‘உங்களால்தான் முடியும்...’ தேசிய அரசியலுக்கு வர ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்

தனது மணிவிழாவில் பேசிய திருமாவளவன், இந்தியாவை பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்றும் சனாதன வருணாசிரம ஆட்சியைத் தடுத்து நிறுத்த மு.க. ஸ்டாலின் தேசிய அரசியலுகு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

தனது மணிவிழாவில் பேசிய திருமாவளவன், இந்தியாவை பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்றும் சனாதன வருணாசிரம ஆட்சியைத் தடுத்து நிறுத்த மு.க. ஸ்டாலின் தேசிய அரசியலுகு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

author-image
WebDesk
New Update
thirumavalavan ஒரு வார்த்தை ட்வீட்

விசிக தலைவர் திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் 60வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கத்தில் திருமாவளவன் 60 மணி விழா நடைபெற்றது.

Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு தலைமையில் நடைபெற்ற திருமாவளவன் மணி விழாவில், தி.க தலைவர் கி. வீரமணி, திமுக தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு திருமாவளவனை வாழ்த்திப் பேசினார்கள்.

திருமாவளவன் தனது மணிவிழாவில் பேசுகையில், இந்தியாவை பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்றும் சனாதன வருணாசிரம ஆட்சியைத் தடுத்து நிறுத்த மு.க. ஸ்டாலின் தேசிய அரசியலுகு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

மணிவிழாவில் திருமாவளவன் பேசியதாவது: “ஆசிரியர் ஒரு கருத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். திராவிட மாடல் என்பது வெறும் சொல்லாடல் அல்ல, இது வெறும் அலங்கார வார்த்தை அல்ல. ஒரு கருத்தியல் போருக்கான பிரகடனம். அண்ணன் (மு.க. ஸ்டாலின் இந்தியா எங்கும் எதிரொலிக்கக்கூடிய வகையில், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில், ஊடகங்கள் இதை அனைத்தையும் விவாதிக்கக்கூடிய வகையில், சரியான நேரத்தில் இந்த சொல்லாடலைப் பயன்படுத்தியிருக்கிறார்.

Advertisment
Advertisements

இந்த மண்ணில் நீண்ட நெடுங்காலமாக ஆயிரமாயிரம் தலைமுறைகளாக, ஆரியத்திற்கும் திராவிடத்திற்கு இடையே கருத்தியல் போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதன் ஒரு வடிவமாகத்தான் அடையாளமாகத்தான் ஆதி பகவன் கௌதம புத்தரும் விளங்குகிறார். அவர் வெறும் மதத்தை நிறுவியவர் அல்ல. ஆன்மீகத் தலைவர் அல்ல. ஆரியத்திற்கு எதிராக கருத்துப் போரை நடத்தியவர் கௌதம புத்தர். அந்த வம்சத்தைச் சார்ந்தவர்கள்தான் இன்றைக்கு நாம் இங்கே, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கை வழியிலே இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

திமுக தோன்றிய நாளில் இருந்து, பகை சக்திகளால் குறிவைக்கப்பட்டு அதை வீழ்த்த வேண்டும் என்று எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இது அண்ணன் அறிந்த உண்மை, நாடு அறிந்த உண்மை, உலகம் அறிந்த உண்மை.

பெரியார் என்கிறா பெரும் தீ, ஊழித் தீ இந்த மண்ணில் தோன்றியது. அவருடைய பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாத சனாதன சக்திகள், அவரை வீழ்த்துவதற்கு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டார்கள். முடியவில்லை. நல்வாய்ப்பக பேரறிஞர் அண்ணா கிடைத்தார். பெரியாரியத்தை அவர் செழுமைப்படுத்தினார். அண்ணா காலத்திலேயே அதை அழித்தொழித்திட சனாதன சக்திகள் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டார்கள்.

