/indian-express-tamil/media/media_files/2025/08/15/thirumavalavan-press-meet-2-2025-08-15-19-01-19.jpg)
“சென்னை மாநகராட்சியில் 11 மண்டலங்களை தனியார் மயமாக்கியதே அ.தி.மு.க-தான். அவர்கள் வெளியிட்ட அரசாணைதான் எல்லாவற்றுக்கும் காரணம்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
வி.சி.க தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “பிரதமர் மோடி சில அறிவிப்புகளை செய்திருக்கிறார். ஜி.எஸ்.டி வரி குறைப்பு இருக்கும், அதுவே தீபாவளி பரிசாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். மகிழ்ச்சி, எங்களைப் பொறுத்தவரை ஜி.எஸ்.டி வரி என்கிற அந்த முறையையே கைவிடப்பட வேண்டும். பழைய முறையே நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதுதான். என்றாலும் கூட, நல்ல அறிவிப்புகள் வருமானால் அதை பாராட்டவும் வரவேற்கவும் கடமைப்பட்டுள்ளோம்.” என்று கூறினார்.
வட மாநில தேர்தல்களை மனதில் வைத்து இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள், அதை அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், “தேர்தலுக்காக செய்தாலும் அது மக்களுக்கு பயன் தரும் என்று என்றால் அதை வரவேற்கிறோம்.” என்று கூறினார்.
பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ் பற்றி பேசியிருக்கிறார் நூறாண்டுகளாக தன்னார்வமாக செயல்படும் அரசு சாரா நிறுவனம் அதற்கு எனது பாராட்டுக்கள் என்று பிரதமர் மோடி செங்கோட்டையிலிருந்து பேசியது குறித்து திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இதற்கு திருமாவளவன் கூறுகையில், “இதன் மூலம் அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் தயாரிப்பு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறார். ஏற்கனவே நாம் சொல்லி இருக்கிறோம், ஆர்.எஸ்.எஸ் பாசறையில் வளர்ந்தவர்கள்தான் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள், ஆர்.எஸ்.எஸ்-ன் செயல்திட்டத்தைத் தான் படிப்படியாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை பயன்படுத்தி நிறைவேற்றி வருகிறார்கள் என்று சொல்லி இருக்கிறோம். அதனால்தான், இன்றைக்கு சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் பதற்றம் நிலவுகிறது வன்முறைகள் வெடிக்கிறது. சுதந்திர தின விழாவிலே அவர் ஆர்.எஸ்.எஸ்-ஐ பாராட்டி இருப்பது ஏற்புடையது அல்ல. அந்த இயக்கம் அரசு சாராத ஒரு தொண்டு நிறுவனம் என்றாலும் கூட அந்த இயக்கம் பலமுறை இந்திய ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம். சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக வெறுப்பு அரசியலை பரப்புகிற இயக்கம், சாதி அடிப்படையில் இந்துக்களை அணிதிரட்டுகிற ஒரு இயக்கம், இந்து பெரும்பான்மை வாதம் என்கிற பெயரால் மக்களை பிளவுபடுத்துகிற ஒரு இயக்கம். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை 140 கோடி மக்களுக்குமான பிரதமர் மோடி சுதந்திர தின விழாவிலேயே பாராட்டி பேசி இருப்பது ஏற்புடையது அல்ல என்று வி.சி.க சுட்டிக்காட்ட விரும்புகிறது.
தூய்மை பணியாளர்கள் பிரச்சனையில் வி.சி.க தொடக்கத்தில் இருந்து தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறோம். சென்னை மாநகராட்சியில் 11 மண்டலங்கள் அ.தி.மு.க ஆட்சியில் தனியார் மையப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள். அனைத்து துறைகளையும் தனியார் மயப்படுத்துதல், இந்திய அரசுக்கு சொந்தமான துறைகளாக இருந்தாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிற துறைகளாக இருந்தாலும் தனியார் மையப்படுத்துவது தீவிரமடைந்து வருகிறது. தனியார் மயப்படுத்துவதை எதிர்க்க வேண்டும், அதை கைவிடச் சொல்லி இந்திய ஒன்றிய அரசுக்கும் வலியுறுத்த வேண்டும் என்று நாம் பொதுவாக கூறுகிற ஒன்று.
மாநகராட்சிக்குள்ளே 2 மண்டலங்களை தனியார் மயப்படுத்துகிற நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டபோது, உழைப்போர் உரிமை இயக்கம் அதை எதிர்த்து போராட்டம் நடத்தியது. அந்த இயக்கத்தின் தலைவர்களோடு தோழர்கள் பாரதி, குமாரசாமி ஆகியோரோடு நான் தொடர்பிலே இருந்தேன், விவாதித்தேன்.
