திருச்சியில் அரசு ஊழியர் அய்க்கிய பேரவை சார்பில் நடைபெற்ற மணிவிழாவில் பேசிய, வி.சி.க தலைவர் திருமாவளவன், தேர்தல் பாதையை கைவிட்டாலும் கொள்கைப் பாதையை கைவிட மாட்டோம் என்று பேசினார்.
அரசு ஊழியர் அய்க்கிய பேரவை சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு மணிவிழா திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்ட விசிக, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் தமது ஏற்புரையில் பேசியதாவது; காமராஜரை போல, இன்னொரு வகையில் ராகுல் காந்தியை போல, ஒட்டுமொத்தத்தில் புரட்சியாளர் அம்பேத்கரை போல திருமாவளவன் இந்த மண்ணிலே பணியாற்றுகிறார் என்று திருநாவுக்கரசர் என்னை பாராட்டி உள்ளார். இதில் ஒட்டுமொத்த மக்களுக்கான ஒரு தலைவர் உருவாகி இருக்கிறார் என கூறும்போது நான் பெருமைப்படுகிறேன். ஒரு நம்பிக்கையை தரக்கூடிய அளவுக்கு அனைவரின் உரையும் அமைந்திருக்கிறது.
நாடு பேராபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த மண்ணுக்கு மதவெறியர்களால் ஆபத்து உருவாகியுள்ளது. 2024-ம் ஆண்டு நடக்கும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் பா.ஜ.க எந்த எல்லைக்கும் போவார்கள், எதையும் துணிந்து செய்வார்கள். அவர்கள் செய்யும் திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அவர்கள் விரும்பியது போல் பாபர் மசூதியை இடித்து விட்டார்கள், இந்திய குடியுரிமை சட்டம், சி.ஏ.ஏ நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டார்கள். பொது சிவில் சட்டத்தை கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய கடைசி இலக்கு இந்தியாவை இந்து ராஷ்ட்ரியம் ஆக்க வேண்டும் என்பது தான், அதற்காக மதம் சார்ந்த நாடாக மாற்ற செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பல இனம், பல கலாசாரம் நிறைந்த இந்த தேசத்தில் மதச்சார்பற்ற அரசு இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். பா.ஜ.க. என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய ஒரு அரசியல் பிரிவு. பா.ஜ.க.வுக்கு என தனி செயல்திட்டம் எதுவும் கிடையாது.
ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள். ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே ஆட்சி, ஒரே கட்சி என்ற அடிப்படையில் அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். கொள்கை ரீதியாக பா.ஜ.க.வை எதிர்க்கும் காங்கிரசுக்கு நாம் துணையாக இருக்கிறோம். மீண்டும் பா.ஜ.க.வை ஆட்சிக்கு வர விடாமல் அனைவரும் ஒருங்கிணைந்து தடுக்க வேண்டும். மக்கள் எந்த மதத்திலும் இருக்கலாம். ஆனால் அரசு எந்த மதத்தையும் சார்ந்து இருக்க கூடாது. மதசார்பற்ற நாடாக, மதசார்பற்ற அரசாக இருந்தால் தான் இங்கு நீதி நிலைக்கும்.
ஆர்.எஸ்.எஸ் வலிமை பெற்றால் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு வலிமை பெறும், பெண்களுக்கான ஒடுக்குமுறை வலிமை பெறும், பா.ஜ.க விற்கு தனி கொள்கை என்பது கிடையாது, ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைதான் பா.ஜ.க வின் கொள்கை
அவர்கள் மதவெறி தேசியவாதம். இந்து தேசியவாதத்தை கட்டமைக்க வேண்டுமென தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். ஒட்டு மொத்த தேசத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் பா.ஜ.க, ஆர்எஸ்எஸ் வலிமை பெறக்கூடாது.
இந்து தேசிய வாதத்தை உருவாக்க தான் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் குறித்து நம்மிடையே வெறுப்புணர்வை தூண்டுகிறார்கள். தேர்தல் பாதையை கைவிட்டால் கூட, எங்கள் கொள்கை பாதையை நாங்கள் கைவிட மாட்டோம் என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.