‘மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடு அல்ல, மோடி பக்தர்கள் மாநாடு. முருக பக்தர்களின் மாநாடு நடந்திருந்தால் தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் பெரியார், அண்ணா போன்றவர்களை விமர்சிக்கும் வீடியோ ஒளிபரப்பப்பட்டிருக்காது’ என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் இன்று (25.06.2025) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திருமாவளவன் கூறுகையில், “மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடு அல்ல, மோடி பக்தர்கள் மாநாடு. முருக பக்தர்களின் மாநாடு நடந்திருந்தால் தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் பெரியார், அண்ணா போன்றவர்களை விமர்சிக்கும் வீடியோ ஒளிபரப்பப்பட்டிருக்காது. அந்த மாநாட்டில் அ.தி.மு.க.வினர் பங்கேற்றது அதிர்ச்சியளிக்கிறது.
என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், “அண்ணாவை விமர்சித்தாலும், பெரியாரை விமர்சித்தாலும் தேர்தல் ஆதாயம் கருதி பா.ஜ.க.வுடன்தான் கூட்டணி அமைப்போம் என்று அ.தி.மு.க. இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. அவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். அண்ணா, பெரியாரை விமர்சித்த பிறகும் அவர்களோடு சேர்ந்து பயணிக்கப் போகிறார்களா? என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு அ.தி.மு.க.வினர் தெரிவிக்க வேண்டும்.” என்று கூறினார்.
மேலும், ”இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்க்கிற நோக்கத்தில் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். கூடுதல் நிதியை ஒதுக்கு சமஸ்கிருதத்தை மேம்படுத்துகிறார்கள். தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை அவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
ஆங்கிலத்தை தூக்கி எறிய வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசும் இவர்கள், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை பொருட்டாக மதிக்காமல், பிற மொழிப் பேசும் தேசிய இனங்களை, மண்ணின் பூர்வ குடிகளை நசுக்குவதில் குறியாக இருக்கிறார்கள்.” என்று பா.ஜ.க மீது திருமாவளவன் குற்றம்சாட்டினார்.