/indian-express-tamil/media/media_files/2025/04/20/fXAtsyGLudaoi7n81W29.jpg)
தி.மு.க-வை மட்டுமே நம்பி விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பதாகக் கூறி ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி நடைபெறுகிறது என்று அக்கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இன்று (ஏப்ரல் 20) தொண்டர்களுக்கான முகநூல் நேரலையில் திருமாவளவன் உரையாற்றினார். அப்போது, தேர்தல் அரசியல், கூட்டணி போன்ற பல்வேறு தகவல்களை அவர் எடுத்துரைத்தார். அதன்படி, "திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமே நம்பி விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். அத்தகைய அற்பர்களின் அவதூறுகளை நாம் கடந்து செல்கிறோம்.
இந்த விவகாரத்தில் இயக்க தோழர்கள் தெளிவு பெற வேண்டும். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூடுதலாக பணம் கிடைக்கும் இடத்தில் உறவு வைத்துக் கொள்வது, கூட்டணியை தீர்மானிப்பது போன்ற விஷயங்கள் ஒன்றும் ராஜ தந்திரம் இல்லை.
அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல். நாம் அதனை பொருட்படுத்தவில்லை. இது போன்ற விஷயங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈடுபாடு காண்பிக்காமல் இருக்கிறது. எந்த எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இன்றி ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் அதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்.
அந்த தெளிவு விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் இருக்கிறது. அதற்கான தொலைநோக்கு பார்வை நம்மிடம் இருக்கிறது. இவை அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாதவர்கள், வாய் புளித்ததோ; மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் நமக்கு எதிராக தகவல்களை தொடர்ந்து பரப்புகின்றனர்.
மற்ற கட்சிகளை போன்று அல்லாமல், முன்மாதிரியாக வி.சி.க இயங்குகிறது. இதனை காலம் சுட்டிக் காண்பித்து வருகிறது" என அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.