Advertisment

அ.தி.மு.க-வை கரைய விட்டுவிட்டார் இ.பி.எஸ் - திருமாவளவன் விமர்சனம்

பா.ஜ.க-வைப் பார்த்து தி.மு.க பயப்படுகிறது என்று அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், இ.பி.எஸ் பா.ஜ.க-வின் குரலாக ஒலிக்கிறார். அவர் அ.தி.மு.க-வை கரைய விட்டுவிட்டார் என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
அ.தி.மு.க-வை கரைய விட்டுவிட்டார் இ.பி.எஸ் - திருமாவளவன் விமர்சனம்

பா.ஜ.க-வைப் பார்த்து தி.மு.க பயப்படுகிறது என்று அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், இ.பி.எஸ் பா.ஜ.க-வின் குரலாக ஒலிக்கிறார். அவர் அ.தி.மு.க-வை கரைய விட்டுவிட்டார், கைவிட்டுவிட்டார் என்று கூறினார்.

Advertisment

திருமாவளவன் கூறியதாவது: “வேலூர் மாநகராட்சி 4வது மண்டலம், வார்டு எண் 33 வசந்தாபுரம் பகுதியில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் ஏழை எளிய மக்கள் அங்கிருந்து இடம்பெயர வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரயில்வேதுறையினர் அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டாலும் அவர்களின் எதிர்காலம் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். அவர்கள் வேலூர் மாநகரத்தில் தொழில் செய்து வருகின்றனர். கூலி வேலை செய்து வருகின்றனர்.

ரயில்வே நிர்வாகம் வீடுகளை புல்டோசர் வைத்து இடிக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இடம் பெயரும் நிலையில் அவர்களுடைய தொழில், கூலி வேலை பாதிக்கப்படும் என்பதால், அதற்கு அவர்களுக்கு உரிய அவகாசத்தை அளிக்க வேண்டும் என்று ரயில்வே துறையினரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

