உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மாபெரும் ஜனநாயகத் திருவிழா பொதுத் தேர்தல் திருவிழா நடந்து வருகிறது. இந்த மக்களவைத் தேர்தலில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல் என்று தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதேநேரத்தில், புதிய அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில், வி.சி.க தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தோகுதியில் பானை சின்னத்திலும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றன. ஆனால், இந்த முறை இருவருமே பானை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக திருமாவளவன் தெரிவித்திருந்தார். எளிய மக்கள் பயன்படுத்தும் பொருள் பானை, அந்த பானை சின்னத்தை மீண்டும் கேட்டிருப்பதாகக் கூறினார்.
இந்த நிலையில்தான், மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் மண்பானை தங்கள் சமுதாயத்தின் அடையாளம் என்றும் அதை எந்த அரசியல் கட்சிக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கும் தேர்தல் சின்னமாகத் தரக்கூடாது என்று ஊடகங்கள் மூலமாக தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனால், மக்களவைத் தேர்தலில் வி.சி.க பானை சின்னம் பெறுவதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மண்பாண்ட தொழிலாளர்கல் சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது: “மண்பாண்டம் செய்வதை தொழிலாக செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் 10 லட்சம் பேர் மண்பாண்டம் செய்வதை தொழிலாக செய்து வருகிறோம். எங்களுடைய குலத்தொழில் மண்பானை செய்வது, எங்களுடைய குலாளர் சமுதாயம் தமிழ்நாட்டில் பல பிரிவுகளாக 60 லட்சம் பேர் இருக்கிறோம். ஆனால், அந்த மண்பானையை இன்னொரு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னமாக கொடுத்ததனால், எங்களுடைய சமுதாயம் இழிவுபடுத்துவது போல ஆகிறது. ஏனென்றால், ஒரு பானை சின்னத்தை அரசியல் கட்சிக்கு கொடுத்ததனால், சுயேச்சை வேட்பாளர்கள் யாருக்காவது அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் கொடுத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சியினர் எங்கள் மண்பானையைப் பற்றி தாக்கி பேசும்போதும் எங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்துவது போல தெரிகிறது. அதனால், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு, மண்பானையை எந்தவொரு அரசியல் அமைப்புக்கோ, எந்தவொரு சாதி அமைப்புக்கோ, எந்தவொரு சுயேச்சை வேட்பாளருக்கோ மண்பானையை தேர்தல் சின்னமாகக் கொடுக்கக் கூடாது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பை வைத்துள்ளோம்.
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே தனி நலவாரியம் இருந்தது. கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, அவர்களுடைய ஆட்சியில் மண்பானை தொழிலாளர்கள் நலவாரியம் இருந்தது. இப்போது மண்பானை தொழிலாளர்கள் நலவாரியம் அமைக்கவில்லை. அதனால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு மூலமாக மண்பானை தொழிலாளர்கள் நலவாரியம் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம்.
எங்கள் சமுதாயத்துக்கு மொத்தமாக மண்பானையை அடையாளமாக வைத்திருக்கிறோம். இன்னொரு அரசியல் கட்சிக்கு மண்பானையை சின்னமாகக் கொடுக்கும்போது, எங்கள் சமுதாயம் தெரியாமல் போய்விடுகிறது. அதனால்தான், சொல்கிறோம். எங்களுக்கு அடையாளமே அது ஒன்றுதான். அதையே, இன்னொரு அரசியல் கட்சிக்கு கொடுத்துவிட்டு அதையே அவர்கள் சின்னமாகப் பயன்படுத்தினார்கள் என்றால், நாங்கள் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். குலாளர்கள் கொடிகளில் மண்பானை சின்னத்தைதான் போட்டிருக்கிறோம். அதனால், அவர்களா, நாங்களா என்று பிரச்னைதானே. பானை சின்னத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கொடுக்கக் கூடாது என்று சொல்லவில்லை, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் கொடுக்கக் கூடாது என்று கூறுகிறோம். வி.சி.க-வுக்கு பானை சின்னம் கொடுத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் பானை சின்னத்தைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள். மண்பானையை உருவாக்கி வேகவைத்து சாப்பிட்ட பிறகுதான், நாகரிகமே வளர்ந்தது. மண்பானையை வைத்துதான் நாகரிகம் வந்தது. இந்தியா முழுக்க எங்கள் சமுதயாம் இருக்கிறது. தமிழ்நாட்டில், குலாளர், செட்டியார், உடையார், வேளாளர் என்று சொல்கிறார்கள். வடநாட்டில் பிரஜாபதி என்று சொல்கிறார்கள். கும்பார், குயவர் என்று சொல்கிறார்கள். இந்த மாதிரி நாங்கள் பல பிரிவுகளில் இருக்கிறோம்.
இந்த மண்பானையை சின்னமாகக் கொடுத்ததனால், எங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்துகிறோம். இலக்காரமாகப் பேசுகிறார்கள். மண்பானை எங்களுடைய அடையாளமாக இல்லை என்றால் அதை நாங்கள் கேட்கப்போவதில்லை. எங்களுடைய குலாளர் சமுதாயம் மண்பானை செய்வதுதான் பாரம்பரியம். அந்த சின்னத்தைக் கொடுப்பது எங்களை இழிவுபடுத்துவது போல இருக்கிறது. எங்களுடைய சமுதாயத்தை இழிவாகப் பேசுகிறார்கள். அதனால்தான், யாருக்கும் தேர்தல் சின்னமாக மண்பானையை சின்னமாகக் கொடுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கையாக வைக்கிறோம்.” என்று கூறினார்.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம், இந்த முறை வேறு ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், அக்கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பறிபோனது. தற்போது நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் அளிக்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் நிரந்தரமாக சின்னம் வைத்துக்கொள்ள முடியாது. அங்கீகரிக்கப்பட்ட பிறகே நிரந்தர சின்னம் வைத்துக்கொள்ள முடியும். கடந்த தேர்தலில் ஒரு சின்னத்தைப் பெற்றிருந்தால், தேர்தல் ஆணையத்தை அணுகி அதே சின்னத்தைக் கோரலாம். அப்படி ஒரே சின்னத்தை பல கட்சிகள் கேட்கிறார்கள் என்றால், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் சின்னம் ஒதுக்கப்படுகிறது.
சீமான் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை இழந்துள்ள நிலையில், தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம், தங்கள் குலாளர் சமுதாயத்தின் அடையாளம் பானை, அதை வி.சி.க-வுக்கு மட்டுமல்ல எந்தவொரு அரசியல் கட்சிக்கோ, சுயேச்சை வேட்பாளருக்கோ தரக்கூடாது என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனால், இந்த தேர்தலில் பானை சின்னத்தைக் கேட்டிருக்கும் வி.சி.க தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.