அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் த.வெ.க போன்ற கட்சிகளுடனான கூட்டணி கதவை முற்றிலுமாக மூடி விட்டேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள திருபுவனையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொண்டார். அதன் பின்னர், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார். அப்போது, பல்வேறு கட்சியினருடன் கூட்டணி அமைக்கும் கதவை மூடி விட்டதாக அவர் கூறினார்.
குறிப்பாக, "தலித்துகளின் பிரச்சனை என்றால் ஒதுங்கி நிற்கின்றனர். தலித்துகளின் பிரச்சனைகளை பேச மறுத்து அரசியல் செய்கின்றனர். சாதி இந்துக்களின் வாக்கு பறிபோகும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. வேங்கைவயல் பிரச்சனையின் போது சுமார் 5 ஆயிரம் பேரை திரட்டி ஆர்ப்பாட்டத்தை நான் நடத்தினேன். கூட்டணியில் இருந்தாலும் கூட இதுவரை ஒரு பிரச்சனையில் இருந்தும் வி.சி.க பின் வாங்கியது இல்லை. தி.மு.க-வை எதிர்த்து வி.சி.க போராடியதை போல் மற்ற எந்த கட்சியினரும் தமிழகத்தில் போராடியது இல்லை.
தற்காலிக அரசியல் ஆதாயங்களுக்காக எந்த முடிவையும் நாங்கள் எடுத்தது இல்லை. தி.மு.க-விடம் தொடர்ந்து பயணிப்பதற்காக நம்மை கேலி பேசுகின்றனர். தேவைப்பட்டால் பா.ஜ.க பா.ம.க., மற்றும் அ.தி.மு.க போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வேன் என்று கூறுபவர் சாதாரண அரசியல்வாதி. இவை சூது மற்றும் சூழ்ச்சியாக கருதப்படும். ஆனால், பா.ம.க., பா.ஜ.க., அ.தி.மு.க போன்ற கட்சிகளுடன் நாம் சேர மாட்டோம். குறிப்பாக, அந்தக் கட்சிகள் இடம்பெறும் கூட்டணியிலும் சேர மாட்டோம். இதனால் என்ன பாதிப்பு வந்தாலும் எனக்கு கவலை இல்லை.
பதவி தான் முக்கியம் என்று கூறுபவர்களால் இப்படி பேச முடியுமா? புதிதாக கட்சி தொடங்கிய நடிகரும், நண்பருமான விஜய்யுடன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டால், அது தவறான செய்தியை கொடுக்கும் என்று அந்நிகழ்வை தவிர்த்து விட்டேன். விஜய்யுடன் கூட்டணி சேருவதற்கான கதவையும் நான் மூடி விட்டேன்" என்று திருமாவளவன் தெரிவித்தார்.