தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக் கோரி திருமாவளவன் மனு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து திருமாவளவன் மனு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மே மாதம் 22 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஐந்து வழக்குகள், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் மீதான 200க்கும் மேற்பட்ட வழக்குகளை உள்ளூர் போலீசாரே விசாரிப்பது தவறானது. துப்பாக்கி சூடு வழக்கில் சாட்சிகளாக இருப்பவர்கள் தான், மற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக உள்ளனர். மாநில போலீசார் மீது குற்றம் சாட்டப்படுவதால் இந்த வழக்குகளை அவர்கள் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. அதனால் வழக்கை சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, திருமாவளவன் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

பின்னர், திருமாவளவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, மனு குறித்து முறையிட்டார். இதையடுத்து மனு மீதான விசாரணை வரும் 25 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

×Close
×Close