கூட்டணி குறித்த துரைமுருகனின் கருத்துக்கு பிறகு, கடந்த வாரங்களில் திமுக பற்றியும் அதன் தோழமை கட்சிகள் குறித்துமே அதிகம் பரபரப்பாக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, மதிமுக, வி.சி. கட்சிகள்.
தேர்தல் சமயத்தில் தான் கூட்டணி இறுதியாகும் என்றாலும், ஊடகங்களில் நெருக்கடி காரணமாகவும், சமூக தளங்களில் ஏற்பட்ட காரசாரமான விவாதங்கள் காரணமாகவும், திருமாவும், வைகோவும் அடுத்தடுத்து ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசி இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திருமா சந்தித்ததும், அதிமுக அமைச்சர்களின் புயல் நிவாரணப் பணிகளை வைகோ பாராட்டியதுமே, ஸ்டாலினை எரிச்சல் அடைய வைத்து, துரைமுருகன் மூலமாக எச்சரிக்கை விடுத்தார் என்று கூறப்படுகிறது.
ஆனால், ஸ்டாலினே எதிர்பார்க்காதபடி, இந்த விவகாரம் பெரிதாக, 'அட விடுங்கப்பா' என்று எண்ணும் அளவிற்கு வந்துவிட்டார். தற்போது, கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா, ராகுலை அழைக்கவும், பிரதமர் மோடிக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் டெல்லி சென்றுவிட்டார்.
ஆனால், இப்போது அந்த இரு தோழமை கட்சிகளும் வேறு விவகாரங்களில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன.
தனியார் சேனல் ஒன்றில் பேசிய வைகோ, தலித்துகளை சிறுமைப்படுத்தி விட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளர் வன்னியரசு குற்றம் சாட்ட, அதற்கு வைகோ, "என்னை போய் சாதீய ஆதிக்கவாதி என்று சொல்கிறார்கள். 2006 தேர்தலின் போது, அதிமுக கூட்டணியில் வி.சி.க.வோடு நாமும் இடம் பிடித்திருந்தோம். எனக்கு போன் செய்த திருமாவளவன், 'தேர்தல் செலவுக்கு கூட காசு இல்லைனு' புலம்பினார். உடனே கலிங்கப்பட்டிக்கு வரச்சொல்லி, அவருக்கு 30 லட்ச ரூபாய் பணத்தை தேர்தல் செலவுக்கு கொடுத்தேன். அப்போது எனக்கே செலவுக்கு பணம் கிடையாது. தேர்தல் நெருக்கத்தின் போது, 'பூத் கமிட்டிக்கு கொடுக்க கூட காசு இல்லைண்ணே'னு சொன்னார். உடனே, எனக்கு தெரிந்த 10 பேரிடம் ஆளுக்கு இரண்டு லட்ச ரூபாய் கடன் வாங்கி, 12 மணி நேரத்துல 20 லட்ச ரூபாய் புரட்டி கொடுத்தேன். இதை எங்கயாவது நான் சொல்லியிருக்கேனா? மனசு ரொம்ப வெந்து போயிருக்கு, அதனால தான் இதையெல்லாம் சொல்றேன்!” என்று கொட்டித் தீர்த்தார்.
இந்த நிலையில், இந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளித்துள்ள திருமாவளவன், "எனக்கு உதவி செய்யுங்கள் என்று நான் வைகோவிடம் உதவி கேட்கவில்லை. அவரிடம் மட்டுமல்ல யாரிடமும் நான் உதவி கேட்டதில்லை. ஆனால், ஜி.கே.மூப்பனார், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் அவர்களாகவே விருப்பப்பட்டு எனக்கு உதவி செய்தனர். அதுபோலத் தான் வைகோவும் எனக்கு பணம் அளித்தார்.
2006 தேர்தலின் போது, வைகோ எனக்கு 50 லட்சம் தரவில்லை. 30 லட்சம் கொடுத்தார். தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த போது, வைகோ அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு அழைத்தார். விடியற்காலை 1.30 மணியளவில் என் கட்சியினர் சிலருடன் அங்கு சென்றேன்.
இரவு உணவு சாப்பிட்ட பிறகு, 'தேர்தல் செலவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?' என்று கேட்டார். நான் எனது சிரமங்களை அவரிடம் கூறினேன். 'ஜெயலலிதா என்னிடம் 25 லட்சம் மட்டும் தான் கொடுத்தார். அதிலேயே சமாளித்துக் கொள்ளுமாறு கூறினார்' என்றேன். உடனே, நான் கேட்காமலேயே வைகோ எனக்கு 30 லட்சம் கொடுத்தார் .
தேர்தல் என்று வந்தால், அதில் நிறைய அடிமட்ட வேலைகள் இருப்பது பொதுவானது. சில சமயங்களில், மற்ற கட்சிகள் போட்டியிடும் இடங்களுக்கு கூட சென்று நாம் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். அதற்கு நாம் நிறைய செலவு செய்தாக வேண்டும். எனவே, அது ரகசியமாக வாங்கிய பணமல்ல. அது தேர்தல் பணிக்காக கொடுக்கப்பட்ட நிதி. ஆனால், நான் வேறு பணிகளுக்காக பணம் வாங்கினேன் என்று வைகோ கூறியிருப்பது முற்றிலும் தவறானது" என்று தெரிவித்துள்ளார்.