சனாதன தர்மத்தை நிலைநாட்ட பாடுபட்ட சாவர்க்கரின் பிறந்தநாள் அன்று நாடாளுமன்றம் திறப்பு விழா நடத்துவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருச்சியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், கள்ளச்சாராய இறப்புகள் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. கள்ளச்சாராயம் உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்தும், பூரண மதுவிலக்கு கேட்டும், ஒரு இயக்கம் துவங்க முடிவு செய்துள்ளோம். பூரண மதுவிலக்கை அமல்படுத்த, அ.தி.மு.க., சார்பில் போராட்டம் அறிவித்தால், அந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பங்கேற்கும்.
இதையும் படியுங்கள்: விழுப்புரம்: கோவிலுக்குள் தலித்துகளை அனுமதிக்க ஆதிக்கச் சாதியினர் ஒப்புதல்
பார்லிமென்டின் இரு அவைகளுக்கும் தலைவராக இருப்பவர் ஜனாதிபதி. அவர் தான் புதிய பார்லிமென்ட் கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும். அடிக்கல் நாட்டு விழாவில், அப்போதிருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புறக்கணிக்கப்பட்டார். திறப்பு விழாவில் இப்போதுள்ள ஜனாதிபதி புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதனால், அனைத்து எதிர்க்கட்சிகளும், புதிய பார்லிமென்ட் கட்டடம் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. வி.சி.க.,வும் திறப்பு விழாவை புறக்கணிக்கிறது.
அதுமட்டுமில்லாமல் மே 28-ம் தேதி என்பது சாவர்க்கரின் பிறந்த நாளாக உள்ளது. சனாதன தர்மத்தை நிலைநாட்ட பெரிதும் பாடுபட்டவர் சாவர்க்கர். அவர் பிறந்த நாளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களுக்காக நாங்கள் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளோம். இந்த விழாவிற்கு குடியரசு தலைவரும் அழைக்கப்பட வேண்டும். திறப்பு விழா தேதியும் மாற்றப்பட வேண்டும். இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil