கடலூருக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதன்படி, மே 31ஆம் தேதி வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறவிருந்த மதச்சார்பின்மை காப்போம் பேரணி, ஜூன் 14ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார்.
சிப்காட் தொழிற்பேட்டையின் காரணமாக காற்று, குடிநீர் உள்ளிட்டவை மாசு அடைந்து பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்றும், சிப்காட் தொழிற்பேட்டையின் பிரச்சனைகள் மற்றும் லாயல் பேப்ரிக் தொழிற்சாலையை அகற்ற அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று முதல்வரிடம் கோரிக்கை முன்வைப்போம் எனவும் கூறினார்.
தி.மு.க கூட்டணி மட்டுமே வடிவம் பெற்ற வலுவான அணியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். தமிழகத்தில் தி.மு.க-வை எதிர்க்கும் அணி இதுவரை உருவாகவில்லை என்றும், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி நீடிக்குமா என்பதே தெரியவில்லை எனவும், வி.சி.க ஒரு அணியில் உள்ளது, அதில் எந்த ஊசலாட்டமும் இல்லை, அந்த அணியிலேயே தொடர்வோம் என்றும் பதிலளித்தார்.
டாஸ்மாக் ஊழல் என்பது ஒரு கற்பிதம், அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்தக் கூடியது என தி.மு.க தரப்பில் கூறி வரும் நிலையில், அதில் ஊழல் நடந்திருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை என அவர் தெரிவித்தார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் படுத்துக்கொண்டே ஜெயிப்போம் என தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையில், அது அவரின் கட்சியினரை உற்சாகப்படுத்தவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும் தெரிவித்திருக்கிறார் எனக் கூறினார்.
தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆட்சி அதிகாரத்தில், அமைச்சரவையில் இடம் பெறுமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.