தி.மு.க கூட்டணியில் வி.சி.க அங்கம் வகிக்கும்போது, வி.சி.க பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா் தி.மு.க-வை விமர்சித்துப் பேசியது சர்ச்சையான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, கட்சியில் உயர்நிலைக் குழுவில் பேசி முடிவெடுப்போம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய வி.சி.க துணை பொதுச் செயலாள்ர் ஆதவ் அர்ஜுனா, 2026-ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும், இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருமாவளவன் வராவிட்டாலும் அவருடைய மனசாட்சி இங்கேதான் இருக்கும் என்று பேசினார். மேலும், புத்தகத்தை வெளியிட்ட நடிகர் விஜய், தி.மு.க அரசை விமர்சித்துப் பேசினார். திருமாவளவன் இந்த நிகழ்ச்சிக்கு வரக்கூடாது என்று கூட்டணியி கட்சியில் இருந்து எந்த அளவுக்கு அழுத்தம் வந்திருக்கும் என்று என்னால் உணர முடிகிறது. அதே நேரத்தில், அவருடைய மனது இங்கேதான் இருக்கும் என்று கூறினார்.
அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில். வி.சி.க பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு, கூட்டணியின் தலைமைக் கட்சியான தி.மு.க-வினர் இடையே அதிருப்தியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது வி.சி.க தலைவர் திருமாவளவன் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்விகள் எழுந்தன.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவனிடம், ‘அம்பேத்கரை வைத்து அரசியல் நடக்கிறது திருமாவளவன் போகாத நிகழ்ச்சிக்கு அவருடைய கட்சி துணை பொதுச் செயலாளர் போகிறார், அப்போது கட்சி அவருடைய கட்டுப்பாட்டில் இல்லையா, புத்தகம் வெளியிடுவதற்கு தொகுத்து வழங்குவதற்கு வேறு யாருமே கிடைக்கவில்லையா என்ற விமர்சனம் எழுந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திருமாவளவன் கூறியதாவது, “அந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பங்கேற்கலாம் என்று அவருக்கு நான் என்னுடைய இசையை தெரிவித்தேன். ஆரம்பத்திலிருந்தே அந்த புத்தகத்தை உருவாக்குவதில் அவருடைய முயற்சி இருந்தது. அப்படி ஒரு புத்தகத்தை உருவாக்க வேண்டும் என்பதில் அவர் காட்டிய ஈடுபாடு எனக்கு தொடக்கத்திலிருந்தே தெரியும். விகடன் பதிப்பகத்தோடு இணைந்து அவர் அந்த புத்தகத்தை கொண்டு வந்திருக்கிற நிலையில், அவர் அந்த நிகழ்விலே பங்கேற்க வேண்டாம் என்று சொல்ல எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அவர், ‘நீங்கள் பங்கேற்காத போது நான் பங்கேற்கலாமா’ என்று என்னிடத்தில் கேட்டார். அதை உருவாக்கியதே நீங்கள் என்கிறபோது, அதை தவிர்க்க வேண்டாம், கலந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில் கவனமாக பேசுங்கள் என்று கூறியிருந்தேன். ஆகவே, அவர் என்னுடைய அனுமதியில்லாமல் போகவில்லை. அவரைப் போக வேண்டாம் என்று சொல்வது ஜனநாயகம் இல்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சி எளிய மக்களை அமைப்பாக்கி வருகிற ஒரு கட்சி. இதில் இத்தனை காலமும் நாங்கள் ஜனநாயக பூர்வமாகத்தான் எல்லா முடிவுகளையும் எடுத்திருக்கிறோம். ஒரு கட்சிக்கும் ஒவ்வொரு அணுகுமுறை உண்டு; ஒவ்வொரு கட்சி தலைமைக்கும் ஒரு பின்னணி உண்டு; இந்த கட்சிகளைப் போல விடுதலை சிறுத்தைகள் கட்சியும் முடிவெடுக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடக்கத்தில் ஒரு தலித் இயக்கம் என்ற அடையாளத்தோடு பொதுப் பணியில் ஈடுபட்டது. அரசியல் இயக்கமாக மாற நாங்கள் எடுத்துக் கொண்ட பல்வேறு முயற்சிகளில் ஒன்று, எங்கள் இயக்கத்தில் தலித் அல்லாதவர்கள், ஜனநாயக சக்திகள் வந்து சேரலாம், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பார்க்கும் இந்த கட்சியிலே முக்கியமான பொறுப்புகளில் அங்கம் வகிக்க இடம் உண்டு என்று ஒரு தீர்மானமே நிறைவேற்றினோம். அதை நாங்கள் வேலைச்சேரி தீர்மானம் என்று அழைக்கிறோம். 2007 என்று கருதுகிறேன், வேளச்சேரியில் கூடி ஒட்டுமொத்தமாக டாப் டூ பாட்டம் அமைப்பை மொத்தமாக களைத்துவிட்டு, புதிதாக எல்லோரும் பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற ஒரு அறைகூவல் விடுத்தோம். ஏராளமான ஜனநாயக சக்திகளாக இருக்கிற தலித் அல்லாதவர்கள், புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளை தந்தை பெரியாரின் கொள்கைகளை மாமேதை மார்க்ஸ் சிந்தனைகளை ஏற்றுக் கொண்டவர்கள் இந்த இயக்கத்திலே தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள். அந்த வரிசையில், ஆதவ அர்ஜுனாவும் ஒருவர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் துணைப் பொதுச் செயலாளர் பதவி 10 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதில் தலித் அல்லாதவர்களும் உண்டு. தலித் அல்லாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை எழுந்தால் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட உயர்நிலைக் குழுவிலே கலந்தாய்வு செய்து, அவர்கள் மீதான நடவடிக்கையை ஒருமுறைக்கு இருமுறை பரிசீலித்துதான் எடுப்போம். இதை நாங்கள் ஒரு நடைமுறையாகக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், தலித் அல்லாதவர்கள் கட்சிக்குள்ளே வருகின்றபோது, அவர்களுக்கு ஒருவித பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்திவிடக் கூடாது. அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது தலைமையின் பொறுப்பு, தலைமையின் கடமை. கட்சித் தேர்தலுக்கு வராததற்கு முன்பு, நாங்கள் மையக்குழுவிலே விவாதித்துதான் நாங்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம். இன்றைக்கும் கட்சி பைலா துணை விதிகள் அப்படியேதான் இருக்கின்றன. இன்னும் நாங்கள் அதைக்கூட மாற்றவில்லை. ஆகவே துணைச் செயலாளர் என்கிற அளவிலான பொறுப்பு, ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகிறபொழுது, அதிலும் தலித் அல்லாதவர்கள் அந்த போறுப்பிலே இருந்து ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகிறபொழுது தலைவர், பொதுச் செயலாளர் உள்ளடங்கிய முன்னணி தோழர்கள் கலந்தாய்வு செய்துதான் எந்த முடிவையும் எடுப்போம், அது எங்கள் கட்சிக்கு உள்ள நடைமுறை.
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க ஆகிய கட்சிகளில் இருப்பதைப் போல, நாங்கள் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது, அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது ஏற்புடையது அல்ல. நாங்கள் பேசியிருக்கிறோம் முடிவை அறிவிப்போம்.” என்று திருமாவளவன் சஸ்பென்ஸ் வைத்துக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“