1969 -இல் அண்ணா காலமானது முடிந்தது கதை, இனி பெரியாரைப் பேச யாருமே இல்லை என்று எண்ணிக்கொண்டிருந்தபோதுதான், ஒரு சுயம்புவாகத் தோன்றினார் கலைஞர். அவரை குறி வைத்தார்கள். அவரைக் கடுமையாகத் தாக்கினார்கள். திரும்பத் திரும்ப அவரை விமர்சித்தார்கள். எவ்வளவோ பகீரத முயற்சிகளை மேற்கொண்டார்கள். பெரியாரியத்தை அண்ணா செழுமைப்படுத்தினார் என்றால், பெரியாரியத்தை கலைஞர் வலிமைப்படுத்தினார்.

50 ஆண்டு காலம் தமிழகத்தின் செய்திகளில் தலைப்புச் செய்தியாக இருந்தவர். அவரைப் போல, விமர்சிக்கப்பட்டத் தலைவர் இந்தியாவில் யாரும் இல்லை. அவரைப்போல் இழிவுக்குள்ளாக்கப்பட்ட தலைவர்கள் இந்தியாவில் யாரும் இல்லை. அந்த அளவுக்கு அவரைக் குறிவைத்துத் தாக்கினார்கள். 360 டிகிரியிலும் நின்று தாக்கினார்கள். எதைப் பற்றியும் கவலைப் படாமல் நெஞ்சுரத்தோடு நின்றார். அண்ணாவின் கனிவும் பெரியாரின் துணிவும் கொண்ட ஒரு பெரும் தலைவராக 50 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழக அரசிலை தன் விரல் நுனியில் வைத்து சுழற்றியவர் கலைஞர். சர்க்கர நாற்காலியில் அவரையே தமிழக அரசியல் சுற்றி வந்தது. அவரை விமர்சித்துப் பேசுகிறவன் புகழடைந்தான். அவரை பாராட்டிப் பேசுகிறவன் பெருமையடைந்தான். இதுதான் அரை நூற்றாண்டு கால தமிழக அரசியல். அதற்கு காரணம் பெரியாரியத்தை கலைஞர் வலிமைப்படுத்தினார் என்பதுதான்.

நான் இன்றைக்கு உங்கள் தம்பி என்ற உணர்வோடு சொல்கிறேன். அண்ணன் அவர்களிடத்திலே முறையிடுகிறேன். பெரியாரியத்தை அண்ணா செழுமைப்படுத்தினார். கலைஞர் வலிமைப்படுத்தினார். நீங்கள் முழுமைப்படுத்த வேண்டும். அதை முதன்மைப்படுத்த வேண்டும். குறைந்த அளவில்கூட உங்களுக்கு தயக்கம் இருக்கக் கூடாது. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு இயக்கம் இன்றைக்கு உயிர்ப்போடு இருக்கிறது. அது வலிமையோடு இருக்கிறது என்று சொன்னால், 6வது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறது என்று சொன்னால், அதற்கு சனாதன எதிர்ப்புதான் அடிப்படைக் காரணம். பெரியாரியம்தான் அதற்கு அடிப்படைக் காரணம். அதை யாரும் மறுத்துவிட முடியாது. கருத்தியல் தெளிவுள்ளவர்கள் யாரும் இதை மறுத்துப் பேச மாட்டார்கள்.

இன்றைக்கு இந்தியா முழுவதும் உங்களைத்தான் பார்க்கிறது. இந்தியாவில் இருக்கிற 38 மாநிலங்களில் ஒரே ஒரு மாநிலம்தான் பிற மாநிலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மாநிலம் அதுதான் தமிழ்நாடு. அவர்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிற தலைவர் அவர்தான் தளபதி ஸ்டாலின்.