அதன் அடிப்படையில் இந்த 2 மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை மட்டுமாவது என்.யு.எல்.எம் என்ற திட்டத்தின் கீழ் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். தனியார் மயப்படுத்துவதை கைவிடுவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினோம். முதல்வரையும் சந்தித்து வலியுறுத்தினோம். அமைச்சர்களிடமும் வலியுறுத்தினோம். அதையும் மீறி உயர் நீதிமன்றம், அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது என்று சொன்னதன் அடிப்படையில், அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தியதாக காவல்துறையும் அமைச்சர்களும் கூறினார்கள். எது எப்படி இருந்தாலும், நான் மீண்டும் வி.சி.க சார்பிலே தமிழ்நாடு அரசுக்கு விடுக்கிற வேண்டுகோள், தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகளில், நகராட்சிகளில், பேரூராட்சிகளில், ஊரக அமைப்புகளில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்கள் அனைவரையுமே அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும். அவர்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
தூய்மைப் பணியாளர்களை குண்டுக் கட்டாகக் கைது செய்தது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு பதில் அளித்த திருமாவளவன், “தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதை ஏற்கெனவே கண்டித்திருக்கிறோம். தூய்மைப் பணியாளர்களைக் வலுக்கட்டாயமாக கைது செய்திருக்க வேண்டியதில்லை. இந்த கைது நடவடிக்கையையும் அவர்கள் மீது வழக்கு புனைந்திருப்பதையும் கண்டிப்பதோடு, அந்த வழக்குகளையும் மீண்டும் திரும்பப் பெற வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறோம்.
தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் உங்களைக் குறிவைத்துப் பேசுகிறார்கள். குறிப்பாக தமிழிசை இந்த விவகாரத்தில் சரியாக குரல் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார் என்ற விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு திருமாவளவன் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “அவர்கள்தான் ரொம்ப தாமதமாக வந்தார்கள். நான் நாடாளுமன்றம் போயிரந்தேன். தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் 5-ம் நாள் நான் போனேன், 4-வது நாள் எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன் போனார். 6-வது நாள் முதலமைச்சரை சந்தித்தோம். 13-வது நாள் வரை அந்த போராட்டக் குழுவினரோடு தொடர்பில் இருந்தோம். அமைச்சர்கள் நேரு, சேகர் பாபுவோடு பேசினோம். தொடர்புடைய அதிகாரிகளோடு பேசினோம். தொடர்ந்து அந்த களத்தில் நின்ற வி.சி.க-வை, ஒரு நாள், ஓரிரு நிமிடங்கள் வந்து போனவர்கள் விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக திருமாவளவன் தி.மு.க கூட்டணியை விட்டு வெளியே வருவாரா என்று கேட்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “தூய்மைப் பணியாளர்கள் பிரச்னையை வைத்து அரசியல் பண்ணுவது ரொம்ப அற்பமான ஒரு அணுகுமுறை. தூய்மைப் பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதைவிட இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி தி.மு.க கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கமாக உள்ளது. இதை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களில் பெரும்பாண்மையானவர்கள் தலித்துகளாக இருக்கிறார்கள். அதனால், தலித்துகள்தான் இந்தப் பிரச்னையைப் பேச வேண்டும், திருமாவளவன்தான் இந்தப் பிரச்னையைப் பேச வேண்டும் என்கிற ஒரு பார்வையும் இருக்கிறது. இது எல்லோருக்குமான பிரச்னை. இதற்கு ஏன் அ.தி.மு.க போராடக்கூடாதா? இந்த 13 நாளும் என்ன செய்தார்கள்? கடைசி நாள் போலீஸ் அவர்கள் மீது கை வைக்கும்போதுதானே எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அதிமுக இந்த 13 நாட்களும் போராட்டத்தில் தலையிட்டிருக்க வேண்டியதுதானே. ஏன் தலையிடவில்லை. அவர்கள் தனியார் மயமாக்கினார்களே அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள். 15 மண்டலங்களில் 11 மண்டலங்களை அவர்கள் தனியார் மயப்படுத்தினார்கள் இல்லையா, அதற்கு அ.தி.மு.க-வின் பதில் என்ன?
தனியார் மயப்படுத்தும் அரசாணை 182-ஐப் போட்டதே அ.தி.மு.க-தான், இந்த தனியார் மயப்படுத்தும் வேலையைத் தொடங்கி வைத்ததே அ.தி.மு.க-தான். அரசாணை 182-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று மதுரையிலும் சென்னையிலும் போராட்டம் நடத்தியது வி.சி.க-தான். இன்றைக்கு போராடக்கூடியவர்கள் அ.தி.மு.க தனியார் மயப்படுத்தியபோது வாய் திறக்கவில்லையே. நான் தி.மு.க-வுக்கு வாக்காலத்து வாங்கவில்லை. தி.மு.க செய்தால் எதிர்க்க வேண்டும், அ.தி.மு.க செய்தால் வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதுதான் இங்கே இருக்கிற அணுகுமுறையாக இருக்கிறது. நாங்கள் தி.மு.க கூட்டணியில் இருப்பதனாலேயே இந்தப் பிரச்னைக்கு துணை போய்விடுவோம் என்று அர்த்தமா? நாங்கள் பிரச்னை இருக்கிறது என்றுதானே போய் பேசுகிறோம். நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் முதலமைச்சரிடம் போய் பேசி அழுத்தம் கொடுக்கிறோம்.” என்று திருமாவளவன் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.