தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “தி.மு.க தொடர்ந்து ஆட்சியில் இருக்கிற ஒரு அரசியல் இயக்கம். ஆளும் கட்சியாக இன்றைக்கு வீரநடை போடுகிறது. தி.மு.க-விற்கு இன்னொரு கட்சி முட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற தேவை இல்லை. அப்படியொன்றும் தி.மு.க பலவீனமாக இல்லை. தி.முக, தி.க., கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு இணைந்து இருக்கிறோம் என்றால் இவையெல்லாம் ஜனநாயக, முற்போக்கு, சமூகநீதி அரசியலை பேசுகிற இயக்கங்கள். சாதியை, வன்கொடுமையை எதிர்த்துப் பேசுகிற இயக்கங்கள். இந்த இயக்கங்கள் பலவீனப்படும் என்றால், விடுதலை சிறுத்தையும் பலவீனப்படும்.” என்று திருமாவளவன் கூறினார்.
மேலும், “நான் பேசுகிற அரசியல் தான் தி.மு.க, தி.க., பேசுகிற அரசியல். தி.மு.க-வை விழ்த்துவோம் என்றால், வி.சி.க-வையும் விழ்த்துவோம் எனப் பொருள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் தி.முகவை எதிர்த்து பேசுகிறார்கள் என்றால் அதை தி.மு,க எதிர்கொள்ளும். ஆனால், தி.மு.க-வும் நாமும் பேசுகிற அரசியல் கோட்பாட்டை எதிர்க்கிறார்கள் என்றால் அதை வேடிக்கை பார்க்க முடியாது.” என்று திருமாவளவன் பேசினார்.
தொடர்ந்து பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “என்னிடம் கூடுதலாகத் தொகுதி தருகிறோம். ஆட்சியில் பங்கு தருகிறோம். தி.மு.க கூட்டணியை விட்டு வெளியே வாருங்கள் என ஆசை காட்டினார்கள். விடுதலை சிறுத்தைகள் இதுபோன்ற அரசியல் நகர்வுகளுக்கு இடம் அளித்தது இல்லை. அசைத்து பார்த்தார்கள் அசைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஊசலாட்டத்தில் வி.சி.க இல்லை. வளைந்து கொடுப்பதால் முறித்து விடமுடியும் என நினைத்தார்கள். வளைந்துக்கொடுப்பது எல்லாம் முறிந்து விடாது எனப் புரிந்துகொண்டார்கள். என்னை யாரும் முறித்து, உடைத்து முடியாது. என்னை ஒரு துருப்பு சீட்டாக வைத்து தி.மு.க கூட்டணியை உடைத்து விடலாம் எனக் கணக்கு போட்டு தேற்றுப் போயுள்ளனர். தற்போது பழைய உத்தியை கையில் எடுத்துள்ளார்கள். அ.தி.மு.க கூட்டணியை அமித்ஷா தலைமை தாங்கி அறிவிக்கிறார். அ.தி.மு.க-வை பழனிசாமி தலைமை தாங்குகிறார் என்றால், அவர் தான் கூட்டணியை அறிவித்து இருக்க வேண்டும். அப்படி அறிவித்து இருந்தால், பழனிசாமி சுதந்திரமாக முடிவு எடுத்து இருக்கிறார் என நம்ப முடியும். அவர்களுக்கு ஒரு கணக்கு இருக்கிறது. அது தி.மு.க-வை ஒழிக்க வேண்டும் என்பது அல்ல. அம்பேத்கர், ஈ.வெ.ரா., அரசியலை வீழ்த்த வேண்டும் என்பது தான் அவர்களுடைய கணக்கு” என்று திருமாவளவன் பேசினார்.
மேலும், “சமூகநீதி அரசியலை ஒழித்து, இவர்களைச் சிதறடித்து விட வேண்டும் எனப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஜாதி பெருமையைப் பேசு என அம்பேத்கர் கூறவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் எண்ணிக்கையை விட அம்பேத்கர், ஈ.வெ.ரா புரட்சி அரசியல் மகத்தானது முக்கியமானது. அதனைப் பாதுகாக்கத்தான் விடுதலை சிறுத்தையை ஒட்டுமொத்த மக்களும் ஏற்றுக்கொள்வார்கள்” என்று திருமாவளவன் பேசினார்.
2026-ம் ஆண்டு தேர்தல் நமக்கு ஒரு சோதனை. திராவிட அரசியலை வீழ்த்துவோம் என்பதை விட, சமூக நீதி அரசியலை வீழ்த்த வேண்டும் என்கிற முயற்சி. அ.தி.மு.க கூட்டணியில் அவர்களின் தொகுதியை பறித்து, அதில் பெறும் வாக்குகளைத் தங்களின் வாக்குகள் என பா.ஜ.க கூற நினைக்கிறது. அ.தி.மு.க-வை மெல்ல மெல்ல தேய நினைப்பது தான். ஒரு பெரிய திராவிட இயக்கமான அதிமுகவை அழித்து விட்டால், அடுத்தப் பெரிய சக்தியான திமுகவை வீழ்த்தி விட முடியும். ஒட்டுமொத்தமாகப் பெரியாரின் அரிசுவடிகளை அழித்து விட முடியும் எனக் கணக்குப் போடுகிறார்கள். அதற்கு விடுதலை சிறுத்தைகள் இடம் கொடுக்க மாட்டோம். அதுவும் திமுகவிற்காக அல்ல. பெரியார், அம்பேத்கர் அரசியலுக்காக. திமுக தன்னைத் தற்காத்துக்கொள்கிற வலிமையோடு களத்தில் நிற்கிறது. அதற்கு நாம் எந்த வகையிலும் துணை நிற்கப்போவது இல்லை. தி.க.வும், திமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி போல, விசிகவும் இணைந்து மூன்று குழல் துப்பாக்கியாக செயல்படும்” இவ்வாறு திருமாவளவன் பேசினார்.