சிதம்பரம் தொகுதி, வேப்பூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட சிதம்பரம் வி.சி.க வேட்பாளர் திருமாவளவன் மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் QR கோடு ஸ்கேன் செய்து பரிசோதித்தனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு அவகாசம் குறைவான நாட்களே இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி என மும்முனை கூட்டணி நிலவுகிறது. தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள, வி.சி.க சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறது. சிதம்பரம் தொகுதியில் வி.சி.க தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
வி.சி.க தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திருமாவளவனை ஆதரித்து, அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர் இருவரும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
திருமாவளவனுக்கு பானை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி சிதம்பரம் தொகுதி முழுவதும் QR கோடு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் உள்ள QR கோடு-வை செல்போன் வழியாக ஸ்கேன் செய்து பார்த்தால் திருமாவளவனின் பிரச்சார வீடியோ போனில் பிரச்சாரம் பிளே ஆகும். திருமாவளவனின் இந்த டிஜிட்டல் பிரச்சாரம் சிதம்பரம் வாக்காளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இது குறித்து திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “இன்று பிரச்சாரப் பயணத்திற்கு இடையே ஒரு பகுதியில் பிரச்சாரத்தின் பிரதான செய்தியைக் கொண்ட QR-போஸ்டரை முயற்சி செய்து பார்த்தேன்.
சிதம்பரம், விழுப்புரம் தொகுதி எங்கும் அமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் வழி நீங்களும் இந்த பிரச்சாரச் செய்தியை தெரிந்துக் கொள்ளுங்கள்.” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், சிதம்பரம் தொகுதி, வேப்பூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட சிதம்பரம் விசிக வேட்பாளர் திருமாவளவன் மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் QR கோடு ஸ்கேன் செய்து பரிசோதித்தனர்.
வேப்பூர் பகுதியில் QR கோடு உடன் ஒடப்பட்ட போஸ்டரை திருமாவளவன் தனது செல்போனில் ஸ்கேன் செய்து வீடியோவை பிளே செய்து பார்த்தார். அதே போல, அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் செல்போனில் ஸ்கேன் செய்து திருமாவளவனின் பிரச்சாரச் செய்தி வீடியோவைப் பிளே செய்து பார்த்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“