Advertisment

'மோடி, அமித்ஷா மோசடிக் கும்பல்': வி.சி.க மாநாட்டில் திருமா கடும் தாக்கு

"மோடி, அமித் ஷா கும்பல், அவர்கள் சீட்டிங் கும்பல். ஏமாற்றுகிற கும்பல். மோசடிக் கும்பல். மக்களை ஏய்க்கிற கும்பல். எத்தர்கள் அவர்கள்." என்று திருச்சியில் நடந்த வி.சி.க மாநாட்டில் திருமாவளவன் பேசினார்.

author-image
WebDesk
New Update
Thirumavalavan speech at VCK Vellum Sananayagam conference Trichy Tamil News

"சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களை ஏய்த்து பிழைக்கிற மோசடிக் கும்பலின் கைகளில் இந்த நாடு சிக்கிக்கொண்டுள்ளது." என்று திருச்சியில் நடந்த வி.சி.க மாநாட்டில் திருமாவளவன் பேசினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

க.சண்முகவடிவேல்

Advertisment

VCK | Thirumavalavan: திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், 'வெல்லும் சனநாயகம்' என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தலைமை ஏற்று உரையாற்றிய தொல்.திருமாவளவன் பேசியதாவது:- 

"இந்த மாநாடு, பா.ஜ.க-வுக்கு எதிரான மாநாடு. ஆர்.எஸ்.எஸ்ஸூக்கு எதிரான மாநாடு. சங்பரிவார்களுக்கு எதிரான மாநாடு. சனாதன சக்திகளுக்கு எதிரான மாநாடு. பா.ஜ.க-வை ஆட்சி அதிகாரப் பீடத்தில் இருந்து விரட்டியடிக்கிற மாநாடு. தமிழ்நாடு நீங்கள் நினைப்பதுபோல் வடமாநிலங்களில் உள்ள மாநிலங்கள் போல் அல்ல. இது சிறுத்தைகளின் மாநிலம். 

பொதுவாக சிறுத்தைகள் காடுகளில்தான் இருக்கும். அதுதான் பொது வழக்கம். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒவ்வொரு கிராமங்களிலும் சிறுத்தைகள் இருக்கிறார்கள். ஆட்டுக் குட்டிகள்இங்கே வந்துப்பார்த்தால் தெரியும். வாலாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.இங்கே அவர்கள் கனவுத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது. 

தமிழ்நாட்டு எல்லையோரங்களில் படைவீரர்களாக, பாதுகாப்பு வீரர்களாக சிறுத்தைகள் இருக்கிறோம். அதைச் சொல்கிற மாநாடு இந்த மாநாடு. சனாதன சக்திகளை எச்சரிக்கிற மாநாடு. மோடியை ஆட்சி அதிகாரப் பீடத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். இனி ஒருபோதும் தாமதிக்க முடியாது. வேடிக்கை பார்க்க முடியாது. இது வெறும் தேர்தல் அரசியல் கணக்கல்ல. இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும். நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். ஜனநாயகத்துக்கு பேராபத்து சூழந்துள்ளது. ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றால், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் வகுத்தளித்த அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து. அதனால்தான், இந்த மாநாட்டுக்கான வரவேற்பு முகப்பு வளைவில் மூன்று வாசல்கள் இருக்கின்றன.

ஒரு வாசல் சுதந்திர வாயில். இன்னொரு வாயில் சமத்துவ வாயில். இன்னொரு சாயில் சகோதரத்துவ வாயில். இந்த வாயில்களுக்கு எல்லாம் வள்ளுவர் வாயில், வள்ளலார் வாயில் என்றுகூட பெயர் வைக்கலாம். கௌதம புத்தர் வாயில் என்றுகூட பெயர் வைக்கலாம். அப்படி வைக்கவில்லை. இந்த மாநாட்டின் விழாநாயகன் யாருமில்லை, அரசியலைப்புச் சட்டம்தான். புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்திருக்கிற அரசமைப்புச் சட்டம்தான். மேலே பாருங்கள் உச்சத்திலேயே அம்பேத்கர். இடதுபக்கத்தில் மாமேதை காரல் மார்க்ஸ். வலதுப்பக்கத்தில் தந்தை பெரியார். 

அம்பேத்கருக்கு கீழ் அரசியமைப்புச் சட்டத்தின் முகப்புரை. அரசியமைப்பு முகப்புரைதான் இந்த மாநாட்டின் கருப்பொருள்.
இந்திய அரசியல் வரலாற்றிலேயே விடுதலை சிறுத்தைகளின் மாநாடு தான் 20 தலைவர்கள் ஓரணியில் திரண்டு, கைகோத்து நிற்காமல், ஜனநாயக சுடரை ஏந்தி நின்றோம். ஏன், நாடு சனாதன இருள் சூழ்ந்து கிடக்கிறது. 

