Advertisment

2026 சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.கவுடன் தான் கூட்டணி - திருமாவளவன் திட்டவட்டம்

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும், தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடரும் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Stalin and thiruma

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும், தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடரும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisment

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தி.மு.கவுடனான கூட்டணி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருமாவவளவன். "கட்சி கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்லை. ஏற்கனவே கடந்த 7 ஆண்டுகளாக தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் வெற்றிகரமாக இயங்கி வருகிறோம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியிலும் ஒரு அங்கமாக இருக்கிறோம்.

இந்த இரு கூட்டணிகளையும் உருவாக்கியதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பங்கு உண்டு. நாங்கள் உருவாக்கிய கூட்டணிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும், வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்பதிலும் தான் நாங்கள் கவனமாக இருக்கிறோம். ஏற்கனவே, பலமுறை இதை சுட்டிக்காட்டியுள்ளேன்.

வேண்டுமென்றே விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்க சிலர் முயன்று வருகின்றனர். இதை நான் முற்றிலும் மறுக்கிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த ஊசலாட்டமும் இல்லை. நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.

நான் ஏற்கனவே சொன்னது போல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் எங்களுக்கு பங்கு உண்டு. எனவே, இது எங்கள்  கூட்டணி. இந்தியா கூட்டணியை உருவாக்கியதிலும் எனக்கு பங்கு உண்டு. இந்த கூட்டணிகளை சிதறடிக்க வேண்டிய தேவை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எங்கிருந்து எழுந்தது? 

யாரோ, எவரோ போகிற போக்கில் கருத்தை சொல்லி விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது சந்தேகத்தை எழுப்புவது ஏற்புடையதல்ல. அதனை நான் 100 விழுக்காடு மறுக்கிறேன். 2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறும்" என அவர் தெரிவித்தார்.

இதேபோல், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் பங்கேற்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "புத்தக வெளியீட்டு தொடர்பாக ஓராண்டுக்கு முன்பே எடுத்த முடிவு இது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க நான் சம்மதம் தெரிவித்து கிட்டத்தட்ட ஓராண்டாகிறது. ஏற்கனவே, அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதியன்று இந்த புத்தகம் வெளியிடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. 

ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்திருந்தால், புத்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் எனக் கூறியிருந்தார்கள். அவர் மட்டுமில்லாமல் ராகுல் காந்தியையும் விழாவிற்கு அழைப்பதாக கூறியிருந்தார்கள். ஆகவே, இந்த புத்தக வெளியீட்டு விழா தற்போது முடிவு செய்யப்பட்டதல்ல. 

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறுவதற்கு முன்பு விஜய்யையும் அழைக்கலாம் என்று திட்டமிட்டிருப்பதாகவும், அவர் வருவார் என்ற தகவலையும் சொன்னார்கள். ரஜினிகாந்தும் விழாவில் பங்கேற்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறியிருந்தார்கள்.

இந்த சூழலில், புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இன்றைய அரசியல் சூழலை கருத்திற்கொண்டு நாங்கள் முடிவு செய்வோம். முன்னணி பொறுப்பாளர்களுடனும் கலந்து பேசி நாங்கள் முடிவு செய்வோம்" என திருமாவளவன் தெரிவித்தார்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mk Stalin Thirumavalavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment