திருமுருகன் காந்தி விடுதலை : வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். 52 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு, திருமுருகன் காந்தி இப்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை ஆகிய தமிழகப் பிரச்னைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசினார். இதைத் தொடர்ந்து, நார்வேயிலிருந்து கடந்த 9 ஆம் தேதி பெங்களூரு விமான நிலையம் வந்த அவரை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாகக் கூறி காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட திருமுருகன் காந்தி, தனிமைச்சிறை, சுகாதாரமில்லாத உணவு போன்றவற்றால் உடல் நிலை நலிவடைந்து, கடந்த 24-ம் தேதி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 3 மணி நேரம் பரிசோதனைக்குப் பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மீண்டும் குடல்புண், தலைவலி போன்றவற்றால் அவதியுற்ற திருமுருகன் காந்தி, கடந்த 29-ம் தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னை எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றங்கள் திருமுருகன் காந்திக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளன. திருமுருகன் காந்தி மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளுக்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் பிணை பெறப்பட்டு, அந்த ஆணை வேலூர் சிறையில் அதிகாரிகளிடமும் வழங்கப்பட்டது.
இதற்கிடையே, இன்று காலை வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த திருமுருகன் காந்தி மருத்துவமனையிலிருந்து மதியம் 1 மணியளவில் சிறைக்கு அழைத்துவரப்பட்டார்.
இதையடுத்து, இன்று மாலை திருமுருகன் காந்தி சிறையிலிருந்து ரிலீஸ் செய்யப்பட்டார்.