மோடி, அமித் ஷா கும்பல், அவர்கள் சீட்டிங் கும்பல். ஏமாற்றுகிற கும்பல். மோசடிக் கும்பல். மக்களை ஏய்க்கிற கும்பல். எத்தர்கள் அவர்கள். சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களை ஏய்த்து பிழைக்கிற மோசடிக் கும்பலின் கைகளில் இந்த நாடு சிக்கிக்கொண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் அவர்கள் என்ன சாதித்திருக்கிறார்கள்?. வறுமையை ஒழித்தார்களா?. வேலைவாய்ப்பு தந்தார்களா?. வீட்டுமனை கொடுத்தார்களா?. புதிய வீடுகளை கட்டித் தந்தார்களா?. விவசாயத்தை மேம்படுத்தினார்களா?. கூலி வேலைக்கு உத்தரவாதம் தந்தார்களா?. பத்தாண்டுகளில் என்ன சாதித்தார்கள். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்று சொன்னாரே, மோசடி பேர்வழி.

அரசியலைப்புச் சட்டத்தைப் போய் தொட்டு கும்பிடுகிறார். அம்பேத்கர் காலை தொட்டுக் கும்பிடுகிறார். ராமர் கோயிலுக்கு போய் சாஷ்டாங்கமாக, அப்படியே தரையில் படுத்து எழுந்திருக்காமல், வடிவேல் மாதிரி கிடக்கிறார். உலகமகா நடிப்பு. உலக மகா நடிகர் மோடி. மக்களை ஏய்க்கிறார். அவரால் இந்த தேர்தல் அரசியலில், 'இதை சாதித்தேன், அதை சாதித்தேன். இந்த பத்தாண்டுகளில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம்' என்று சொல்ல முடியுமா?. 

அயல்நாட்டு வங்கியில் தேங்கி கிடக்கிற கருப்பு பணத்தை கொண்டு வந்து உங்கள் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபா போடுவேன் என்று சொன்னாரே, உங்களுக்கு வந்ததா?. உங்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு இருக்கிறதா, இல்லையா?. வங்கி கணக்கில் பணம் வந்ததா?. அப்படி என்றால் மோடி மோசடி பேர்வழியா இல்லையா?. 15 லட்சம் பணம் தரவில்லை. அந்த கருப்பு பணத்தைப் பற்றி பேசவில்லை. மோடி, அமித் ஷாவின் சேவை, அதானிக்கும், அம்பானிக்கும் எடுபிடி வேலை செய்வது தான். அதுதான் மோடி, அமித் ஷாவின் பத்தாண்டுகால சாதனை.

பல லட்சம் கோடிகளை ஏமாற்றிவிட்ட தொழிலதிபர்கள் எல்லாம் வட இந்தியக்காரர்கள். எல்லா மோடி சமூகத்தைச் சார்ந்த பனியா கும்பலைச் சார்ந்த தொழிலதிபர்கள். விஜய் மல்லையா உள்பட. பல லட்சம் கோடி தள்ளுபடி செய்தார்கள். நீயும், நானும் கடன் வாங்கினால் தள்ளுபடி செய்கிறார்களா?. படிப்பு, கல்விக்கு கடன் தருகிறார்களா?. ஏதேனும் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொள்ள கடன் கேட்கிறோமே, வங்கிகளில் கடன் தருகிறார்களா?.

ஆனால், லட்சக்கணக்கில் கடன் தந்து, அவர்களால் செலுத்தமுடியவில்லை என்று தள்ளுபடி செய்துவிட்டு, அதையெல்லாம் ஈடு செய்வதற்கு, அப்பாவி மக்களின் மீது வரி போடுகிறார்கள். பொதுத்துறைகளை எல்லாம் தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள். கனிம வளங்களைச் சுரண்டுகிறார்கள். இயற்கை வளங்களை கொள்ளையடிக்கிறார்கள். கூடங்குளம் அணு உலை, போக்குவரத்து, கடலோர துறைமுகங்கள் எல்லாம் தாரை வார்க்கிறார்கள். அதானி ஏர்போர்ட், அதானி சீபோர்ட், அதானி தெர்மல் பவர்பிளான்ட், அதானி கன்ஸ்ட்ரக்ஷன் என்று எல்லா துறைகளிலும் அதானிதான், அம்பானிதான் யாருக்கு ஆட்சி செய்கிறார் மோடி?. அப்பாவி இந்துக்களுக்கா?.

நான்கு வகை இந்துக்கள் இருக்கிறார்கள். பிராமண இந்து வேறு, சத்திரிய இந்து வேறு, வைஷ்ய இந்து வேறு, சூத்திர இந்து வேறு. இங்கு இருக்கும் நாமெல்லாம் இந்துக்களே அல்ல. புத்தரின் வழிவந்த வம்சம். வாரிசுகள். கௌதம புத்தரின் வாரிசுகள் நாம். நாம் அவர்னாஸ். சூத்திர இந்துக்களான ஓ.பி.சி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது மட்டுமல்லாமல், அதை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதற்காகதான், ராமர் பெயரை சொல்கிறார்கள். ஜெய்ஸ்ரீராம் என்று முழங்குகிரார்கள். 

