தி.மு.க-வோடு பா.ஜ.க நெருங்கி விடக் கூடாது என்ற பதற்றம் அ.தி.மு.க-விடம் காணப்படுகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இன்று (மே 25) திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அதன்படி, "இதற்கு முன்பாக நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டங்களை புறக்கணித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது அடையாள போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதே நிலையை தொடர வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காமல் இருப்பதால், கல்விக்கான நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு அடம் பிடிக்கிறது. இவ்வாறு தமிழ்நாட்டிற்கு மறுக்கப்படும் நிதியை கொடுக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு ஏற்ற அணுகுமுறை ஆகும். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த செயல்பாட்டை விமர்சிப்பது, முற்றிலும் அரசியல் உள்நோக்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் உள்நோக்கம் கொண்டு விமர்சிப்பவர்கள், அதற்காக எந்த காரணத்தை வேண்டுமானாலும் கூறலாம்.
தி.மு.க-வோடு பா.ஜ.க நெருங்கி விடக் கூடாது என்ற பதற்றம் அ.தி.மு.க-விடம் வெளிப்படுகிறது. மதசார்பற்ற கூட்டணியை தி.மு.க தலைமை தாங்கி நடத்தும் போது அத்தகைய வரலாற்று பிழையை, தி.மு.க செய்யாது என்பது மக்கள் உணர்ந்த உண்மை. இதனை எடப்பாடி பழனிசாமியும் அறிவார். எனினும், தி.மு.க மீது சந்தேகத்தை எழுப்ப வேண்டும் என்பதற்காக இது போன்ற விமர்சனத்தை எழுப்புகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.