10 சதவீத இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பின் அடிப்படையைத் தகர்க்கக் கூடிய ஒன்று. சமூகநீதியை நீர்த்துப்போகச் செய்கிற முயற்சி. அவர்கள் ஏழைகளுக்கும் உதவுவதை யாரும் எதிர்க்கவில்லை. முன்னேறிய சமூகமாக இருந்தாலும் மிகவும் பின் தங்கிய சமூகமாக இருந்தாலும் ஏழைகளுக்கு இலவசமாக கல்வி வழங்கலாம். கடனுதவி வழங்கலாம். கல்வி உதவித்தொகை வழங்கலாம். தொழில் தொடங்க கடனுதவி வழங்கலாம். இப்படி பல நலத்திட்டங்களை அரசு செய்யலாமே தவிர, பொருளாதார அளவுகோலின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது என்பது இந்த நிலைப்பாடு என்பது அரசமைப்புச் சட்டம், உறுதிப்படுத்தி இருக்கிற சமூகநீதி கோட்பாடு, சிதைக்கப்படும் வகையில், பா.ஜ.க அரசு, சங்பரிவார அரசு மேற்கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சமூகநீதி பேசும் திருமாவளவன் இ.டபில்யூ.எஸ் இடஒதுக்கீட்டை எதிர்க்கலாமா என்று கேட்டுள்ளார். இது குறித்து திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த திருமாவளவன் கூறியதாவது: “இது பொதுவாக இடஒதுக்கீடு பிரச்னை இல்லை. விளிம்புநிலை அளிக்கப்படுகிற இடஒதுக்கீடு, சமூகநீதி கோட்பாட்டுடன் தொடர்புடையது. பொருளாதார இடஒதுக்கீடு சமூகநீதி அடிப்படையில் உருவான கோட்பாடு அல்ல. பிறப்பின் அடிப்படையில், உயர்வு தாழ்வு நிலவுகிற இந்த சமூகத்தில், எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் கோடீஸ்வரனாக இருந்தாலும் சூத்திரர்களையும் அவர்ணர்களாகக் கருதப்படுகிற தலித்துகள் மற்றும் பழங்குடியினரையும் இழிவுபடுத்தும் போக்கு இங்கே நிலவுகிறது. கோடீஸ்வரர்களாக இருந்தாலும் அவர்கள் கீழ் சாதியைச் சேர்ந்தவர்கள், சூத்திரர்கள் என்கிற ஒரு பொது உளவியல் இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதை சீர் செய்வதற்கும் சரி செய்வதற்கும் சூத்திரர் வருணத்தாரைச் சார்ந்தவர்களுக்கும் தலித்துகள் பழங்குடியினரைச் சார்ந்தவர்களுக்கும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு கொடுத்து, அவர்களின் உளவியல் மேம்பாட்டை உறுதிப்படுத்துவது, இது பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்துவது அல்ல. பொருளாதார மேம்பாடு என்பது வேறு, சமூக உளவியல் மேம்பாடு என்பது வேறு. சமூக நீதி கோட்பாடு என்பது சமூக உளவியல் மேம்பாட்டுக்கானது. அதை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிதான் 10% இடஒதுக்கீடு. எல்லா துறைகளிலும் 80 விழுக்காட்டிற்கு மேல் ஆதிக்கம் செய்யக்கூடியவர்களாக முன்னேறிய வகுப்பினர் உள்ளனர். இது ஊரறிந்த உலகறிந்த உண்மை. பேராசிரியர் பணிகளாக இருந்தாலும், துணைவேந்தர் பதவிகளாக இருந்தாலும், நீதிபதிகளாக இருந்தாலும், அயல்நாட்டு தூதுவர்களாக இருந்தாலும், உயர் அதிகாரம் உள்ள அனைத்திலும் 70 விழுக்காட்டுக்கும் மேல், 80 விழுக்காட்டுக்கு மேல் பிராமணர்கள் உள்ளிட்ட உயர் வகுப்பினர்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சொல்வது அப்பட்டமான அபத்தம். 80 விழுக்காடு நுகரக்கூடியவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதனால், இடஒதுக்கீடு தருகிறோம் என்று சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கையாக உள்ளது. ஆகவேதான், பொருளாதார அளவுகோலா, சமூகத் தகுதி அளவுகோலா என்கிற விவாதமாகத்தான் இதைப் பார்க்க வேண்டுமே தவிர, ஏழையா பணக்காரனா என்ற உரையாடலுக்கு இதை உட்படுத்தவே கூடாது. அரசியல் நிர்ணய சபையில், இது குறித்து ஜவஹர்லால் நேரு காலத்திலேயே விரிவான விவாதம் நடத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் சேர்ந்து உறுதிப்படுத்திய கோட்பாடுதான் சமூகநீதி கோட்பாடு. எனவே சங்பரிவார்களின் நோக்கம், சமூகநீதியைத் தகர்ப்பது, குழிதோண்டி புதைப்பது என்பதுதான். ஆகவேதான், 10 சதவீத இடஒதுக்கீட்டை அதன் உள்நோக்கத்தை, கேடான உள்நோக்கத்தை விமர்சிக்கிறோம். எதிர்க்கிறோம்.

தமிழகத்தில் பா.ஜ.க அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்று தி.மு.க அமைச்சர் கூறியது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, அவர் நகைச்சுவையாக சொல்லி இருப்பார் என்று கூறினார்.

