சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், "காங்கிரஸும், முஸ்லீம் லீக்கும் எங்கள் கூட்டணிக் கட்சிகள். மற்றக் கட்சிகள் நட்புடன் இருப்பவை. தேர்தலின்போது சில கட்சிகள் வரலாம். சில கட்சிகள் போகலாம். வைகோ கூட்டணியில் இருப்பாரா என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரியும்" என்றார்.
இதன்பிறகு பேட்டியளித்த வைகோ, "நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பதை திமுக தலைவர் தான் தெளிவுப்படுத்த வேண்டும்" என்றார். ஆனால், இதுவரை ஸ்டாலின் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.
இந்த நிலையில், திமுகவுடன் தோழமையாக இருக்கும் மற்றொரு கட்சி விடுதலைச் சிறுத்தைகள். துரைமுருகனின் இந்தப் பேட்டி குறித்து கருத்து தெரிவித்த வி.சி.க தலைவர் திருமாவளவன், 'கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் திமுகவுக்கு தான் உள்ளது. ஆகவே, திமுக தலைவர் தான் அதை தெரிவிக்க வேண்டும்' என்றார்.
இந்த நிலையில், இன்று (நவம்பர் 27) மதியம் 12 மணிக்கு சென்னையில் திமுக தலைமையகமான அறிவாலயத்திற்கு சென்ற திருமாவளவன், அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமா, "வரும் டிசம்பர் 10ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடத்தப்பட உள்ள 'தேசம் காப்போம்' மாநாடு குறித்தும், கஜ புயல் பாதிப்பு குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலினோடு விவாதித்தேன்.
இது தோழமையான சந்திப்பு, வழக்கமான சந்திப்பு. அன்று மிக எதார்த்தமாகவே துரைமுருகன் கூட்டணி குறித்து பேசினார். ஆனால், அவர் சொன்னதை திட்டமிட்டு ஊகங்கள் அடிப்படையில் சிலர் வதந்திகள் பரப்பினார்கள்.
திமுக- விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் நட்பு வலிமையாக உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பே, திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க திட்டமிடப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இப்போது நிகழ்ந்துள்ளது.
மத சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும். வரும் தேர்தலில், திமுக மிகவும் வலிமையான கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகிறோம்.
டிசம்பர் 10ம் தேதி நடத்தப்பட உள்ள 'தேசம் காப்போம்' மாநாட்டில் தோழமை கட்சிகளைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். அதற்குத் தான் நான் திமுக தலைவரை சந்தித்தேன்.
இதற்கு மேல் கூட்டணி குறித்து நான் விளக்கம் சொல்ல முடியாது. திமுக - விடுதலை சிறுத்தைகள் உறவு வலிமையாக உள்ளது. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
திமுகவில் இருந்து சில கட்சிகளை உருவி விடலாம் என சிலர் மனப்பால் குடிக்கிறார்கள். அது நடக்காது. இப்போது கூட துரைமுருகனிடன் சந்தோஷமாகத் தான் பேசிவிட்டு வந்தேன்.
தேர்தல் ஆணையம், தேர்தல் தேதி அறிவித்த பிறகு தான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும். இப்போது அதுகுறித்து எதுவும் பேச முடியாது.
எங்களின் 'தேசம் காப்போம்' மாநாட்டில் ஸ்டாலின் நிச்சயம் பங்கேற்பார்" என்று திருமாவளவன் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.