விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அறிவாலயத்தில் துணை முதல்வருக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்து வருவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், "அது ஆளுங்கட்சி எடுக்கக் கூடிய முடிவு. யாரைத் துணை முதல்வர் ஆக்குவது, யாரை அதிகாரத்தில் அமர வைப்பது என்பது குறித்து ஆளுங்கட்சி எடுக்கின்ற முடிவு. முடிவெடுத்த பிறகு தான் கருத்து சொல்ல முடியும். அதற்கு முன்பு கருத்து கூற முடியாது. கூட்டம் முடிந்து அறிவித்த பிறகு கருத்து சொல்லப்படும்." என்று கூறினார்.
தொடர்ந்து அவரிடம் துணை முதல்வருக்கான தேவை இருக்கா? என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "துணை முதல்வருக்கான தேவை அவர்களுக்கு (தி.மு.க-விற்கு) உண்டான சுதந்திரம் அது. இதில் கருத்து கூற முடியாது. ஆளுங்கட்சிக்கான சுதந்திரம். அவர்கள் சுதந்திரமாக சுயமாக கட்சி முடிவு எடுக்கின்ற விஷயம். அந்தக் கட்சியினுடைய முன்னணித் தலைவர்கள் பேசிவிட்டு முடிவெடுக்கட்டும். அதன் பிறகு பார்ப்போம்." என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய திருமாவளவன், "தேசிய கல்வி கொள்கை வேறு. தேசிய மது விலக்கு கொள்கை வேறு. தேசிய கல்வி கொள்கையில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களும் கருத்து முரண்பாடு கொண்டுள்ளன. தயக்கமும் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை, அப்படியே கல்வி கொள்கை ஏற்று நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக கருதுகிறோம். அதனால் எதிர்க்கிறோம்.
தேசிய மதுவிலக்கு கொள்கை என்பது தேசிய அளவிலான மனிதர் குலத்தை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் குஜராத், பீகார், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தவிர எல்லா மாநிலங்களையும் அரசு மதுபான வியாபாரங்களை செய்வதால் தேசத்திற்கான மனித வளம் பாலாகிறது. அதனால் அரசியல் அமைப்பு சட்டம் 47-ன் படி தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கையை வரையறுக்கப்பட வேண்டும். அதற்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாடு அரசு மதுபான கடைகளை மூட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமான கோரிக்கையோ, அதேபோல் இந்தியா முழுவதும் மது கடைகளை மூடுவதற்கு மதுவிலக்கு கொள்கை வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
முதல்வரை சந்திப்பதற்கு சொன்ன கோரிக்கைகள் தான் சந்தித்த பிறகும் பேசி வருகிறோம். எங்கள் நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் கருத்தில் உடன்பட்டு இருப்பதால் தி.மு.க மாநாட்டிற்கு பங்கேற்ற இசைவு அளித்து உள்ளனர். தி.மு.க வை உட்கார வைத்து எப்படி மாநாடு ஒழிப்பை பேசுவீர்கள்? என்றால், நாங்கள் பேசுகிறோமோ? இல்லையா ? என்பதை மாநாட்டின் போது பாருங்கள்.
அன்னபூர்ணா உரிமையாளர் பேசிய கருத்து மிகவும் சரியானது ஏற்புடையது. அதனை வரவேற்கிறேன், அவர் பேசிய கருத்து தான் சராசரி குடிமகனின் கருத்தாகும். அவரை அழைத்து கொண்டு அவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டது வேதனை அளிப்பது. அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“