/indian-express-tamil/media/media_files/2025/05/28/K9L24EcScniKcTifn5L6.jpg)
"நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக எதிர்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துக்களை கூறுவது வியப்பாக உள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆளுங்கட்சி தலையிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது" என்று திருமாவளவன் கூறினார்.
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது; தி.மு.க கூட்டணி சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் தி.மு.க-வில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள, வில்சன் , கவிஞர் சல்மா, சேலம் சிவலிங்கம் உள்ளிட்ட மூன்று பேருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்திருப்பது ஆறுதலை தருகிறது. இதனை வரவேற்கிறேன். தீர்ப்பு வந்த பின்னர் அது பற்றிய கருத்துக்களை தெரிவிக்கிறேன். நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக எதிர்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துக்களை கூறுவது வியப்பாக உள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆளுங்கட்சி தலையிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இந்திய அளவில் பல வழக்குகளில் இது போன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ஒன்றிய அரசு நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுகின்றன என்ற விமர்சனங்கள் உண்டு. ஆனால், இந்த வழக்கில் தமிழக அரசோ அல்லது திமுக அரசோ தலையிட்டு இருக்கிறது என்ற விமர்சனத்தை ஏற்க இயலவில்லை. நேர்மையாக விசாரணை நடந்திருக்கிறது என நான் நம்புகிறேன். யார் அந்த சார் என்பது புலனாய்வில் தெரிய வேண்டிய விஷயம், நீதிமன்றத்தில் எது ஆதாரமாக காட்டப்படுகிறது, எது சாட்சியங்களாக முன்னிறுத்தப்படுகிறதோ அவற்றை வைத்து தீர்ப்பு வழங்கப்படும். குற்றவாளிகளாக யார் யாரை சேர்ப்பது என்பது புலனாய்வு தொடர்பான விவரங்கள். அதில் நீதிபதிக்கு எந்த பாத்திரமும் இல்லை. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் இருந்தால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். சி.பி.ஐ விசாரணை கேட்கலாம். தமிழ் தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை தேவனாய பாவணர் போன்ற தமிழ் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள் உறுதிப்படுத்தி உள்ளார்கள். இன்று கன்னடம், மலையாளம் பேசுபவர்கள் அந்த உண்மையை ஏற்க தயங்கலாம், ஆனால், வரலாறு வரலாறு தான், உண்மை உண்மைதான் அதை யாரும் மறுக்கமுடியாது என தெரிவித்தார்.
தமிழிலிருந்து பிற மொழிகள் சமஸ்கிருத கலப்பால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட , உறுதிப்படுத்தப்பட்ட உண்மையாகும். ம.தி.மு.க-விற்கு ராஜ்யசபா எம்.பி பதவி மறுக்கப்பட்டுள்ளதால் அவரது தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனரே என கேட்டபோது; அதை ம.தி.மு.க அல்லது தி.மு.க தான் கூற வேண்டும், இதில் நான் கருத்து கூறுவதற்கு ஒன்றுமில்லை என்றார். தே.மு.தி.க-விற்கு ராஜ்ய சபா சீட் இல்லை என அ.தி.மு.க கூறியிருப்பது அவர்களின் பிரச்சனை அவர்கள் தான் கூற வேண்டும் என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது திருச்சி, கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்ட செயலாளர்கள் சக்திஆற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், கரூர் மாவட்ட செயலாளர் சக்தி, திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.