ஆதவ் அர்ஜுனா பேசியது தவறு: திருமாவளவன் பேட்டி

ஆதவ் அர்ஜுனா இடம், பொருள், ஏவல் தெரியாமல் பேசிவிட்டார் என்றும், அவர் பேசியது தவறு என அவரிடம் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா இடம், பொருள், ஏவல் தெரியாமல் பேசிவிட்டார் என்றும், அவர் பேசியது தவறு என அவரிடம் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Aadhav Arjuna removed from VCK Thirumavalavan Tamil News

"நாங்கள் பேசிய அரசியலைத் தான் அவர் பேசுகிறார். கட்சியின் நலன் அடிப்படையில் தான் அவர் பேசுகிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், ஆதவ் அர்ஜுனா இடம், பொருள், ஏவல் தெரியாமல் பேசிவிட்டார்." என்று திருமாவளவன் கூறியுள்ளார்.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருபவர் ஆதவ் அர்ஜுனா. இவர் இந்த வார தொடக்கத்தில் தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தி.மு.க குறித்தும், அக்கட்சியுடனான கூட்டணி குறித்தும் பேசி இருந்தார். அதில் அவர் அமைச்சர் உதயநிதியை குறி வைத்து, ‘சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா?' என்று கேள்வி எழுப்பினார். 

Advertisment

மேலும், 'வி.சி.க கூட்டணி இல்லாமல் வட மாவட்டங்களில் தி.மு.க வெல்ல முடியாது, குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் தமிழகத்தில் கூட்டணி அமைய வேண்டும், தமிழக அமைச்சரவையில் வி.சி.க, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகளுக்கு இடம் அளிக்க வேண்டும்' எனப் பேசியிருந்தார். 

ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், அவரின் கருத்துகள் தி.மு.க-வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு பதிலளித்து பேசிய நீலகிரி தொகுதி எம்.பி-யும், தி.மு.க துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா, வி.சி.க இயக்கத்திற்கு புதிதாக வந்திருக்கும் ஆதவ் அர்ஜுனா, திருமாவளவனின் ஒப்புதலோடு இதனைப் பேசியிருக்க மாட்டார். திருமாவளவன் நிச்சயமாக இந்த கருத்தை ஏற்க மாட்டார்.

கூட்டணியில் குறைந்தபட்ச செயல் திட்டம் கேட்பது நகைப்புக்குரிய ஒன்று. இப்படி பேசுவது கூட்டணி அறத்திற்கு சரியாக வராது. இது போன்ற குழப்பத்தை விளைவிக்கின்ற, பா.ஜ.க-விற்கு துணை போகிறார்கள் என்று எண்ணக் கூடியவர்கள் மீது திருமாவளவன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கோரிக்கை விடுத்திருந்தார். 

Advertisment
Advertisements

இந்நிலையில், நேற்று முன்தினம் புதன்கிழமை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "தி.மு.க மற்றும் விசிக ஆகிய கூட்டணிக் கட்சிகள் இடையே எந்த சலசலப்பும் இல்லை, விரிசலும் இல்லை; அப்படி விரிசல் உருவாகுவதற்கு வாய்ப்பும் இல்லை.

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். ஏற்கெனவே தொலைபேசி வாயிலாக பேசியுள்ளேன்; உட்கட்சி விவகாரம் என்பதால் உயர்நிலைக் குழுவில் உள்ளவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்." என்று கூறினார். 

திருமாவளவன் பேட்டி

இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா இடம், பொருள், ஏவல் தெரியாமல் பேசிவிட்டார் என்றும், அவர் பேசியது தவறு என அவரிடம் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில், "இந்த அணுகுமுறை என்பது முன்கூட்டியே பேசுவது என்று அவரிடம் (ஆதவ் அர்ஜுனா) கூறினேன். தேர்தலுக்கு இன்னும் ஒன்னரை வருடங்கள் இருக்கிறது. அதற்கு நீங்கள் ஏன் இப்படி பேசினீர்கள்? என்று அவரிடம் கேட்டபோது, 'அண்ணே நான் திட்டமிட்டு பேசவில்லை. பலரும் வந்த பேசியதால் நான் ரியாக்ட் பண்ணுனேன். அது தவறு தான். அதனை நான் ஒத்துக்கொள்கிறேன். எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை'என்று என்னிடம் சொன்னார். 

இப்போது,  அதை அவர் உணர்ந்து விட்டார். நாங்கள் பேசிய அரசியலைத் தான் அவர் பேசுகிறார். கட்சியின் நலன் அடிப்படையில் தான் அவர் பேசுகிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், ஆதவ் அர்ஜுனா இடம், பொருள், ஏவல் தெரியாமல் பேசிவிட்டார். 

தி.மு.க-க்கும், வி.சி.க-க்கும் கொள்கை ரீதியிலான புரிதல் இருக்கிறது. அதனால், இந்த உறவில் உறுதிப்பாடு இருக்கிறது என்கிற நம்மிக்கையில் ஆ. ராசா பேசியிருக்கிறார். அதாவது எங்களுக்கு இடையில் நல்ல புரிதல் இருக்கிறது. அதனை திருமாவளவன் புரிந்து கொள்வார் என்றும் அவர் கூறுகிறார். ஆனால், ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க ஆ. ராசா நிபந்தனை விதிக்கவில்லை." என்று அவர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dmk Thirumavalavan A Raja Vck

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: