகள் அவரவர் பலத்துக்கு ஏற்ப தொகுதிகளின் எண்ணிக்கையைக் கேட்கிறார்கள். அழைத்தால் மீண்டும் தி.மு.க பேச்சுவார்த்தைக் குழுவை சந்திப்போம். தேவைப்பட்டால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.
தி.மு.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு இன்று (07.03.2024) வி.சி.க-வை 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. தொகுதிகளைக் கூடுதலாகப் பெற வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் களத்தில் நகரும் வி.சி.க தலைவர் திருமாவளவன், கட்சிக்கென நிரந்தர சின்னம் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக தென் மாநிலங்களிலும் போட்டியிடுவது என வியூகம் அமைத்து காய்களை நகர்த்தி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.