அடங்கமறு, அத்துமீறு என்பது ஒரு குறிப்பிட்ட சாதிக்கான முழக்கம் அல்ல - திருமாவளவன்

அடங்கமறு, அத்துமீறு என்பது ஒரு குறிப்பிட்ட சாதிக்கான முழக்கம் அல்ல, அடக்குமுறைக்கு உள்ளாகும் வன்னியர் சமூகத்திற்கும் இது பொருந்தும். ஓடுக்கப்படுகிற மக்கள் அஞ்சி ஒடுங்கி விடக்கூடாது – திருச்சியில் திருமாவளவன் பேட்டி

அடங்கமறு, அத்துமீறு என்பது ஒரு குறிப்பிட்ட சாதிக்கான முழக்கம் அல்ல, அடக்குமுறைக்கு உள்ளாகும் வன்னியர் சமூகத்திற்கும் இது பொருந்தும். ஓடுக்கப்படுகிற மக்கள் அஞ்சி ஒடுங்கி விடக்கூடாது – திருச்சியில் திருமாவளவன் பேட்டி

author-image
WebDesk
New Update
Thirumavalavan trichy

உலகத்தில் எந்த மூலையில் யார் ஒடுக்கப்பட்டாலும் ஓடுக்கப்படுகிற மக்கள் அஞ்சி ஒடுங்கி விடக்கூடாது என திருச்சியில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.

Advertisment

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 31ஆம் தேதி மதச்சார்பின்மையை காப்போம் என்கிற மையக்கருத்தில் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணி குறித்தான டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது திருமாவளவன் தெரிவித்ததாவது; இந்திய ஒன்றிய அரசு, பாசிச பா.ஜ.க அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து கடந்த 11 ஆண்டுகளாக அரசியல் மற்றும் சட்டத்திற்கு எதிரான சட்டபூர்வமான வடிவில் தாக்குதலை நடத்தி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம் சட்டம் 370 நீக்கம், யூனியன் பிரதேசங்களை உடைத்தது, முத்தலாக் சட்டம் நிறைவேற்றம், வக்ஃப் திருத்தச் சட்டம் என அடுத்தடுத்து இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக செயல்படுகிறது. அரசமைப்பின் உயிர் மூச்சான கோட்பாடு மதச்சார்பின்மையாகும். அதற்கு தீங்கு விளைவிக்கும் வகையில், அதனை சிதைக்கும் வகையில் சட்டத்தை எதிர்த்து பா.ஜ.க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அந்த செயல் திட்டங்களில் ஒன்றுதான் வக்ஃப் திருத்த சட்டம் நிறைவேற்றம். இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துவதோடு மதச்சார்பின்மையை காக்க வேண்டும் என வலியுறுத்தி தான் வரும் 31-ம் தேதி பேரணி நடைபெற உள்ளது. மதச்சார்பின்மை மீது நம்பிக்கை உள்ள அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் இந்த மக்கள் திரள் எழுச்சி பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். 

அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குடியிருக்கும் பகுதிகளில் சாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தினர். அதை கண்டித்து 13 -ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தோம். ஆனால், அந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. உயர் நீதிமன்றத்தில் அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. வருகிற 19 -ம் தேதி மாலை புதுக்கோட்டையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோயிலை திறந்து விட வேண்டும், ஆதிதிராவிட மக்கள் புழக்கத்தில் உள்ள ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தையும் அவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது.

Advertisment
Advertisements

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நீதிபதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவில் கூட இதுபோன்ற கூட்டு பாலியல் வன்புணர்வு குற்றங்கள் நிகழாத அளவு அச்சுறுத்தும் வகையிலான ஒரு தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

பா.ஜ.க தமிழகத்தில் தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு எதிராக அரசியலை செய்து வருகிறது. அதனால், எப்போதும் எதிர்மறையான கருத்துக்களை முன்வைப்பது தான் அவர்கள் அரசியல் நிலைப்பாடாகும். ’சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை நடைபெறுகிறது' என்று சொன்னால் அவற்றை கண்டிக்கிற வகையில் போராட்ட நடவடிக்கையில் ஈடுபடலாம். குற்றச்சாட்டு மட்டும் சொல்லிவிட்டு போனால் போதாது. சட்டம் ஒழுங்கு தொடர்பாக வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போல் நயினார் நாகேந்திரன் பேசக் கூடாது. வடகாடு பிரச்சினை தொடர்பாக பா.ஜ.க எந்த கருத்தையும் கூறவில்லை, போராட்டமும் நடத்தவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசும் அவர்கள் ஜாதிய பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டும், மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டும். வடகாடு சாதி வெறி ஆட்டத்தை குறித்து பா.ஜ.க-வினர் எதுவும் பேசவில்லை. 

பாட்டாளி மக்கள் கட்சி மாநாட்டில் மக்களை திரட்டி வைத்துக்கொண்டு எந்த அரசியலும் பேசவில்லை. கருத்தியல் சார்ந்த உரையும் அமையவில்லை. உணர்ச்சியை தூண்டும் வகையில் சில கருத்துக்களை பேசியது தவிர, சமூக நீதிப் பற்றியோ, மக்கள் நலம் குறித்த செயல் திட்டம் பற்றியோ அவர்கள் பேசவில்லை. மாறாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சீண்டும் வகையில் பேசியது ஏமாற்றத்தை தான் தந்துள்ளனர். அடங்கமறு, அத்துமீறு என்பது ஒரு குறிப்பிட்ட சாதிக்கான முழக்கம் அல்ல, அடக்குமுறைக்கு உள்ளாகும் வன்னியர் சமூகத்திற்கும் இது பொருந்தும். உலகத்தில் எந்த மூலையில் யார் ஒடுக்கப்பட்டாலும் ஓடுக்கப்படுகிற மக்கள் அஞ்சி ஒடுங்கி விடக்கூடாது. முடங்கி விடக்கூடாது என்று சொல்கிற அரசியல் விளக்கமாக உள்ள அந்த முழக்கத்தை சாதிய முழக்கமாக பார்க்கிறார்கள். அது அவர்களது அணுகுமுறை. இவ்வாறு திருமாவளவன் பேட்டி அளித்தார்.

க.சண்முகவடிவேல்

Trichy Thirumavalavan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: