Advertisment

காசி ஆனந்தன், பழ. நெடுமாறன் மேடையில் அண்ணாமலை: சர்ச்சையில் முள்ளிவாய்க்கால் கருத்தரங்கு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கு அழைப்பிதழில், கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன் ஆகியோரின் பெயருடன் பாஜக தலைவர் அண்ணாமலை பெயரும் இடம்பெற்றுள்ளதற்கு மே 17 இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளதால் சர்ச்சையாகி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காசி ஆனந்தன், பழ. நெடுமாறன் மேடையில் அண்ணாமலை: சர்ச்சையில் முள்ளிவாய்க்கால் கருத்தரங்கு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கு அழைப்பிதழில், கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன் ஆகியோரின் பெயருடன் பாஜக தலைவர் அண்ணாமலை பெயரும் இடம்பெற்றுள்ளதற்கு மே 17 இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளதால் சர்ச்சையாகி உள்ளது.

Advertisment

இலங்கையில், 2009 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த துயர நிகழ்வைக் குறிப்பிடும் விதமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கு மே 14 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கின் அழைப்பிதழில், கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன் ஆகியோரின் பெயர்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலையின் பெயரும் இடம்பெற்றுள்ளதற்கு மே 17 இயக்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், இந்த கருத்தரங்கில் இருந்து பாஜக வெளியேற்றப்படாவிட்டால், தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் மே 17 இயக்கம் பங்கேற்காது என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுக்கொலை நினைவேந்தல் கருத்தரங்கில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயர் இடம்பெற்றுள்ளதற்கு மே 17 இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சர்ச்சையாகி உள்ளது.

இது குறித்து மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வரும் 14.05. 2022 சனிக்கிழமை மாலை சென்னை தியாகராய நகரில், உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கில், பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அழைக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பாக கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில், நடைபெறும் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுவதற்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியிடம் ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. அதே வேளை, நிகழ்வில் பங்கேற்கும் பிற அழைப்பாளர்கள் குறித்த தகவல்கள் பகிரப்படவில்லை. அழைப்பிதழ் தரப்படாத நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் அழைப்பிதழின் பங்கேற்பாளர்கள் பட்டியலில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழீழ விடுதலைக்காக நீண்டகாலமாக பல்வேறு வகையில் பங்களிப்பு செய்த பல அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களின் பெயர்களோடு தமிழின விரோதமாக செயல்படும் பாஜகவின் மாநிலத் தலைவர் பெயரும் நினைவேந்தல் உரையாற்றுபவர்கள் பட்டியலில் அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டின் உரிமைக்கும் தமிழர்களின் வாழ்வாதாரம், பண்பாடு, தமிழ்மொழி ஆகியவற்றிற்கு எதிரான தமிழின விரோத அமைப்பே ஆர்.எஸ்.எஸ். - பாஜக. தமிழர்களை சாதியாகவும் மதமாகவும் பிரித்து கலவரத்தை தூண்டி ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்ட முயலும் பாஜக தமிழர்களின் பரம எதிரி. இவர்கள் இக்கருத்தரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டால் மட்டுமே எங்களால் மேடையேற இயலும். ஆகவே, பாஜக பிரதிநிதிகள் பங்கேற்கும் பட்சத்தில் இக்கருத்தரங்கில் எங்களால் பங்கேற்க இயலாது. இக்காரணங்களால், இக்கருத்தரங்கில் பாஜக பங்கேற்பதை வன்மையாக மே பதினேழு இயக்கம் கண்டிக்கிறது. பாஜக இக்கருத்தரங்கிலிருந்து வெளியேற்றப்படாவிடில் மே பதினேழு இயக்கம் இக்கருத்தரங்கையும் புறக்கணிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

பாஜக பங்கேற்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்வார்களெனில் இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கப்போவதில்லை என்பதனை உறுதிபட அறிவிக்கின்றோம். இது போன்ற தமிழின விரோத செயல் தமிழ் மண்ணில் நடைபெறுவது வரலாற்றுப் பிழையாக அமையும். தமிழ்நாட்டின் தமிழ் ஆதரவு தளத்தை தளரச் செய்யும் மதவாத பாசிச ஆற்றல்களின் பங்கேற்பை மே பதினேழு இயக்கம் என்றுமே ஆதரிக்காது. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று அங்கீகரிக்காத எந்தவொரு கட்சி, இயக்கத்துடன் இயங்குவது தமிழின விரோதமானது. இந்நிகழ்வில் பங்கேற்கும் தோழமை அமைப்புகளும் இவ்வாறான நிலைப்படுகளை எடுக்கும் என உறுதியாக நம்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுக்கொலை நினைவேந்தல் கருத்தரங்கு அழைப்பிதழில், விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார், திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், தபெதிக பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் வந்தியத்தேவன் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Bjp Annamalai Thirumurugan Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment