இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் கெத்து தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து காதல், சாதி, கிராமத்தின் சூழ்நிலைகளை சேர்த்து எடுக்கப்பட்டுள்ள ‘லப்பர் பந்து’
திரைப்படம் மிகவும் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருப்பதாக விமர்சகர்களும் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வௌர்கின்றனர். பல்வேறு தரப்பினரும் ‘லப்பர் பந்து’ திரைப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், வி.சி.க தலைவர் திருமாவளவன், லப்பர் பந்து படத்தைப் பார்த்துவிட்டு, படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை சிலாகித்து பேசியுள்ளார். மேலும், இப்படி ஒரு நல்ல திரைப்படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்துவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.
லப்பர் பந்து திரைப்படத்தைப் பார்த்த பின்னர் செய்தியாளர்களிம் பேசிய திருமாவளவன், கூறுகையில், “கிராமபுற கிரிக்கெட்டில் சாதி முக்கிய கூறாக இருப்பதனை இந்த படம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதெல்லாம் கசப்பான வெளிச்சத்திற்கு வராத உண்மைகள். கிராமம் மட்டுமல்ல அகில இந்திய அளவிலும் இது போன்ற பாகுபாடுகள் கொண்டு கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.” என்று கூறினார்.
மேலும், “லப்பர் பந்து திரைப்படம் ஆணாதிக்க போக்கையும் வெளிப்படுத்தி உள்ளது. இந்த படத்தில் ஆணாதிக்கத்தை நொறுக்கும் வசனம் உள்ளது. சாதி திமிர் கூடாது என்பதனை போல ஆணாதிக்க திமிரும் கூடாது என்பதனை காட்டியுள்ளார்.” என்று திருமாவளவன் கூறினார்.
லப்பர் பந்து திரைப்படம் குறித்து தொடர்ந்து பேசிய திருமாவளவன், “பெண்கள் விழிப்புணர்வைப் பெற்று வருகிறார்கள். பெண்கள் தங்களுடைய உரிமைகளுக்காக போராடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி காதல் என்பது ஒரு பெரிய குற்றமில்லை. சாதி கடந்து, மதம் கடந்து காதல் செய்வது வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை என்கிற விழிப்புணர்வைப் பெண்கள் இப்போது பெற்று வருகிறார்கள். அந்த விழிப்புணர்வு அவர்களிடையே இருக்கிறது என்பதுதான் இந்த பாத்திரங்கள் உணர்த்துகின்றன. மகளாக இருந்தாலும் தன்னுடைய தந்தையிடத்திலே, தாயிடத்திலே, முற்காலங்களில் 30-40 ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய காதலைக்கூட வெளிப்படையாகப் பேசமாட்டார்கள். ஆனால், இன்றைக்கு “நீ சொல்கிற வரை நான் அவனை திருமணம் செய்யமாட்டேன், ஆனால், அவனைத் தவிர வேறு எவனையும் திருமணம் செய்ய மாட்டேன்” என்று கதாநாயகி சொல்கிற அந்தக் காட்சி, பெண்களிடையே எந்த அளவுக்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. அத்தகைய துணிச்சல் ஒரு தார்மீகமான துணிச்சல். ஒரு அறம் சார்ந்த துணிச்சல். அதை சமுதாயக் கட்டுகளை மீறுவதாக யாரும் கருத வேண்டியதில்லை. எத்தனையோ பல ஆணவக் கொலைகளில் பெண்கள் வாயடைத்துப் போய் நிற்கிறார்கள். அவர்கள் விரும்புகிற காதலனை தங்கள் கண் முன்னாலேயே படுகொலை செய்யப்படுகிறபோது, கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறபோது, அதை குறித்து ஒரு வார்த்தைக்கூட பேச முடியாத பல பெண்களை இன்றைக்கும் நாம் பார்க்கிறோம். தன்னுடைய பெற்றோர்களை அவர்களால் எதிர்த்துப் பேச முடிவதில்லை. அல்லது இப்படிப்பட்ட ஒடுக்குறையைச் செய்கிற சமூகத்தை எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடிவதில்லை என்கிற நிலை இப்போது மாறி வருகிறது.
அந்த உளவியலை கதாநாயகி மூலம் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். அதற்கு இந்த ஒரு வசனம் மிக வெளிப்படையாக இருக்கிறது.” என்று இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், “சமூக நீதி, சமத்துவ சிந்தனையோடு லப்பர் பந்து திரைப்படம் அமைத்துள்ளது. இது வணிக நோக்கில் எடுத்த படமல்ல. இந்த தலைமுறையினருக்கு சொல்லப்பட வேண்டிய அரசியல் பாடம்” என்று திருமாவளவன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.