Advertisment

இந்த கருத்தியல் அடிப்படையில் கூட்டணி பெயரை இந்தியா என ஏற்றுக் கொண்டோம்: பெங்களூருவில் திருமாவளவன் பேட்டி

சிதறிப்போன கூட்டணியை ஒன்றிணைக்கவே பா.ஜ.க கூட்டத்தை கூட்டியுள்ளது; கருத்தியலின் அடிப்படையில் INDIA என்ற பெயரை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்; பெங்களூருவில் திருமாவளவன் பேட்டி

author-image
WebDesk
New Update
thirumavalavan

திருமாவளவன்

இந்தியாவின் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க பா.ஜ.க துடிக்கிறது, இதை நடக்கவிடாமல் தடுக்க ’INDIA’ என்ற கூட்டணி ஒன்றுபட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Advertisment

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.,வை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றுபட்டு ஆலோசனை நடத்தி வருகின்றன. முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2 ஆவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்: ‘எதிர்க்கட்சி கூட்டம் நடக்கும் போதெல்லாம் தி.மு.க-வை குறிவைத்து இ.டி சோதனை’: பெங்களூருவில் ஸ்டாலின் குற்றச்சாட்டு

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே, தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ம.தி.மு.க தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கொங்கு நாடு ஈஸ்வரன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 26 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசித்தனர். கூட்டத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.,வை வீழ்த்த வியூகம் அமைப்பது, வலுவான முன்னணியை முன்வைப்பது, எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு புதிய பெயர் வைப்பது போன்றவை ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கூட்டத்தின் முடிவில் 26 எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA (இந்தியா) என்ற பெயர் வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கூட்டணிக்கான பெயர் தொடர்பான முன்மொழிவு நடந்தது. ஒவ்வொருவரும் ஒரு கருத்தை தெரிவித்தோம். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி INDIA - இந்தியா என்று வரக்கூடிய வகையில் பெயரை முன்மொழிந்தார். வி.சி.க சார்பில் சேவ் இந்தியா அலையன்ஸ் (Save India Alliance) அல்லது மதச்சார்பற்ற இந்தியா கூட்டணி (Secular India Alliance) என்ற பெயர் முன்மொழியப்பட்டது.

We for India என்ற பெயரை வைக்கலாம் என்று இடதுசாரி அமைப்புகள் தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். Indian Main Alliance அல்லது Indian Main Front என்கிற பெயரில் இந்த கூட்டணிக்கு பெயர் வைக்கலாம் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பரிந்துரைத்தார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ Indian peoples Alliance என்ற பெயரை முன்மொழிந்தார். இப்படி கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் தங்களது கருத்தை முன்வைத்தனர்.

தி.மு.க சார்பில் முதல்வர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி முன்மொழிந்ததை சரியென்று வழிமொழிந்தார். ராகுல் காந்தியும் அதையே வழிமொழிந்தார். இறுதியில் அனைவரும் ஒருங்கிணைந்து INDIA (இந்தியா) என்கிற பெயரிலேயே இந்த கூட்டணியை அமைப்பது என்ற ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டணியின் பெயரும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, இது தன்னுடைய இந்தியா என உரிமை கோருகிறார். குறிப்பிட்ட சமூகத்திற்கான இந்தியா என்று உரிமை கோருகிறார். இது மக்களுக்கான இந்தியா என்ற கருத்தியலின் அடிப்படையில் INDIA என்ற பெயரை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இந்தியாவின் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க பா.ஜ.க துடிக்கிறது, இதை நடக்கவிடாமல் தடுக்க ’INDIA’ என்ற கூட்டணி ஒன்றுபட்டுள்ளது.

சிதறிப்போன கூட்டணியை ஒன்றிணைக்கவே தேசிய ஜனநாயக கூட்டணியை பா.ஜ.க கூட்டத்தை கூட்டியுள்ளது. பிரதமர் மோடி இந்தியாவை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சொந்தமானது என்று கூறி ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகிறார். மக்களை பிளவுப்படுத்தி வருகிறார். இதனைத் தடுக்கவே இந்தியா (Indian National Developmental Inclusive Alliance) என்ற பெயரில் கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Dmk Stalin Thirumavalavan Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment