திருமுருகன் காந்தி கைது : மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கைது செய்வது தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியும், வேறு ஒரு வழக்கில் தமிழக காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி, கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி ஐநா மனித உரிமை மாநாட்டில் பேசிய போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து பேசியிருந்தார். இதனையடுத்து, திருமுருகன் காந்தி மீது தமிழக போலீசார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்ததுடன், அவரைக் கைது செய்வது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அளித்தனர்.
அதன்படி பெங்களுரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைக்க வேண்டும் என மனு அளித்தனர். அப்போது திருமுருகன் காந்தி தரப்பில் வக்கல் பெரியசாமி ஆஜராகி, 'தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த ஒன்றுதான் அதைத்தான் அவர் பேசி உள்ளார். தேசதுரோக வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப கூடாது' என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஐநாவில் திருமுருகன் காந்தி என்ன பேசினாரோ அந்த கருத்துக்களை எழுத்து வடிவில் நீதிபதியிடம் தந்தார். அதனை படித்து பார்த்த நீதிபதி, "இதில் எந்த தேசதுரோகமும் இல்லையே? எந்த அடிப்படையில் இப்படி ஒரு வழக்கை பதிவு செய்துள்ளீர்கள்? ஐநாவில் பேசியதற்கு இங்கே எப்படி வழக்கு போடுவது? எந்த அடிப்படையில் அவரை சிறைப்பது?" என்று சரமாரியாக அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார். இதனையடுத்து திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க மறுத்த நீதிபதி, 24 மணி நேரம் விசாரிக்க மட்டும் அனுமதி தந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு அனுமதியின்றி பேரணியாகச் சென்றதாகத் திருமுருகன் காந்தி மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழக்கில் அவரை மீண்டும் போலீசார் கைது செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மற்றொரு நீதிபதியான அங்காளபரமேஸ்வரி முன்பு ஆஜர்படுத்தினர். அவர் திருமுருகன் காந்தியை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து திருமுருகன் காந்தியை போலீஸார் வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.