தி.மு.க கூட்டணியில் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, வலுவான ஒரு கூட்டணி கட்சியாக இருந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட வி.சி.க 4 இடங்களில் வெற்றி பெற்றது. அதே போல, 2024 மக்களவைத் தேர்தலில் 2 இடங்களில் போட்டியிட்ட வி.சி.க 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டில் வலுவான தலித் கட்சியாக அறியப்படும் வி.சி.க-வில் புதிதாக இணைந்த லாட்டரி அதிபரின் மருமகனும் வாய்ஸ் ஆஃப் காமன் என்ற வியூகம் வகுக்கும் நிறுவனத்தின் தலைவருமான ஆதவ் அர்ஜுனாவுக்கு துணை பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. ஆதவ் அர்ஜுனா தி.மு.க கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக தி.மு.க-வை விமர்சித்துப் பேசியது சர்ச்சையான நிலையில், அவர் வி.சி.க-வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத் தொடந்து, ஆதவ் அர்ஜுனா வி.சி.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், வி.சி.க துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு, தி.மு.க கூட்டணியில் 25 இடங்களைக் கேட்க வேண்டும் என்பது என்னைப் போன்ற அடிநிலை தொண்டர்களின் விருப்பம் என்று பேசியிருப்பது தி.மு.க கூட்டணியில் விவாதமாகியுள்ளது. வன்னி அரசுவின் கருத்து குறித்து திருமாவளவன் கூறுகையில், “வன்னி அரசு கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து, கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் விரும்புவது இயல்பானதே” என்று தெரிவித்துள்ளார்.
வி.சி.க துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “என்னை போன்ற இந்த கட்சியில் அடிநிலை தொண்டர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடங்கும்போது எங்களுடைய தலைவர், யாரும் வந்து எம்.எல்.ஏ., எம்.பி ஆக வேண்டும் என்று வராதீர்கள், வாய்க்கரிசி போட்டுவிட்டு இந்த இயக்கத்திற்கு வாருங்கள் சொல்லி அழைத்தார்கள். அந்த நேரத்தில், இளைஞர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இயக்கத்தில் அணி திரண்டார்கள். பெரிய ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்காக வந்து இந்த இயக்கத்தில் சேர்ந்தார்கள். ஆனால், இன்றைக்கு தேர்தல் பாதைக்கு வந்த பிறகு இந்த இயக்கம் வந்து எப்படி வலிமையாக இருக்கிறது என்பது ஒவ்வொரு விடுதலை சிறுத்தைகளும் இந்த களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறோம். விடுதலைச் சிறுத்தைகளுக்கான வலிமை என்பது என்னை போன்ற அடிநிலைத் தொண்டர்களுக்கு என்னவென்றால், குறைந்தபட்சம் இரட்டை இலக்கத்தில் சட்டப்பேரவையில் இருக்க வேண்டும். அதற்கு கூடுதலான இடங்களைப் பெற வேண்டும் என்பது அடிநிலைத் தொண்டர்களுடைய மனநிலை. என்னுடைய விருப்பமும் அதுதான். மாவட்டத்தில் இருக்கிற எல்லா தோழர்களுடைய விருப்பமும் அதுதான்.
இந்த இயக்கம் தமிழ்நாட்டைப் பாதுகாக்கக்கூடிய, தமிழர்களுடைய உரிமைகளப் பாதுக்காக்கக்கூடிய, சனாதனத்திற்கு எதிராக இந்தியாவில் இன்றைக்கு புரட்சியாளர் அம்பேத்கருடைய கொள்கைகளை தந்தை பெரியாருடைய கொள்கைகளை பாதுகாத்துக் கொண்டிருக்கிற ஒரு பேரியக்கம். ரொம்ப வலிமையாக இயங்கிக்கொண்டிருக்கிற ஒரு இயக்கம். இந்த இயக்கததிற்கு 25 இடங்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்பது என்னைப் போன்ற அடிநிலைத் தொண்டர்களுடைய விருப்பம். ஆனால், அதை தலைவர் (திருமாவளவன்) முடிவெடுப்பார். ஆனால், எங்களுடைய விருப்பத்தை நாங்கள் கட்டாயம் சொல்வோம்.” என்று வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் ஆளும் தி.மு.க கூட்டணியில் வி.சி.க அங்கம் வகித்து வரும் நிலையில், சட்டசபை தேர்தலில் 25 இடங்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்பது என்னைப்போன்ற அடிலை தொண்டர்களுடைய விருப்பம் என்று கூறியிருப்பது தி.மு.க கூட்டணியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வன்னி அரசுவின் கருத்து குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, “இவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்று நாங்கள் முன்கூட்டியே நிபந்தனை வைத்ததில்லை. முந்தைய தேர்தல்களில் நாங்கள் இரட்டை இலக்க எண்ணிக்கையில் போட்டியிட்டிருக்கிறோம். தி.மு.க-விடம் 25 தொகுதிகள் கேட்போம் என்று என வன்னி அரசு கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் விரும்புவது இயல்பானதே” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.