இவருடைய அரசியலை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. குறைத்து மதிப்பிட்டார்கள். அண்ணாவுக்கு பிறகு இயக்கம் இருக்காது என்று கருதினார்கள். கலைஞர் தோன்றினார். கலைஞருக்கு பிறகு, திமுக அவ்வளவுதான், அண்ணன் தம்பி சண்டை கட்சி கட்டுப்பாடு இல்லாமல் போய்விடும், மூத்த தலைவர்கள் யாரும் இவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், இவரைப் பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள் என்றெல்லாம் கணக்குப் போட்டார்கள். குறைத்து மதிப்பிட்டவர்கள் இப்போது குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், எவரும் எதிர்பார்க்காத வகையிலே நீங்கள், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எவராலும் சாதிக்க முடியாத வகையிலே அத்தனைக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, ஒரு மகா கூட்டணியை அமைத்தீர்கள். காங்கிரஸையும் இடதுசாரிகளையும் ஒரே பக்கத்தில் நிறுத்தினீர்கள். பாஜகவும் காங்கிரஸும் ஒன்றுதான் என்று கருதிக் கொண்டிருந்த பொதுவுடமைக் கட்சிகளைக்கூட, தமிழகத்தைப் பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சி, இடதுசாரி கட்சிகள் மற்றும் இதரக் கட்சிகளை ஒரே அணியில் இணைத்த சாதனை நீங்கள் சாதித்தது. ஆக ஒட்டுமொத்த இந்தியா இன்றைக்கு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

மிகப் பெரிய ஆபத்து சூழ்ந்துகொண்டிருக்கிறது. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று பெரியார் சொல்வாரே அப்படி, அடுத்த 2024-இல் மகா கும்ப மேளாவில் அடுத்த அரசியல் அமைப்புச் சட்டத்தை அறிவிக்கப் போகிறார்கள். 500 பக்கம் எழுதிவிட்டார்கள். அதில் ஒன்று இரண்டு சொல்லி இருக்கிறார்கள். இந்தியாவின் பெயரை மாற்றப் போகிறோம் என்கிறார்கள். இந்து ராஷ்டிரம், இந்தியாவின் தலைநகரை மாற்றப்போகிறோம் என்கிறார்கள். புதுடெல்லி அல்ல வாரணாசி, இந்தியாவின் ஆட்சிமுறை இனி ஜனநாயக முறையாக இருக்காது. வர்ணாசிரம தருமத்தின் அடிப்படையில் ஆட்சி நிர்வாகமாக இருக்கும் என்கிறார்கள். அப்படி என்றால், பெண்கள் படிக்க முடியாது, பெண்களுக்கு சொத்துரிமை இருக்காது. இந்த இயக்கம் பெரியார், அண்ணா, கலைஞர் என பெண்களுக்கு எவ்வளவு முன்னுரிமை தந்து அவர்களை இன்றைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள் என்பதை யாம் அறிவோம். நீங்களும் அந்த வழியில் எவ்வளவு சாதித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நாடு அறியும்.

ஆனால், வருணாசிரம தருமம்தான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக மாறும் என்றால், நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது. மீண்டும் அந்த பழைய சமூக ஒழுங்கு. இங்கே இஸ்லாமியர்கள் வாழலாம், கிறிஸ்தவர்கள் வாழலாம் படிக்கலாம், வேலைக்கு செல்லலாம். ஆனால், ஓட்டுரிமை இல்லை. பிரகடனம் செய்துவிட்டார்கள். எப்படி தடுக்கப் போகிறோம். யார் தடுப்பார்கள். எங்கிருந்து அந்த எதிர்ப்புப் போர் கிளம்பும். ஒரே வழி, ஒரே கதி நீங்கள்தான் (ஸ்டாலின்). துனிச்சலாக இந்தியா முழுவதும் பயணம் செய்யுங்கள். நீங்கள் தமிழ்நாட்டு தலைவர் அல்ல. தேசியத் தலைவராக உயர்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பு மிகப்பெரிய சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறது.” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mk Stalin Dmk Thirumavalavan Vck

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: