மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானதை அடுத்து, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் அரசியலில் எதிர் துருவங்களாக உள்ள திருமாவளவன், எல். முருகன், அண்ணாமலை திடீரென நேருக்கு நேர் சந்தித்து நலம் விசாரித்துக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
வி.சி.க தலைவர் திருமாவளவன் பா.ஜ.க-வை கொள்கை ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்து எதிர்த்து வருகிறார். பா.ஜ.க, பா.ம.க உள்ள கூட்டணியில் வி.சி.க இடம்பெறாது என்று கறாராக தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் அண்மையில் காலமானார். அவருடைய மறைவுக்கு மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பங்காரு அடிகளார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், வி.ஐ.பி.கள் மேல்மருவத்தூருக்கு நேரில் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன், பங்காரு அடிகளார் மறைவுக்கு அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற மேல்மருவத்தூர் சென்றார். அப்போது, அதே போல, பங்காரு அடிகளார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பா.ஜ.க அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மேல்மருவத்தூர் வந்திருந்தனர்.
பங்காரு அடிகளார் மறைவுக்கு அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற வி.சி.க தலைவர் திருமாவளவன், எதிர்பாராத விதமாக அங்கே வந்திருந்த பா.ஜ.க தலைவர்கள் அண்ணாமலை, எல்.முருகன், கேசவ விநாயகம் ஆகியோரை திடீரென நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அரசியலில் எதிர் துருவங்களாக இருந்தாலும், துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் அவர்களை நேரில் பார்த்த திருமாவளவன், அண்ணாமலை, எல்.முருகன், கேசவ விநாயகம் ஆகியோரை நலம் விசாரித்தார். திருமாவளவன், அண்ணாமலை மற்றும் எல்.முருகனுக்கு கைகொடுத்து நலம் விசாரித்தார். அதே போல, காருக்குள் அமர்ந்திருந்த கேசவ விநாயகத்தையும் நலம் விசாரித்தார். அவர்களும் பதிலுக்கு திருமாவளவனை நலம் விசாரித்தனர். பின்னர், திருமாவளவன், பங்காரு அடிகளார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு அங்கே இருந்து புறப்பட்டார்.
அரசியலில் கொள்கை ரீதியாக பா.ஜ.க-வையும் பா.ஜ.க தலைவர்களையும் கடுமையாக விமர்சிக்கும் திருமாவளவன், துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில், பா.ஜ.க தலைவர்களை திடீரென நேருக்கு நேர் சந்தித்து ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தது கவனத்தைப் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“