மலேசியாவில் நடைபெற்று வரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வி.சி.க தலைவர் திருமாவளவனின் தமிழ்த் தேசியம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்ததால் மாநாட்டில் பரபரப்பு நிலவியது.
மலேசியாவில் உள்ள உள்ள மலாயா பல்கலைக்கழக வளாகத்தில், 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 21, 22, 23 தேதிகளில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், ஜூலை 21-ம் தேதி முதல் நாள் நடைபெற்ற தொடக்க விழாவில், இந்தியாவில் இருந்து வி.சி.க தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி-யுமான திருமாவளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், இந்த மாநாட்டில், மலேசிய நாட்டு அமைச்சர் சரஸ்வதி, மலேசிய இந்திய காங்கிரஸ் தேசிய துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மலேசியாவில் நடைபெறும் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருமாவளவன், தமிழ்த் தேசியம் பற்றி பேசினார். அப்போது, சிலர் திருமாவளவன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமையில் பேசி குரல் எழுப்பினர். இதனால், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
திருமாவளவன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை விழா ஏற்பாட்டாளர்கள் சமாதானப்படுத்த முற்பட்டனர். பின்னர், திருமாவளவன் தனது உரையை முடித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
மலேசியாவில் நடைபெற்ற 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது: “தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம்.” என்று கூறினார்.
மேலும், “மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான். அவற்றைக் கடந்து தேசிய இனம் என்கிற அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மத அடையாளத்தைவிட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது.” என்று திருமாவளவன் பேசினார்.
திருமாவளவன் இந்த மாநாட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு, மலேசியாவில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மலேசிய தமிழர்கள் உடன் கலந்துரையாடினார். பின்னர், மலேசிய தி.மு.க சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவிலும் பங்கேற்று திருமாவளவன் பேசினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.