ஆளுநர் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்டவர். எதற்காக என்றால், மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டவர். இந்திய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கு இடைவெளி ஏற்பட்டு விடாமல் இருக்க ஒரு பாலம் போன்றவர். அவர் மாநில அரசுகள் எடுக்கிற முடிவுகளுக்கு கட்டுப்பட்டவரே தவிர, அவருக்கு மாநில அரசுகள் கட்டுப்பட்டதல்ல. அதை உணராமல் தமிழக ஆளுநர், பா.ஜ.க இல்லாமல் கட்சிகள் ஆளுகிற அத்தனை மாநிலங்களிலும் மாநில அரசுகளுக்கு நெருக்கடிகளைத் தருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களாக இருந்து பணியாற்றுகிறார்கள். அவர்கள் அரசியல் பேசக்கூடாது என்பதல்ல, ஆனால், அவர்கள் ஒரு இயக்கத்தைச் சார்ந்து அரசியல் பேசுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அரசியலைப் பேசுகிறார்கள். ஆர்.என். ரவி ஆர்.எஸ்.எஸ் ரவியாக இருப்பதால் எதிர்க்கிறோம்.” என்று கூறினார்.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 6 பேர் விடுதலையை எதிர்த்து ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அனுசுயா கடுமையான வாதத்தை முன்வைத்திருக்கிறார். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அனுசுயா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிளளித்த திருமாவளவன், அந்த குண்டுவெடிப்பில் அவர் பாதிக்கப்பட்டவர். கைகள் சேதம் அடைந்திருக்கின்றன. அவருடைய வாழ்க்கையில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே, அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த 6 பேரையும் விடுதலை செய்தது அரசியல் ரீதியான முடிவு அல்ல. அரசியல் ரீதியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டாலும், ஆளுநர் அதன் மீது எந்த முடிவையும் எடுக்கவே இல்லை என்பதை உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டி ஆளுநரின் போக்கை கண்டித்திருக்கிறது. ஆனாலும்கூட உச்சநீதிமன்றம் அந்த அடிப்படையில் வெளியிடவில்லை. சட்டப்படி அவர்களுக்கு விடுதலை வழங்க முகாந்திரம் இருப்பதை உணர்ந்து, உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாக வெளியிட்டிருக்கிறது. அந்த வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டிருக்கிறது என்றாலும்கூட, அது அவர்களின் தன்னிச்சையான முடிவு. அது தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய திர்மானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அரசியல் முடிவு அல்ல. இது சட்டத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருக்கிற வரவேற்க வேண்டிய நிலைப்பாடு. ஆனாலும், பா.ஜ.க ஒன்றிய அரசு இதை எதிர்த்து சீராய்வுக்குப் போய் இருக்கிறது. இது எதிர்பார்த்ததுதான்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், பா.ஜ.க ஆட்சியில் இருந்தாலும் ஈழத் தமிழர் பிரச்னைகளில் அல்லது தமிழ்நாட்டுப் பிரச்னைகளி ஒரேமாதிரியான அணுகுமுறையைக் கையாளுவார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இந்த சீராய்வு மனுவால் இவர்கள் விடுவிக்கப்பட்டதைத் தடுக்க முடியாது. தடுக்க வாய்ப்பு இல்லை. சீராய்விலும் 6 பேரின் விடுதலையை உறுதிசெய்வார்கள் என்றுதான் நான் நம்புகிறேன்.

பா.ஜ.க-வைப் பார்த்து தி.மு.க அரசு பயப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பதிலளித்த திருமாவளவன், “அவர் அ.தி.மு.க-வைப் பார்த்து தி.மு.க பயப்படுகிறது என்று சொன்னால், சரியாக அரசியல் செய்கிறார் என்று நாம் சொல்லலாம். அவர் பா.ஜ.க-வைப் பார்த்து தி.மு.க பயப்படுகிறது என்று சொல்கிறார் என்றால், அவர் பா.ஜ.க-வின் குரலாகப் பேசுகிறார் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. அ.தி.மு.க-வை கரைய விட்டுவிட்டார். கைவிட்டுவிட்டார் என்று எண்ணத் தோண்றுகிறது. ” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், 'காப்' பஞ்சாயத்து என்னும் சாதிப் பஞ்சாயத்துகளை சட்ட விரோத வன்முறைக் கூட்டங்களை பல்கலைக்கழக மானிய குழுத் தலைவர் ஜெகதீஷ் குமார் ஆதரித்து பேசியிருக்கிறார். 'காப்' பஞ்சாயத்து என்னும் சாதிப் பஞ்சாயத்துகளை சட்ட விரோத வன்முறைக் கூட்டங்களை சனநாயக வடிவங்களாக சித்தரிப்பது வன்முறையையும் பயங்கரவாதத்தையும் ஊக்குவிக்கும் செயலாகும். உயர் கல்வி நிறுவனங்களில் பிற்போக்கு பயங்கரவாதக் கருத்தைப் பரப்ப முயற்சிக்கும் பல்கலைக்கழக மானிய குழுத் தலைவர் ஜெகதீஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம் என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Edappadi K Palaniswami Thirumavalavan Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment