“லண்டன் போய் வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, அவர் ஏன் இப்படிப்பட்ட முடிவை எல்லாம் எடுக்கிறார், இது வருத்தம் அளிக்கிறது, அவரது போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்கு உரியவையாக மாறிவிடக் கூடாது” என திருமாவளவன் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மிகுந்த வேதனைக்குரியது எனவும் இதில் தொடர்புடைய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதல் அளிப்பதாகவும் தெரிவித்தார். அந்த குற்றச்செயலில் தொடர்புடையவர்கள் வேறு யாராக இருந்தாலும் அனைவருமே கைது செய்யப்பட வேண்டும், அவர்களுக்கு உடனடியாக பிணை வழங்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறைக்குள் வைத்திருந்தே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.
அண்ணாமலை போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புவதாகவும், தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க எதிர்க்கட்சி அல்ல, பா.ஜ.க தான் எதிர்க்கட்சி என்று காட்டுவதற்கு பெரிதும் அவர் முயற்சிப்பதாகவும் கூறினார். மேலும், ஆளும் கட்சியினர் மீது அவ்வப்போது குற்றம் சாட்டினால் தான் எதிர்க்கட்சியாக எதிர்க்கட்சித் தலைவராக ஆக்கிக் கொள்ள முடியும் என்று அண்ணாமலை நம்புவதாக தெரிகிறது என திருமாவளவன் கூறினார்.
கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அரசியல் கட்சித் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் என்ற காரணத்தை கூறி அதற்கு தி.மு.க பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது அப்பட்டமான அரசியல் ஆதாய அரசியல் எனத் திருமாவளவன் தெரிவித்தார். குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்கின்ற சூழலில் இவ்வாறு அரசின் மீது குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல என திருமாவளவன் தெரிவித்தார்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செருப்பு போட மாட்டேன் சாட்டையால் அடித்துக் கொள்வேன் என்று பேட்டி அளித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், லண்டன் போய் வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, அவர் ஏன் இப்படிப்பட்ட முடிவை எல்லாம் எடுக்கிறார், இது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார். தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் அகிம்சா வழி முறை என்பது காந்தியடிகளைப் போல கையில் எடுக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால், காந்தியடிகள்கூட இப்படிப்பட்ட போராட்டங்களை அறிவித்தது இல்லை என திருமாவளவன் தெரிவித்தார். மேலும், அண்ணாமலையின் போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிடக்கூடாது என திருமாவளவன் கூறினார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், மாணவியின் விவரங்கள் வெளிவந்திருக்கக் கூடாது எனவும் அது ஏற்புடையது அல்ல எனவும் கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்த திருமாவளவன் அதற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அந்த எஃப்.ஐ.ஆர் பதிவுகளை காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டிருந்தது என கேள்வி எழுப்பியதற்கு காவல்துறையே பதிவேற்றம் செய்துள்ளதா? அவ்வாறு இருந்தால் அது தண்டனைக்குரிய குற்றம் காவல்துறை அதிகாரிகள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என திருமாவளவன் கூறினார்.
சிறுபான்மையினருக்கான ஒரே தலைவர் மோடி தான் என்று அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வி.சி.க தலைவர் திருமாவளவன், இது தான் 21-ம் நூற்றாண்டில் மிகச் சிறந்த நகைச்சுவை என தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் என்னை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என நினைப்பதாகவும் திரும்பத் திரும்ப இது குறித்து விளக்கம் அளித்தாலும் அவர்கள் விரும்புகிற சூதாட்டத்தை நடத்தப் பார்ப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் அதற்கு இடம் கொடுக்காது அரசியல் ஆதாய கணக்குகளின் அடிப்படையில் நாங்கள் செயல்படவில்லை எங்களுக்கு ஒரு நோக்கம் உள்ளது என்றார். தேர்தல் காலத்தில் தொலைநோக்கு பார்வையுடன் லாப நட்ட கணக்கு இல்லாமல் இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் எனவே நாங்கள் யாரையும் மிரட்டுகின்ற நிலையில் இல்லை எங்களையும் யாரும் மிரட்டுகின்ற நிலைமையில் நாங்கள் இல்லை என தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “காவல் துறைக்கு தெரியாமல் எப்படி எஃப்.ஐ.ஆர் வெளியானது. பாதிக்கப்பட்ட பெண் தவறு செய்ததாக எஃப்.ஐ.ஆர்-ல் பதிவு செய்து உள்ளார்கள்.வெட்கமா இல்லையா உங்களுக்கு. பாதிக்க பட்ட மாணவியின் குடும்பத்தை எஃப்.ஐ.ஆர் வெளியிட்டு அசிங்கப்படுத்தி உள்ளார்கள். எஃப்.ஐ.ஆர் படிக்கும் போது இரத்தம் கொதிக்கிறது. காரி துப்பும் வகையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெட்கப்பட வேண்டும். இன்னும் எத்தனை நாள் தான் வடக்கு, தெற்கு என பேசி கொண்டே இருப்பீர்கள். வெட்கமா இல்லையா உங்களுக்கு. தி.மு.க அரசுக்கு எதிராக நாளை முதல் 48 நாள் விரதம் இருக்க போகிறேன். தி.மு.க-வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். எனக்கு நானே நாளை காலை சாட்டை அடி கொடுக்க போகிறேன். தி.மு.க அரசுக்கு எதிராக இனி போராட்டம் எல்லாம் கிடையாது. இனி வேறு மாதிரி டீல் செய்யப்படும். மாவுகட்டு எல்லாம் ஒரு தண்டனையா? 10 நாளில் தண்டனை பெற்று தரமுடியுமா? நிர்பயா நிதி ரூ.1000 கோடி நிதி எங்கே? ஒரு சிசிடிவி ஒயர்கூட சரி செய்ய முடியவில்லையா?” என்று அண்ணாமலை ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“