ராமர் கோயிலை கட்டிமுடிப்பதற்கு முன்பே திறக்கிறார்கள். இவை எல்லாம் திசைதிருப்புகிற சதித்திட்டம். யாரை ஏய்க்க?. சூத்திர இந்துக்களை ஏய்க்க. 'நீ கல்வியை கேட்காதே, கடனுதவியை கேட்காதே, மனைப்பட்டா கேட்காதே, வீடு கேட்காதே, வேலை கேட்காதே, பொருளாதார தன்னிறைவு பற்றி பேசாதே, ஜெய் ஸ்ரீராம் சொல்லு, ஜெய் ஸ்ரீராம் சொல்லு. அப்பாவி உழைக்கும் இந்து மக்கள், சூத்திர இந்துக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று சொல்வதற்கான மாநாடு தான், சிறுத்தைகளின் மாநாடு. தோழர்களே, 33 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். இந்த தீர்மானங்களில் ஒட்டுமொத்த இந்திய பிரச்னைகள் அனைத்தும் உள்ளடக்கமாக இருக்கின்றன.

இந்த இயக்கம், தேசிய அளவில் பார்வை கொண்ட ஒரு பேரியக்கம். இந்த இயக்கம் விளிம்பு நிலை மக்களுக்கான பேரியக்கம். தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு அடுத்தப்படியாக எல்லா கிராமங்களிலும் கிளைகளை கொண்டிருக்கிற ஒரு மகத்தான பேரியக்கம். 38 மாவட்டங்களில் இருந்தும் ஐந்து லட்சத்துக்கும் மேலான சிறுத்தைகள் காவிரிக் கரையில் கூடியிருக்கிறார்கள். ஒருபுறம் முதலாளிய சக்திகளுக்கு தொண்டு செய்கிற, கார்ப்பரேட்மயமாதல். இதுதான் பா.ஜ.க-வின் பணி. எல்லா பொதுத்துறைகளையும் தனியார்மயமாக்கி, சமூகநீதிக்கு குழிதோண்டுகிறார்கள். நாடு முழுவதும் இந்தியை திணித்து, சமஸ்கிருதத்தை திணித்து, சனாதனத்தை நிலைநாட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள். ஏதோ இவர்களுக்கு மட்டும்தான் ராமர் வேண்டிய கடவுள் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மோடி, அமித் ஷா பிறப்பதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த மண்ணில் ராமாயணம் பரவியிருக்கிறது. எங்கள் அப்பா பெயரும் ராமசாமி தான். என் அப்பாவின் பெயரை அதற்காகவே தொல்காப்பியன் என்று மாற்றி வைத்தேன்.

என் தந்தை பெயர் ராமசாமி, தந்தை பெரியாரின் பெயர் ராமசாமி. எங்களுக்கும் ஒரு ராமர் உண்டு. அந்த ராமர் தந்தை பெரியார். எங்களுக்கும் ஒரு ராமர் உண்டு. அந்த ராமர் கன்ஷிராம். அவரும் ராமர்தான். எங்களுக்கும் ஒரு ராமர் உண்டு. அம்பேத்கரின் அண்ணன் பலராமன். ஆக, எங்கள் சமூகத்தில் ஏற்கனவே ராமர் அறிமுகமாகி உள்ளார். உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை. நாங்கள் ராமர் பக்தியை எதிர்க்கவில்லை. ராமர் அரசியலை எதிர்க்கிறோம். ராமரை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் சனாதன கும்பலின் சதி அரசியலை எதிர்க்கிறோம். 

எனக்கும், சமஸ்கிருதத்துக்கும் சம்மந்தம் இல்லை. உனக்கும், தமிழுக்கும் சம்மந்தம் இல்லை. ஆனால், இங்கே அவர் நாடகமாடுகிறார். எல்லாருக்கும் விழா எடுக்கிறார்.  தோழர்களே இந்த ஏமாற்று வேலைக்கு, தமிழ்நாட்டில் இடமில்லை. பா.ஜ.க-வை வீழ்த்துவோம். அவர்களை அதிகாரப் பீடத்தில் இருந்து விரட்டி அடிப்போம். இந்தியா கூட்டணியை வெற்றிபெற வைப்போம். வெல்லும் ஜனநாயகம்" என்று பேசினார்.
இந்த மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் 33 தீர்மானங்களை வாசித்தார். ஆளுநர் பதவியை ஒழித்திடுவோம். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் ஆளுநர் பதவி ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக வழங்கவேண்டும் என இந்தியா கூட்டணியை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவு, பெரும்பான்மைவாத அரசியலைப் புறக்கணிப்பு, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுதல், சென்னையை இந்தியாவின் 2வது தலைநகராக அறிவித்தல், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், வழக்காடு மொழியாகத் தமிழை அறிவித்தல், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையைத் திரும்பப் பெற வேண்டும், மாநில அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும், அமைச்சரவையிலும், மேலவைகளிலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சட்டம் இயற்றுதல், பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குதல், வகுப்புவாத வன்முறைத் தடுப்பு சட்டத்தை இயற்றுதல் உள்பட 33 தீர்மானங்களை தொல் திருமாவளவன் வாசித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Vck Thirumavalavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment