அமரன் படத்தில் ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களையும் எதிரிகளாக சித்தரிப்பது கண்டத்திற்குரியது என மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, ”அமரன் படத்தில் ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களையும் எதிரிகளாக சித்தரிப்பது கண்டத்திற்குரியது. தேசிய இனமக்களின் உரிமைகளை கொச்சைபடுத்துவதாகவும், ஒருதரப்பு நியாயத்தை மட்டும் பேசுவதாகவும் படம் அமைந்துள்ளது. எனவே காஷ்மீர் மக்களுக்கு எதிரான அரசியலை கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. இதற்கு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தான் பதில் சொல்ல வேண்டும்.
காஷ்மீரில் போராடிய யாஷின் மாலிக்கை கூட்டி வந்து கூட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான் படத்தை பாராட்டுவது கொடுமையாக உள்ளது.
படத்தில் போருக்கு செல்லும் முன் முகுந்த் வரதராஜன் ஜெய் பஜ்ரங் பலி என்று சொல்வது போல் உள்ளது. இந்திய ராணுவத்தில் இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ் முழக்கமான ஜெய் பஜ்ரங் பலியை எப்போது முழுக்கமிட்டார்கள். ராணுவத்தில் பல்வேறு மதத்தினர் இருக்கின்றனர். அங்கு ஜெய் பஜ்ரங் பலி என சொல்வதில்லை. இது ராணுவத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான படம்.
கமல்ஹாசன் இஸ்லாமியர்கள் மீது வெறுப்புக் கொண்டவர். வேறு ஒரு கதையை இந்துத்துவா அம்சத்துடன் எடுத்திருக்கிறார்கள். கமல்ஹாசன் ஒப்புதல் இல்லாமல் எதுவும் நடந்திருக்காது.
தமிழகம் சார்ந்த கதை எடுக்க வேறு நிகழ்வுகள் கிடைக்கவில்லையா? மீனவர் மரணத்தையும், அவர் மனைவி படும் துன்பத்தையும் படமாக எடுக்கலாமே? கமல்ஹாசன் இதுபோன்ற படங்களை தான் எடுக்கிறார். இல்லையென்றால் சாதியை தூண்டும் படங்களை எடுக்கிறார்.” இவ்வாறு திருமுருகன் காந்தி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“