காவல் வன்முறைகளை முற்றாக ஒழிக்க வேண்டும் - வி.சி.க நிறைவேற்றிய 5 தீர்மானங்கள் முழு விவரம்

வி.சி.க-வின் தலைமை அலுவலகமான சென்னை அம்பேத்கர் திடலில் நடைபெற்ற அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில், காவல் வன்முறைகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வி.சி.க-வின் தலைமை அலுவலகமான சென்னை அம்பேத்கர் திடலில் நடைபெற்ற அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில், காவல் வன்முறைகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
VCK high level meeting

வி.சி.க தலைவர் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் சென்னை அம்பேத்கர் திடலில் வியாழக்கிழமை நடைபெற்றது. Photograph: (x/@thirumaofficial)

வி.சி.க-வின் தலைமை அலுவலகமான சென்னை அம்பேத்கர் திடலில் நடைபெற்ற அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில், காவல் வன்முறைகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.   

Advertisment

வி.சி.க தலைவர் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் சென்னை அம்பேத்கர் திடலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிந்தனைச் செல்வன், ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் பாபு மற்றும் எழில் கரோலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இந்த கூட்டத்தில், காவல் வன்முறைகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் முழு விவரம் வருமாறு:

1. மத அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்து, நல்லிணக்கத்தை காக்க வேண்டும்

Advertisment
Advertisements

தமிழ்நாட்டில் மதத்தின் அடிப்படையில் வன்முறை வெறியாட்டங்களை நிகழ்த்த பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் மும்முரமாகக் களமிறங்கியுள்ளன. முருகன் பெயரால் அந்த சதித்திட்டத்தை நிறைவேற்ற முயலுகின்றன. இதை எதிர்கொள்வதற்கான சரியான அணுகுமுறை, அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்பதே ஆகும்.

பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளின் மதவாத சதித்திட்டத்தை முறியடித்து, தமிழ்நாட்டில் நல்லிணக்கச் சூழலைக் காக்க, மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என இந்த உயர்நிலைக் குழுக் கூட்டம் அறைகூவல் விடுக்கிறது.

2. காவல் வன்முறைகளை முற்றாக ஒழிக்க வேண்டும்

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்த இளைஞர் அஜித் குமார், காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைந்து எடுத்த நடவடிக்கைகளை வரவேற்கும் அதே நேரத்தில், காவல் வன்முறைகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (BNS) பிரிவு 120(1) மற்றும் 120(2) இன் கீழ் காவல்துறை அதிகாரிகள் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக சித்திரவதை செய்வது குற்றமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 இன் பிரிவு 379 இன் கீழும் காவல் நிலையங்களில் சித்திரவதை தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு சட்டப் பாதுகாப்புகள் இருந்தும், காவல் வன்முறைகள் தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கின்றன. இது காவல்துறையினருக்கு மனித உரிமைகள் குறித்து மதிப்பு இல்லை என்பதையே காட்டுகிறது.

எனவே, காவல்துறையினருக்கு மனித உரிமைகள் குறித்துப் பயிற்சி அளிப்பதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

மேலும், காவலர்களால் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட அஜித் குமார் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கி, அந்த தொகையை குற்றமிழைத்த காவலர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

3. உயர்கல்வி மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள உதவித் தொகைகளை விடுவிக்க வேண்டும்

தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் SC, ST, OBC மாணவர்களுக்கு படிப்பு உதவித் தொகை வழங்கப்படாத நிலை நீடிக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மட்டும் சுமார் 8,000 SC, ST, OBC மாணவர்களுக்கு ரூ.29 கோடி படிப்பு உதவித் தொகை நிலுவையில் உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உயர்கல்வி பயிலும் SC, ST, OBC மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள படிப்பு உதவித் தொகைகளை உடனடியாக விடுவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

மேலும், 2025 ஆம் ஆண்டுடன் முடிவடையும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்பதற்காக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

4. அரசமைப்புச் சட்டத்திலிருந்து செக்யூலரிசம் என்ற சொல்லை அகற்றும் முயற்சியைத் தடுப்போம்: 

“ அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் செக்யூலரிசம், சோஷலிசம் ஆகிய சொற்கள் முதலில் இடம்பெறவில்லை . முகப்புரை என்பது என்றென்றும் நீடிக்கக்கூடியது ஆனால் சோஷலிசம் அப்படி என்றென்றும் நீடிக்கக்கூடியதா? செக்யூலரிசம் என்ற சிந்தனை முன்பே இருந்தது, அது ஆட்சி நிர்வாகத்தின் அங்கமாகவும் இருந்திருக்கலாம். ஆனால் அந்த சொல் முகப்புரையில் இருக்க வேண்டுமா என்பதைச் சீராய்வு செய்ய வேன்டும்” என ஆர். எஸ். எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தரேய ஹொஸபாலே  குறிப்பிட்டிருக்கிறார் ( தி இந்து 27.06.2025) அவசரநிலைக் காலத்தின் 50 ஆவது ஆண்டை அனுசரிக்கும்போதே அந்தக் கருத்தை அவர் வெளியிட்டிருக்கிறார்.

அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் செக்யூலரிசம், சோஷலிசம் ஆகிய சொற்களை நீக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. அவசரநிலைக் காலத்தில்தான் அந்தச் சொற்கள் முகப்புரையில் சேர்க்கப்பட்டன என்பதால் அவற்றை நீக்கவேண்டும் என்பதையே அவசரநிலைக் காலத்தின் 50 ஆவது ஆண்டை நினைவுகூரும் பிரச்சாரத்தின் முதன்மையான அம்சமாக அவர்கள் ஆக்கியுள்ளனர். இது, மதச்சார்பின்மைக்கு எதிரான சனாதன சக்திகளின் தாக்குதல் தீவிரமடைந்திருப்பதையே காட்டுகிறது. எனவே,  மதச்சார்பின்மை என்னும்  கருத்தாக்கத்தைப் பாதுகாக்க முன்னுரிமை அளிக்குமாறு சனநாயக சக்திகளை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.


5. மதச்சார்பின்மையைப் பாதுகாப்போம் பெருந்திரள் பேரணியின் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்துவோம்: 

திருச்சியில் விசிக சார்பில் ஜூன் 14 ஆம் நாள் நடைபெற்ற ‘மதச்சார்பின்மையைப் பாதுகாப்போம்!- பெருந்திரள் பேரணி’ மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அந்தப் பேரணியில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களை மக்களிடம் பரவலாக எடுத்துச்செல்ல வேண்டும். எனவே, ஜுலை மாதத்துக்குள் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்டத்துக்கு ஒரு பொதுக்கூட்டமாவது அதற்கென நடத்தப்பட வேண்டும். அந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்வது, அதன் மூலம் மதச்சார்பின்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது என இக்கூட்டம் முடிவு செய்கிறது.

Vck

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: